Indias External Debt: நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டின் முடிவில், இந்தியாவின் வெளிநாட்டு கடன் 711.8 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது.


ரூ.60 லட்சம் கோடி வெளிநாட்டு கடன்


இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் செப்டம்பர் 2024 இறுதிக்குள் 711.8 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது. அதாவது 60 லட்சம் கோடி ரூபாயை கடந்துள்ளது. இது ஜூன் 2024 இல் 682.2 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்ததை காட்டிலும், 4.3% அதிகம் என நிதி அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. ஜூன் மற்றும் செப்டம்பர் 2024 க்கு இடையில் வெளிநாட்டுக் கடன் $29.6 பில்லியனாக உயர்ந்துள்ளது என்று இந்தியாவின் காலாண்டு வெளிநாட்டுக் கடன் அறிக்கை விளக்கியுள்ளது. இது செப்டம்பர் 2023 இன் இறுதியில் பதிவு செய்யப்பட்ட 637.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற கடன் நிலையில் இருந்து குறிப்பிடத்தக்க உயர்வைக் குறிக்கிறது.



ஜிடிபி விகிதம்:


 ஜூன் 2024 இல் 18.8% ஆக இருந்த வெளிநாட்டுக் கடன் மற்றும் GDP விகிதம் செப்டம்பர் 2024 இல் 19.4% ஆக அதிகரித்துள்ளது. டாலர் மதிப்பிலான கடன் இந்தியாவின் வெளிநாட்டுக் கடனில் மிகப்பெரிய பங்கைக் கொண்டுள்ளது. செப்டம்பர் 2024 நிலவரப்படி, நாட்டின் வெளிநாட்டுக் கடனில், 53.4 சதவிகிதம் டலார் மதிப்பிலானதாகும். இதைத் தொடர்ந்து இந்திய ரூபாய் மதிப்பிலான கடன் (31.2%), ஜப்பானிய யென் (6.6%), சிறப்பு வரைதல் உரிமைகள் (5.0%) மற்றும் யூரோ (3.0%) அடங்கும். பொது அரசு மற்றும் அரச சார்பற்ற துறைகள் ஆகிய இரண்டும், இந்தக் காலகட்டத்தில் நிலுவையில் உள்ள வெளிநாட்டுக் கடன்களில் அதிகரிப்பைக் கண்டன.


கடன் விவரங்கள்:


 33.7% என்ற அளவில் கடனுதவிகள் வெளிநாட்டுக் கடனில் மிகப்பெரிய பங்கை உருவாக்கியுள்ளது. அதைத் தொடர்ந்து நாணயம் மற்றும் வைப்புத்தொகைகள் (23.1%), வர்த்தக கடன் மற்றும் முன்பணம் (18.3%), மற்றும் கடன் பத்திரங்கள் (17.2%). கடன் சேவை (அசல் மற்றும் வட்டி செலுத்துதல் உட்பட) செப்டம்பர் 2024 நிலவரப்படி நடப்பு கடனில் 6.7% ஆகும். இது ஜூன் 2024 இல் பதிவு செய்யப்பட்ட 6.6% ஐ விட சற்று அதிகமாகும்.


அதிகரிக்கும் வெளிநாட்டு கடன்:


1991ம் ஆண்டு 83.8 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த இந்தியாவின் வெளிநாட்டுக் கடன், 2014ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி முடிவடையும்போது 446.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆக நிலைகொண்டது. தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையிலான அரசு நடைபெற்று வரும் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன், 265.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் உயர்ந்து 711.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற நிலையை எட்டியுள்ளது.


மொத்தக் கடன் விவரம்:


கடந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றிருந்த தகவல்களின்படி, மார்ச் 31, 2024 வரை இந்தியாவின் மொத்தக் கடன் 168 லட்சத்து 72 ஆயிரத்து 554 கோடி ரூபாய் ஆகும். அதேநேரம், நடப்பு நிதியாண்டு முடிவடையும் மார்ச் 31, 2025ன் போது, இந்தியாவின் மொத்தக் கடன் 181 லட்சத்து 68 ஆயிரத்து 456 கோடி ரூபாயாக இருக்கும் என மத்திய அரசின் பட்ஜெட்டில் கணிக்கப்பட்டுள்ளது.