இஸ்ரேல் - ஹமாஸ் போர் எதிரொலியாக சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 5 % அதிகரித்துள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் படை இடையேயான போர் சர்வதேச அளவில் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இரு படை பிரிவுகளிலும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளில் ஹமாஸ் படையினர் 5000க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த போர் எதிரொலியாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் 5% உயர்ந்துள்ளது. அக்டோபர் 6ஆம் தேதி 84.58 டாலராக இருந்த பிரெண்ட் கச்சா எண்ணெய் இன்று 89 டாலாராக உயர்ந்துள்ளது.
வெடித்த போர்:
முழு உலகிற்கும் மேற்கு ஆசியாவின் பகுதி மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் உலகின் கச்சா எண்ணெய் தேவையில் மூன்றில் ஒரு பங்கு இப்பகுதியில் இருந்து உலகம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சனிக்கிழமை காலை இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியதை அடுத்து, மேற்கு ஆசியாவில் நிலைமை தலைகீழாக திரும்பியுள்ளது. யாரும் கனவில் கூட எதிர்பார்க்காத வகையில் இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கர தாக்குதலை தொடுத்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் இஸ்ரேலின் வரலாற்றில் நடந்த மிக பயங்கரமான தாக்குதல் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஹமாஸ் தாக்குதலில் ஏராளமான பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர், பலர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ளனர். அதன் பிறகு இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக போரை அறிவித்தது. உலக நாடுகள் இதில் தலையிட்டாலும் இந்த போர் முடிவுக்கு வருவதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை.
அதிகரித்த கச்சா எண்ணெய் விலை:
ப்ளூம்பெர்க் செய்தியின்படி, மேற்கு ஆசியா பகுதியான இஸ்ரேல் - பாலஸ்தீனில் போர் வெடித்ததால், கச்சா எண்ணெய் விலை 5 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மேற்கு டெக்சாஸில் ஒரு பீப்பாய்க்கு $ 87 ஐ எட்டியுள்ளது. ராய்ட்டர்ஸின் செய்தியின்படி, ப்ரெண்ட் கச்சா எண்ணெய்யில் $ 4.18 அல்லது 4.99 சதவீதம் அதிகரித்து ஒரு பீப்பாய்க்கு $ 88.76 என்று எட்டியுள்ளது. அதேசமயம் WTI 5.11 சதவீதம் அதிகரித்து ஒரு பீப்பாய்க்கு $87.02 ஆக உள்ளது.
பெரிய வீழ்ச்சி:
கச்சா எண்ணெய் விலை மீண்டும் குறையத் தொடங்கிய நேரத்தில் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரத்தில், ப்ரெண்ட் கச்சாவில் சுமார் 11 சதவீதமும், மேற்கு டெக்சாஸ் இடைநிலை (WTI)ள் சுமார் 8 சதவீதமும் சரிவு ஏற்பட்டது. மார்ச் மாதத்துக்குப் பிறகு ஒரே வாரத்தில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட மிகப்பெரிய வீழ்ச்சி இதுவாகும். இருப்பினும், தற்போது கச்சா எண்ணெய் விலை உயர்வு மீண்டும் திரும்பியுள்ளது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலால் ஈரானுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் ஈரான் உளவுத்துறைக்கு நேரடி தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த தாக்குதலுக்கு ஈரான் மீது இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. இஸ்ரேல் மீதான தாக்குதலை அடுத்து ஈரான் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த தாக்குதலுக்கு ஈரான் ஹமாஸை பாராட்டியுள்ளது. இப்போது இதுபோன்ற சூழ்நிலையில் ஈரானின் சப்ளை மீண்டும் நிறுத்தப்படலாம் என்றும், இதனால் கச்சா எண்ணெய் விலை மேலும் உயரலாம் என்றும் தெரிகிறது.