நேற்று முதல் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது சொமாட்டோ. காரணம், அந்நிறுவன தலைவர் அறிவித்த ஒரு அறிவிப்பு. நாட்டிலேயே முதன்முறையாக அதிகவேக உணவு டெலிவரியை சொமாட்டோ (Zomato) நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. இதற்கான அறிவிப்பை அந்த நிறுவனத்தின் தலைவர் திபீந்தர் கோயல் நேற்று அறிவித்திருந்தார். அதன்படி இனி உணவு 10 நிமிடத்தில் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து ட்விட்டரில் அறிவித்த திபிந்தர் கோயல், ‘உணவின் தரம் 10/10, டெலிவரி பார்ட்னரின் பாதுகாப்பு 10/10 உணவு டெலிவரி நேரமும் 10 நிமிடம்’ எனக் குறிப்பிட்டார். ஒரு பக்கம் பலருக்கும் ஆச்சரியம் என்றாலும் இந்த அறிவிப்புக்கு தொடக்கத்தில் பலரும் பாராட்டுகளை தெரிவித்தனர். அதேவேளையில் கிண்டலுக்கும் உள்ளானது இந்த அறிவிப்பு. பலரும் மீம்களை அள்ளித்தூவி இந்த அறிவிப்பை கிண்டலடித்தனர். கிண்டல் ஒரு பக்கம் இருந்தாலும் இந்த அறிவிப்பால் உணவு டெலிவரி செய்யும் நபர்கள் மேலும் மன அழுத்தத்துக்கு உள்ளாவார்களா என்ற கோணத்திலும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.




வேகம் என்பதால் அழுத்தம்.. 


டெலிவரி பார்ட்னரின் பாதுகாப்பு 10/10 என்று சொமாட்டோ ஓனர் அறிவித்தாலும் களத்தில் இது சாத்தியமா எனப் பார்க்க வேண்டும் என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், இந்த குறிப்பிட்ட நேர டார்கெட் என்பது உணவு டெலிவரி செய்பவர்களுக்கு மிகப்பெரிய மன அழுத்தத்தை கொடுக்கும். குறிப்பிட்ட நேரத்துக்குள் உணவு என்ற புது அம்சத்தால் உணவு டெலிவரி செய்பவர்களும் பறபறப்பார்கள். உணவகத்தில் தாமதம் செய்யப்படுவது, போக்குவரத்து நெரிசல், சரியான முகவரியை கண்டுபிடிப்பது போன்ற பல சிக்கல்களை கடந்து 10 நிமிடத்துக்குள் சாப்பாடு கொடுப்பது சாத்தியமா என்பதை அந்நிறுவனம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். 


இதில் குழப்பம் என்றால் உணவு ஆர்டர் செய்பவர்கள் டெலிவரி செய்யும் நபர்களிடத்தில் கோபத்தைக் காட்டுவார்கள்.  போன்ற பல சிக்கல்கள் இருப்பதாக சிலர் பதிவிட்டுள்ளனர். இந்தியாவில் பரபரப்பான சாலைகளும், நெருக்கமான வீடுகளும் உணவு டெலிவரியை சரியான நேரத்துக்குள் கொண்டு செல்ல முடியுமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இது சொமாட்டோவுக்கு சவால்தான் என இணையவாசிகள் குறிப்பிட்டுள்ளனர்.




என்ன சொல்கிறார் நிறுவனர்..?


மீம்ஸ், சந்தேகம் என சொமாட்டோவை பார்த்து பல கேள்விகள் எழுப்பப்பட்ட நிலையில் இது குறித்து பொதுவான சில விளக்கத்தையும் சொமாட்டோ நிறுவனர் குறிப்பிட்டுள்ளார்.  இது குறித்து இன்று காலை அவர் வெளியிட்டிருக்கும் பதிவில் “குறிப்பிட்ட சில பகுதிகளிலும், குறிப்பிட்ட சில உணவுகளை மட்டுமே 10 நிமிடத்தில் டெலிவரி செய்ய இருக்கிறோம். அதிவேகமாக சமைக்கப்படும் உணவுகள் மட்டுமே இந்த திட்டத்தில்வரும்.  10 நிமிடத்திற்குள் டெலிவரி செய்யவில்லை என்றால் டெலிவரி பார்ட்னர்களுக்கு அபராதம் விதிக்கப்படாது. சரியான நேரத்தில் டெலிவரி செய்பவர்களுக்கு கூடுதல் சம்பளம் தரப்பட மாட்டாது. வாடிக்கையாளர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய உணவகங்களை நாங்களே அருகில் அமைப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.






ஏட்டில் எழுதி திட்டமிட்டுள்ளது சொமாட்டோ. களத்தில் இதனை நடைமுறைக்கு கொண்டுவரும்போது சாதிக்குமா சறுக்குமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.