சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சமீப காலமாக குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி விட்டது. சவரன் விலை 70 ஆயிரத்திற்கும் கீழ் சென்ற நிலையில், ஏற்கனவே விலை கூடி 71 ஆயிரத்தை கடந்தது. இந்த நிலையில், இன்று ஒரே நாளில் 1000 ரூபாய்க்கு மேல் உயர்ந்து, 72,000 ரூபாயை கடந்துள்ளது. இன்றைய விலை நிலவரம் குறித்து காணலாம்.
மீண்டும் மளமளவென ஏறும் தங்கத்தின் விலை
ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த மே மாதம் 25-ம் தேதி, கிராம் 8,990 ரூபாயாகவும், சவரன் 91,970 ரூபாயாகவும் இருந்தது. அதன் பிறகு விலை இறங்குவதும் ஏறுவதுமாக இருந்த நிலையில், மே 29-ம் தேதி, கிராம் 8,895 ரூபாய் வரையும், சவரன் 71,160 ரூபாய் வரையும் குறைந்தது.
அதற்கு அடுத்த நாளான 30-ம் தேதி சற்று உயர்ந்து, கிராம் 8,920 ரூபாயாகவும், சவரன் 71,360 ரூபாயாகவும் விற்பனையானது. அதன் பின், ஜூன் 1-ம் தேதியான நேற்று வரை தொடர்ந்து அதே விலையில் நீடித்த தங்கம், இன்று ஒரே நாளில் 2 முறை விலை உயர்ந்துள்ளது.
தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை கிராமிற்கு 30 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 8,950 ரூபாயாகவும், சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 71,600 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், மாலையில் மீண்டும் தங்கத்தின் விலை உயர்ந்தது.
அதன்படி, மாலையில் கிராமிற்கு 110 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 9,060 ரூபாய்க்கும், சவரனுக்கு 880 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு சவரன் மீண்டும் 72,000 ரூபாயை கடந்து, 72,480 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 1,120 ரூபாய் உயர்ந்ததால், பொதுமக்கள் மற்றும் தங்கம் வாங்வோர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
விலை மாற்றமின்றி விற்பனையாகும் வெள்ளி
தங்கத்தின் விலையில் பல்வேறு மாறுதல்கள் ஏற்பட்டு வரும் நிலையில, வெள்ளியின் விலையில் எந்த மாற்றமுமின்றி விற்பனையாகி வருகிறது.
கடந்த மே மாதம் 25-ம் தேதி கிராம் 111 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 1 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையான நிலையில், இன்று வரை விலையில் எந்த மாற்றமும் இன்றி, கிராம் அதே 111 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.
தங்கத்தின் விலை தாறுமாறாக மாற்றம் கண்டு வரும் நிலையில், வெள்ளியின் விலை மாற்றமின்றி இருந்து வருகிறது. எனினும், மக்களின் முக்கிய தேவையாக இருப்பது தங்கம் என்பதால், அதன் விலை தான் பொதுமக்களை கவலையில் ஆழ்த்தி வருகிறது. தங்கத்தின் விலை மீண்டும் 72,000-த்தை கடந்துள்ளதால், வரும் நாட்களில் என்ன ஆகுமோ என தங்கம் வாங்குவோர் அச்சத்தில் உள்ளனர்.