தினந்தோறும் புதிய உச்சத்தை தொடும் தங்கம்

தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளதன் காரணமாக தங்கத்தின் விலையானது நடுத்தர வர்க்க மக்களுக்கு எட்டாக்கனியாகவே மாறிவிட்டது. தங்களது பெண் குழந்தைகளுக்கு சிறுக சிறுக தங்கத்தை சேகரிக்க விரும்பிய மக்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறது தங்கம் விலை உயர்வு. அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தங்கத்தின் விலையானது  புதிய புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. ஒரே வருடத்தில் தங்கத்தின் விலை இரண்டு மடங்காக அதிகரித்து தற்போது ஒரு லட்சத்து 34ஆயிரத்தை கடந்துள்ளது. 

Continues below advertisement

தங்கம் விலை உயர்வுக்கு காரணம் என்ன.?

தங்கம் விலை உயர்வுக்கு அமெரிக்காவின் தற்போதைய பொருளாதாரக் கொள்கையே காரணம் என  பொருளாதார நிபுணர்கள் தெரிவித்து வருகிறார்கள். மேலும் டாலர் மீது ஐரோப்பிய நாடுகள்  வைத்திருந்த நம்பிக்கை இழந்துள்ளதும்  இதன் காரணமாக மத்திய வங்கிகள் தங்களிடம் இருந்த டாலரை விற்றுவிட்டு தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளன. இதனையடுத்து தான் தங்கத்தின் மதிப்பு தினந்தோறும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. 

ஒரே நாளில் வரலாறு படைத்த தங்கம் விலை

அந்த வகையில் சென்னையில் நேற்று முன் தினம் (28.01.2026) ஒரு சவரனுக்கு 5,200 ரூபாய் உயர்ந்து  1,24,880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் (29.01.2026) நேற்று தங்கத்தின் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. ஒரு கிராமுக்கு மட்டுமே 1,290 ரூபாய் உயர்ந்து 16 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு சவரனுக்கு 9,520 ரூபாய்  உயர்ந்து  ஒரு லட்சத்து 34ஆயிரத்து 400 ரூபாய்க்கு தங்கம் விற்பனை செய்யப்பட்டது

Continues below advertisement

இதே போல வெள்ளியின் விலையும் தங்கத்திற்கு இணையாக உயர்ந்தது. ஒரு கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து 425 ரூபாய்க்கும், ஒரு கிலோவிற்கு 25ஆயிரம் ரூபாயாக அதிகரித்து 4 லட்சத்து 25ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. எனவே தங்கத்தின் விலையானது புதிய உச்சத்தை தொட்டத்தையடுத்து நடுத்தர வர்க்க மக்களால் தங்கத்தை வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.   தினமும் 500 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் என அதிகரித்து வந்த தங்கத்தின் விலையானது நேற்று  ஒரே நாளில் சுமார் 10ஆயிரம் ரூபாய் அளவிற்கு உயர்ந்தது அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. 

இன்றைய தங்கம் வெள்ளி விலை என்ன.?

இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 600 ரூபாய் குறைந்து 16ஆயிரத்து 200 ரூபாய்க்கும், சவரனுக்கு 4800 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 29ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதே போல வெள்ளியின் விலையும் கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 415 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோவிற்கு 10ஆயிரம் ரூபாய் குறைந்து 4 லட்சத்து 15ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. நேற்று ஒரே நாளில் உச்சத்தை தொட்ட தங்கம் விலை இன்று அதில் பாதியளவிற்கு மட்டுமே குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.