சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதனால், மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தங்கம் வாங்குவோருக்கு தலை சுற்றலை ஏற்படுத்தும் புதிய விலை குறித்து தெரிந்துகொள்வோம்.


ஆண்டின் தொடக்கத்திலிருந்தே உயர்ந்துவரும் தங்கம் விலை


2025-ம் ஆண்டு பிறந்ததிலிருந்தே தங்கத்தின் விலை ஏறுமுகத்திலேயே தான் உள்ளது. அவ்வவ்போது சிறிதளவு குறைந்தாலும், பெரும்பாலும் விலை ஏற்றத்தில்தான் உள்ளது. ஜனவரி மாத இறுதியில் 61,000 ரூபாயை கடந்து புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை, பிப்ரவரி மாதம் பிறந்த அன்றே 62,000 ரூபாயை கடந்து புதிய உச்சத்தை அடைந்து பேரதிர்ச்சி கொடுத்தது. இந்த நிலையில், இன்று மேலும் உயர்ந்த தங்கத்தின் விலை, வரலாறு காணாத அளவில் புதிய உச்சத்தை தொடடுள்ளது.


ரூ.63,000-த்தை கடந்த தங்கத்தின் விலை


புதிய விலையின்படி, இன்று(05.02.25) ஒரு சவரன் தங்கத்தின் விலை 63,000 ரூபாயை கடந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, தங்கம் கிராமிற்கு 95 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 7,905 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் 760 ரூபாய் உயர்ந்து, சவரன் 63,240 ரூபாய்க்கு விற்பனையாகிறது.


வெள்ளி விலையும் ஏறுமுகம்


தங்கத்தை போல், வெள்ளி விலையும் இந்த ஆண்டில் ஏறுமுகத்தில்தான் உள்ளது. ஜனவரி மாத இறுதியில் கிராம் ஒன்றிற்கு 107 ரூபாய் என்ற புதிய உச்சத்தை அடைந்த வெள்ளியின் விலை, நேற்று(04.02.25) ஒரு ரூபாய் குறைந்து கிராம் 106 ரூபாய்க்கு விற்பனையானது. இந்த நிலையில், இன்று கிராமிற்கு மீண்டும் ஒரு ரூபாய் உயர்ந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி 107 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 1 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.