இந்திய ரயில்வே.. இதுதான் இந்திய தேசத்தின் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனம். இந்தியாவின் வருமானத்திற்கு மிகப் பெரிய தூண். இந்தத் துறையின் வருமானம் பயணியர் வகையறாவில் மட்டும் 92% அதிகரித்துள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேபோல் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அக்டோபர் 8ஆம் தேதி வரையிலான வருவாய் ரூ.33 ஆயிரத்து 476 கோடி என்றளவில் உள்ளது. இந்திய ரயில்வே துறையின் வருவாய் வருடாந்திர அடிப்படையில் அதிகரித்துள்ளது நல்லதொரு முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது.
ரயில்களில் முன்பதிவு செய்யாத பெட்டிகளில் பயணிக்கும் பயணியர் வகையில் வருமானம் 197% அதிகரித்துள்ளது. முன்பதிவு செய்த பெட்டியில் பயணிப்போரின் எண்ணிக்கை 24% அதிகரித்துள்ளது. ஏப்ரல் 1 ஆம் தேதி 2022 முதல் அக்டோபர் 8 2022 வரையிலான ரயில்வே வருவாய் ரூ.33,476 கோடி என்றளவில் உள்ளது. இதுவே கடந்த ஆண்டு ரூ.17,394 கோடி என்றளவில் இருந்தது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், கடந்த ஏப் 1 முதல் அக்டோபர் 8 வரை முன்பதிவு செய்த பெட்டிகளில் பயணித்தோர் எண்ணிக்கை 42.89 கோடி என்றளவில் உள்ளது. இதுவே அதற்கு முந்தைய ஆண்டு இதே ஏப்., அக்டோபர் காலக்கட்டத்தில் பயணிகளின் எண்ணிக்கை 34.56 கோடியாக மட்டுமே இருந்தது. எனவே இது கடந்த ஆண்டைவிட 24% அதிகரித்துள்ளது.
வருவாய் ரீதியாக பார்த்தோம் என்றால் முன்பதிவு செய்த பெட்டியில் பயணித்தோர் வாயிலாக கடந்த ஏப்ரல் 1 முதல் அக்டோபர் 8 வரை இந்திய ரயில்வே துறைக்கு ரூ.26,961 கோடி வருவாய் கிட்டியுள்ளது. இது 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் அக்டோபர் 8 வரையிலான காலகட்டத்துடன் ஒப்பிட்டால் 65% அதிகமாகும். அப்போது இந்திய ரயில்வேக்கு இந்த ரீதியிலான வருவாய் ரூ.16, 307 என்றளவில் தான் இருந்தது.
முன்பதிவு செய்யாத பெட்டியில் பயணித்தோர் வகையறாவில் பார்த்தோமென்றால், கடந்த ஏப்ரல் 1 முதல் அக்டோபர் 8 2022 காலகட்டத்தில் முன்பதிவு செய்யாத பெட்டியில் பயணித்தோர் எண்ணிக்கை 268.56 கோடி என்றளவில் இருந்தது. கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் சராசரியாக முன்பதிவு செய்யாத பெட்டிகளில் பயணித்தோர் எண்ணிக்கை 90.57 கோடி என்றளவில் இருந்தது. அதாவது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது பயணிகளின் எண்ணிக்கை 197% அதிகரித்துள்ளது. வருவாய் ரீதியாக பார்த்தோம் என்றால் 2022 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அக்டோபர் 8ஆம் தேதி வரை முன்பதிவு செய்யாத பெட்டியில் பயணித்த பயணிகள் வாயிலாக இந்திய ரயில்வே துறைக்கு ரூ.6,515 கோடி வருவாய் கிட்டியுள்ளது. இது கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் ஈட்டப்பட்ட ரூ.1086 கோடியுடன் ஒப்பிடும்போது 500% அதிகமாகும்.