தங்கம் விலை விரைவில் ஒரு லட்சம் ரூபாயை எட்டும் என்ற கவலை ஏற்பட்டுள்ள நிலையில், அதை உறுதிப்படுத்தும் விதமாக, தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அந்த வகையில், இன்று சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் விலை 95 ஆயிரம் ரூபாயை கடந்து அதிர்ச்சி அளித்துள்ளது. இன்றைய விலை நிலவரம் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.
ரூ.95,000-த்தை கடந்து புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை
சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 10-ம் தேதி சற்று குறைந்த நிலையில், ஒரு கிராம் 11,340 ரூபாயாகவும், ஒரு சவரன் 90,720 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது. 11-ம் தேதி மீண்டும் விலை உயர்ந்து சவரன் 92,000 ரூபாயை கடந்தது. அன்று கிராம் 11,500 ரூபாயை எட்டிய நிலையில், ஒரு சவரன் சரியாக 92,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது. 12-ம் தேதி அதே விலையில் நீடித்தது.
அதைத் தொடர்ந்து, 13-ம் தேதி மீண்டும் விலை உயர்ந்து, ஒரு கிராம் 11,580 ரூபாய்க்கு சென்றது. ஒரு சவரன் 92,640 ரூபாய் என்ற உச்ச விலையை அடைந்தது. இந்நிலையில், 14-ம் தேதி தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்தது.
அதன்படி, ஒரு கிராமிற்கு 245 ரூபாய் உயர்ந்து, கிராம் 11,825 ரூபாய்க்கும், ஒரு சவரனுக்கு 1,960 ரூபாய் விலை உயர்ந்து, சவரன் 94,600 ரூபாய்க்கும் விற்பனையானது. தொடர்ந்து, 15-ம் தேதியான நேற்றும் தங்கத்தின் விலை உயர்ந்து ஒரு கிராம் 11,860 ரூபாய்க்கும், ஒரு சவரன் 94,880 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.
தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்
இந்த நிலையில், இன்றும் மீண்டும் சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்த தங்கத்தின் விலை, சவரன் 95,000 ரூபாயை கடந்துள்ளது. அதன்படி, ஒரு கிராமிற்கு 40 ரூபாய் விலை உயர்ந்து கிராம் 11,900 ரூபாய்க்கும், ஒரு சவரன் 95,200 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை ஒரு ரூபாய் குறைவு
இதேபோல், வெள்ளி விலையும் 200 ரூபாயை கடந்து உச்சம் தொட்ட நிலையில், இன்று ஒரு ரூபாய் குறைந்துள்ளது. கடந்த 10-ம் தேதி 7 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 184 ரூபாயை எட்டியது. 11-ம் தேதி 6 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 190 ரூபாய்க்கு விற்கப்பட்டது. 12-ம் தேதி அதேவிலையில் நீடித்தது.
பின்னர், 13-ம் தேதி மீண்டும் 7 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 197 ரூபாயை அடைந்தது. இந்நிலையில், 15-ம் தேதி அதிரடியாக 9 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 206 ரூபாய் என்ற வரலாற்று உச்சத்தை எட்டியது. தொடர்ந்து, 15-ம் தேதியான நேற்றும் ஒரு ரூபாய் விலை உயர்ந்து கிராம் 207 ரூபாய் என்ற வரலாற்கு உச்சத்தை தொட்டது.
இந்நிலையில், இன்று வெள்ளியின் விலை கிராமிற்கு ஒரு ரூபாய் குறைந்து 206 ரூபாயாக உள்ளது. அதன்படி, ஒரு கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 6 ஆயிரம் ரூபாயாக விற்பனையாகிறது.
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து, ஒரு லட்சம் ரூபாயை நோக்கி செல்வது, பொதுமக்கள் மற்றும் மண வீட்டாரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.