புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. கடந்த 2025ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஒரு சவரன் தங்கம் 59ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. சரியாக 365 நாளில் இரு மடங்காக தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. அதுவும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஒரு சவரனுக்கு 20ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் சவரனுக்கு 5,200 ரூபாய் உயர்ந்தது.
நேற்று காலை தங்கம் ஒரு கிராம் 370 ரூபாய் விலை உயர்ந்து 15,330 ரூபாய்க்கும், சவரனுக்கு 2,960 ரூபாய் விலை உயர்ந்து ஒரு சவரன் 1,22,640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. பிற்பகலில் மீண்டும் அதிர்ச்சியை கொடுத்தது தங்கம் விலை, கிராமிற்கு 280 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 15,610 ரூபாய்க்கும், சவரனுக்கு 2,240 ரூபாய் விலை உயர்ந்து ஒரு சவரன் 1,24,880 ரூபாய்க்கும் விற்பனையானது
வரலாறு படைத்த வெள்ளி விலை
இதேபோல், வெள்ளி விலையும் எதிர்பாரா அளவிற்கு உயர்ந்தது. கடந்த வார இறுதியில், வெள்ளி ஒரு கிராம் 365 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் நேற்று ஒரே நாளில் வெள்ளி விலை 13 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 400 ரூபாயை தாண்டியது. ஒரு கிலோ பார் வெள்ளி 4 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் திருமண நிகழ்வுகள் உள்ளிட்ட சுப நிகழ்விற்கு நடுத்தர வர்க்க மக்களால் தங்கம் வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இன்றைய தங்கம் வெள்ளி விலை என்ன.?
இந்த நிலையில் இன்றும் தங்கத்தின் விலையானது எப்போதும் இல்லாத அளவாக உயர்ந்து புதிய வரலாறு படைத்துள்ளது. இன்று கிராம் ஒன்றுக்கு 1,290 ரூபாய் உயர்ந்து 16ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு 9,520 ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 34ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதே போல வெள்ளியின் விலையும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து 425 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோவிற்கு 25ஆயிரம் ரூபாயாக அதிகரித்து 4 லட்சத்து 25ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கம் மற்றும் வெள்ளி விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளதற்கு முக்கிய காரணமாக உலக நாடுகளில் நடைபெற்று வரும் போர் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தங்கத்தின் மீது முதலீடு அதிகரிப்பால் விலையானது உயர்ந்து வருவதாக தங்கநகை வியாபாரிகள் தெரிவித்து வருகிறார்கள்.