அமெரிக்காவின் பிரபல ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் மோசடி, போலியான பெயரில் நிறுவனங்களை நடத்துதல், உறவினர்கள் மூலம் போலியான பரிவர்த்தனை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை வைத்து வெளியிட்ட அறிக்கை, இந்திய பங்குச் சந்தையில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
பங்கு சந்தை சரிவு:
இந்த அறிக்கை வெளியானதை தொடர்ந்து, கடந்த புதன்கிழமையைப் போலவே, இன்றும் பங்குச் சந்தையில் பல நிறுவனங்கள், பல வங்கிகளின் பங்குகள் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தன. குறிப்பாக, அதானி குழுமத்தின் பங்குகள் சராசரியாக 20 சதவீத அளவிற்கு சரிவைச் சந்தித்தன. அதானி குழுமம் மட்டுமல்ல, ஸ்டேட் பாங்க், ஐசிஐசிஐ உள்ளிட்ட சில வங்கிகளின் பங்குகளும் பெரும் சரிவைச் சந்தித்தன.
வழக்கு தொடர முடிவு:
இந்நிலையில், ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டை வன்மையாக மறுத்துள்ள அதானி குழுமம், எமது நிறுவன பங்குகளை சரிவடைய செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
வழக்கை எதிர்கொள்ள தயார்:
இதற்கு கருத்து தெரிவித்துள்ள ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம், வழக்கை எதிர்கொள்ள தயாராக உள்ளதாகவும், இரண்டு வருடங்கள் தொடர் ஆய்வுக்கு பின்னரே, இந்த அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், எங்களது தரப்பு சார்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு, அந்த நிறுவனம், எந்த பதிலும் அளிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், அந்த நிறுவனமானது வழக்கு தொடரப்படுமாயின், நாங்கள் குறிப்பிட்ட கேள்விகளை முன்வைக்க உள்ளோம் என்றும் ஹிண்டன்பர்க் தெரிவித்துள்ளது.