தங்கத்தின் விலை புதிய புதிய உச்சங்களை தொட்டுவரும் நிலையில், ஒரே நாளில் விலை கூடுவது குறைவது என்று மக்களுக்கு ஆட்டம் காட்டி வருகிறது. அந்த வகையில் இன்று காலை விலை உயர்ந்த நிலையில், மாலையில் விலை குறைந்துள்ளது. இன்று எவ்வளவு உயர்ந்து, எவ்வளவு குறைந்துள்ளது என்பதை தற்போது பார்க்கலாம்.
இன்று(21.10.25) காலையில் உயர்ந்த தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் மாற்றங்களை கண்டு வருகிறது. தினம் தினம் உச்சங்களை தொட்டுவரும் தங்கத்தின் விலை தற்போது ஒரு லட்சம் ரூபாயை நெருங்கி வருகிறது. இந்நிலையில், இன்று காலையில் தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடியாக 2 ஆயிரத்து 80 ரூபாய் உயர்ந்து பேரதிர்ச்சி அளித்தது.
அதன்படி, கிராமிற்கு 260 ரூபாய் விலை உயர்ந்த தங்கம், ஒரு கிராம் 12,180 ரூபாய்க்கு விற்பனையானது. அதேபோல், சவரனுக்கு 2,080 ரூபாய் விலை உயர்ந்து ஒரு சவரன் 97,440 ரூபாய்க்கு விற்பனையானது.
மாலையில் விலை குறைந்த தங்கம்
இந்த நிலையில், இன்று மாலையே சவரனுக்கு 1,440 ரூபாய் விலை குறைந்தது. அதன்படி, ஒரு கிராம் தங்கம் 180 ரூபாய் குறைந்து, கிராம் சரியாக 12,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
அதேபோல், சவரனுக்கு 1,440 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் சரியாக 96,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
வெள்ளி விலையும் குறைந்தது
இந்த நிலையில், வெள்ளி இன்று காலையில் 2 ரூபாய் குறைந்த நிலையில், மாலையில் மேலும் 6 ரூபாய் என மொத்தமாக இன்று 8 ரூபாய் விலை குறைந்தது.
அதன்படி, இன்று காலை ஒரு கிராம் வெள்ளி 2 ரூபாய் குறைந்து நேற்றைய விலையான 190 ரூபாயில் இருந்து 188 ரூபாயாக விற்கப்பட்டது.
இந்நிலையில், மாலை கிராமிற்கு மீண்டும் 6 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 182 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதன்படி, ஒரு கிலோ பார் வெள்ளி 1 லட்சத்து 82 ரூபாயாக உள்ளது.
சர்வதேச அரசியல் சூழலின் காரணமாக தங்கத்தின் விலை அசுர வேகத்தில் உயர்ந்து வருகிறது. இன்று என்னதான் மாலையில் விலை குறைந்தாலும், காலையில் அதிக அளவு உயர்ந்ததால், மாலை விலை குறைந்த நிலையிலும், இன்று தங்கம் ஒரு கிராமிற்கு 80 ரூபாய் உயர்ந்தே உள்ளது. இதனால், தங்கம் வாங்குவோர், குறிப்பாக மண வீட்டார் பெரிதும் கலக்கமடைந்துள்ளனர்.