Gold Rate 10th April: தாறுமாறாக எகிறும் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.1,200 உயர்வு.. இன்றைய விலை தெரியுமா.?

திடீரென தாறுமாறாக எகிறிவரும் தங்கத்தின் விலை, நேற்று ஒரே நாளில் ரூ.1,480 உயர்ந்த நிலையில், இன்றும் ரூ.1,200 உயர்ந்துள்ளது. தற்போதைய விலை நிலவரத்தை காணலாம்.

Continues below advertisement

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தினந்தோறும் மாறி வருகிறது. சில நாட்களாக திடீரென அதிக அளவில் உயர ஆரம்பித்துள்ள விலை, நேற்றும், இன்றும் ஆயிரம் ரூபாய்க்கு மேல் உயர்ந்து, ஏற்கனவே இருந்த புதிய உச்ச விலையை தொட்டு, பொதுமக்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது.

Continues below advertisement

இன்றும் ரூ.1,200 உயர்ந்த தங்கத்தின் விலை

தங்கத்தின் விலை திடீரென பெருமளவில் குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிரடியாக உயரத் தொடங்கியுள்ளது. கடந்த 4 மற்றும் 5-ம் தேதிகளில் மட்டும் 2,000 ரூபாய் குறைந்த தங்கத்தின் விலை, சவரன் 66,480 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில், 6-ம் தேதியும் அதே விலையில் நீடித்த விலை, இந்த வாரத்தின் தொடக்க நாளான 7-ம் தேதி, மீண்டும் 25 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 8,285 ரூபாய்க்கும், சவரனுக்கு 200  ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 66,280 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் சற்று நிம்மதியடைந்திருந்தனர்.

இந்நிலையில், 8-ம் தேதி கிராமிற்கு 60 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 8,225 ரூபாய்க்கும், சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 65,800 ரூபாய்க்கு விற்பனையானதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

இந்த சூழலில், தங்கம் விலை தொடர்ந்து குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 9-ம் தேதியான நேற்று ஒரே நாளில் இரண்டு முறை விலை உயர்ந்து அதிர்ச்சி அளித்துள்ளது. அதன்படி, நேற்று காலை சவரனுக்கு 520 ரூபாயும், மதியத்தில் 960 ரூபாயும் என இரு முறை விலை உயர்ந்தது, சவரனுக்கு 1,480 ரூபாய் உயர்ந்தது. அதன்படி, கிராமிற்கு மொத்தமாக 185 ரூபாய் விலை உயர்ந்து 8,410 ரூபாயை எட்டியது. ஒரு சவரனுக்கு 1,480 ரூபாய் உயர்ந்து, சவரன் மீண்டும் 67 ஆயிரம் ரூபாயை கடந்து, 67,280 ரூபாய்க்கு விற்பனையானது.

இந்த நிலையில், தொடர்ந்து இன்றும் கிராமிற்கு 150 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 8,560 என்ற உச்ச விலையை மீண்டும் எட்டியது. அதன்படி, சவரனுக்கு 1,200 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 68,480 என்ற பழைய வரலாற்று உச்ச விலையை தொட்டுள்ளது.

வெள்ளியின் விலை இன்றும் உயர்ந்து அதிர்ச்சி

இந்நிலையில், 114 ரூபாயிலிருந்து படிப்படியாக குறைந்து 102 ரூபாயை எட்டிய வெள்ளியின் விலை, நேற்று ஒரே நாளில் 2 ரூபாய் உயர்ந்து அதிர்ச்சியளித்தது. அதன்படி, ஒரு கிராம் வெள்ளியின் விலை 104 ரூபாயாகவும், ஒரு கிலோ பார் வெள்ளி 1 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று ஒரே நாளில் கிராமிற்கு 2 ரூபாய் உயர்ந்து பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது வெள்ளியின் விலை. அதன்படி, ஒரு கிராம் 107 ரூபாயாகவும், ஒரு கிலோ பார் வெள்ளி 1 லட்சத்து 7 ஆயிரம் ரூபாயாகவும் விற்பனையாகிறது.

இதனிடையே, சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்ததால், இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அமெரிக்கா தொடுத்துள்ள வர்த்தகப் போரால், பல்வேறு நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், வரும் நாட்களிலும், தங்கம், வெள்ளியின் விலை உயரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola