தங்கத்தின் விலை அன்றாடம் மாற்றியமைக்கப்படும் நிலையில், கடந்த சில நாட்களாக தொடர் விலை உயர்வை சந்தித்து, புதிய உச்சங்களை தொட்டு வருகிறது. அந்த வகையில் இன்றும் சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 87 ஆயிரம் ரூபாயை நெருங்கியுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
புதிய உச்சங்களை தொடும் தங்கத்தின் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தினசரி முறையில் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி கடந்த சில நாட்களில் புதிய உச்ச விலைகளை தங்கம் தொட்டு வருகிறது. கடந்த 25-ம் தேதி ஒரு கிராம் 10,510 ரூபாயாகவும், சவரன் 84,080 ரூபாயாகவும் இருந்த தங்கத்தின் விலை, 26-ம் தேதி விலை உயர்ந்து, கிராம் 10,550 ரூபாய்க்கு சென்றது. ஒரு சவரன் 84,400 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, 27-ம் தேதி மீண்டும் விலை உயர்ந்து, ஒரு கிராம் 10,640 ரூபாய்க்கும், ஒரு சவரன் விலை 85 ஆயிரத்தை கடந்து, 85,120 ரூபாய் என உச்சத்தை அடைந்தது. பின்னர், 28-ம் தேதி அதே விலையில் நீடித்தது.
இந்நிலையில், 29-ம் தேதியான நேற்று இரு முறை விலை உயர்ந்து, ஒரு கிராம் 10,770 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் புதிய உச்ச விலையாக 86 ஆயிரத்தை கடந்து, 86,160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த சூழலில், இன்று மேலும் உயர்ந்து, வரலாறு காணாத புதிய உச்ச விலையை எட்டியுள்ளது.
தங்கத்தின் இன்றைய விலை என்ன.?
அதன்படி, இன்று காலை தங்கம் சவரனுக்கு 720 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. இதையடுத்து, ஒரு கிராம் 10,860 ரூபாய் என்ற புதிய உச்ச விலையிலும், ஒரு சவரன் தங்கம் 86,880 ரூபாய் என்ற வரலாறு காணாத புதிய உச்ச விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
இதனால், பொதுமக்கள் அதிர்ச்சியும், கவலையும் அடைந்துள்ளனர். இப்படியே விலை ஏறிக்கொண்டிருந்தால், இனி தங்கம் வாங்குவதே கனவாகிவிடும் என்று அவர்கள் கவலையடைந்துள்ளனர்.
வெள்ளி விலையும் புதிய உச்சம்
தங்கத்துடன் போட்டி போட்டுக்கொண்டு, வெள்ளி விலையும் புதிய உச்சத்தை அடைந்துள்ளது. கடந்த 25-ம் தேதி ஒரு கிராம் 150 ரூபாயாக இருந்த வெள்ளி, 26-ம் தேதி 3 ரூபாய் உயர்ந்து, கிராம் 153 ரூபாயாக ஆனது.
தொடர்ந்து, 27-ம் தேதி அதிரடியாக கிராமிற்கு 6 ரூபாய் உயர்ந்து, புதிய உச்ச விலையாக 159 ரூபாயை எட்டியது. 28-ம் தேதி அதே விலையில் நீடித்த நிலையி, 29-ம் தேதியான நேற்று மீண்டும் விலை உயர்ந்து, ஒரு கிராம் 160 ரூபாக்கு விற்கப்பட்டது.
இந்நிலையில், இன்று மீண்டும் ஒரு ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 161 ரூபாய் என்ற புதிய உச்ச விலையை எட்டியுள்ளது. அதன்படி, ஒரு கிலோ பார் வெள்ளி 1 லட்சத்து 61 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது.