சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 2,200 ரூபாய் உயர்ந்து வரலாறு காணாத உச்ச விலையை அடைந்துள்ளதால், நடுத்தர மக்கள் இனி தங்கமே வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தாறுமாறாக உயர்ந்துவரும் தங்கத்தின் விலை
தங்கத்தின் விலை சமீப காலமாக அதிரடியாக உயர்ந்து வருகிறது. கடந்த 16-ம் தேதி சவரன் 70 ஆயிரத்தை கடந்து, 70,520 ரூபாயாக உயந்தது. ஒரு கிராம் 8,815 ரூபாயாக இருந்தது. 17-ம் தேதி அதிரடியாக கிராமிற்கு 105 ரூபாய் உயர்ந்து கிராம் 8,920 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு சரவன் 840 ரூபாய் உயர்ந்து 71 ஆயிரத்தை கடந்து 71,360 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
18-ம் தேதி கிராமிற்கு 25 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 8,945 ரூபாய்க்கும், சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து 71,560 ரூபாய்க்கும் விற்பனையானது. பின்னர் 19, 20 தேதிகளில் அதே விலையில் நீடித்த தங்கம், 21-ம் தேதியான நேற்று கிராம் 9 ஆயிரம் ரூபாயையும், சவரன் 72 ரூபாயையும் தாண்டியதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அதன்படி சென்னையில் நேற்று தங்கம் ஒரு கிராம் 70 ரூபாய் உயர்ந்து 9,015 ரூபாயாக விற்பனையானது. ஒரு சவரன் தங்கம் 560 ரூபாய் உயர்ந்து, சவரன் 72,120 ரூபாய் என்ற வரலாறு காணாத உச்ச விலையில் விற்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு 2,200 ரூபாய் உயர்ந்ததால், மக்கள் அதிர்ச்சிமேல் அதிச்சி அடைந்துள்ளனர். அதன்படி, கிராமுக்கு 275 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 9,290 ரூபாய் என்ற வரலாற்று உச்சத்தை தங்கத்தின் விலை அடைந்துள்ளது. ஒரு சவரனுக்கு 2,200 ரூபாய் உயர்ந்து சவரன் 74,000 ரூபாயை தாண்டி, 74,320 என்ற வரலாற்று உச்ச விலையை எட்டியுள்ளது.
மாற்றமின்றி விற்பனையாகும் வெள்ளி
வெள்ளியின் விலை கடந்த 15-ம் தேதியிலிருந்து, 20-ம் தேதி வரை, கிராம் 110 ரூபாயாகவும், ஒரு கிலோ பார் வெள்ளி 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயாகவும் விற்பனையாகி வந்தது. இந்த நிலையில், நேற்று(21.04.25) கிராமிற்கு ஒரு ரூபாய் உயர்ந்து, கிராம் 111 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஒரு கிலோ பார் வெள்ளி 1 லட்சத்து 11 ஆயிரம் ரூபாயாகவும் இருந்தது. இந்த நிலையில் வெள்ளியின் விலை இன்று மாற்றமின்றி கிராம் அதே 111 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
தங்கத்தின் விலை தொடர்ந்து தாறுமாறாக உயர்ந்து வருவதால், நடுத்தர மக்கள் இனி தங்கமே வாங்க முடியாது என்று எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது எங்கு போய் முடியுமோ என்றும் அவர்கள் புலம்பி வருகின்றனர்.