வாரத்தின் முதல் நாளான இன்று பங்குச்சந்தைகள் சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன. எல்.சி.சி. யின்(Life Insurance Corporation of India (LIC)) சந்தை மதிப்பு 5 லட்சம் கோடி ரூபாய்க்கு கீழ் சரிவடைந்தது. வரலாறு காணாத அளவில் எல்.ஐ.சி.யின் ஒரு பங்கின் மதிப்பு ரூ.800 க்கு கீழே இருந்தது முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதன் பங்குகள் 1.64% சதவீதம் குறைந்து ரூ.787.10 ஆக இருந்தது. இன்று ஒரே நாளில் எல்.ஐ.சி. பங்குகள் ரூ.14 வரை குறைந்து ₹786.20க்கு விற்பனையாகி வருகிறது. ரூ.949 ஆக இதன் மதிப்பு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், எல்.ஐ.சி. பங்கின் விலை ரூ.163 வரை சரிந்தது!
பெருவாரியான முதலீட்டாளர்கள் எல்.ஐ.சி.யின் ஐ.பி.ஓ.வை பதிவு செய்து பங்குகளை வாங்கினர். எல்.ஐ.சி. பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட அன்றைய தினமே கடுமையான சரிவுக்குள்ளானது. இதனால் முதல்நாளே முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களிலும் பங்கு வர்த்தகத்தில் எல்.ஐ.சி.யின் பங்குகள் விலை குறைந்துகொண்டே வந்தது.
எல்.ஐ.சி. யின் பங்கு மதிப்பு குறைந்தால், பங்கு ஒன்று ரூ.889 விலையில் வாங்கிய எல்.ஐ.சி. பாலிசிதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.103 வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. ரூ.6 லட்சம் கோடி சந்தை மதிப்புடன் பங்குசந்தையில் பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.யின் தற்போதைய மதிப்பு ரூ.4,97,113 கோடியாக பெரும் வீழ்ச்சி அடைந்துள்ளது. எல்.ஐ.சி. நிறுவனத்தின் சந்தை மதிப்பு வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ரூ.5 லட்சம் கோடிக்கு கீழ் சரிந்திருப்பதால் பங்குகளை வாங்கியவர்களின் நிலை கேள்விக்குள்ளாகியுள்ளது. மேலும், இந்தியாவிலேயே 7-வது பெரு நிறுவனமான எல்.ஐ.சி. யின் பங்கு வீழ்ச்சி பங்குச்சந்தையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்