இந்திய மக்கள் தங்கத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டவர்கள் என்றே மற்ற உலக நாடுகளால் கருதப்படுகிறது. ஆனால், உண்மையில் இந்தியாவில் தங்கம் என்பது நடுத்தர மற்றும் ஏழை வர்க்கத்தினருக்கு ஆடம்பர பொருளாக இல்லாமல் ஆபத்து காலத்தில் காப்பாற்றும் ஆபத்பாந்தவனாகவே திகழ்கிறது. 

தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை:

இந்த நிலையில் சமீபகாலமாக தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டே இருக்கிறது. சென்னையில் ஆபரணத்தங்கம் கிராமிற்கு ரூபாய் 9,00க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் ரூபாய் 72 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. இதில் ஜிஎஸ்டி வரி உள்ளிட்ட வரிகளை இணைத்து ஒரு சவரன் தங்கத்தின் விலை 80 ஆயிரத்தை கடந்துவிடும்.

இனி கனவுதானா?

இன்றும் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் மாத சம்பளம் 15 ஆயிரம், 20 ஆயிரம் ரூபாய்க்கு கோடிக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தங்களின் குடும்ப தேவைக்காக, தங்கள் வீட்டில் நடக்கும் சுபகாரியங்களுக்காகவோ தங்க நகைகள் வாங்குவது என்பது கனவாக மாறி வருகிறது. 

இந்தியாவைப் பாெறுத்தவரை மாத சம்பளம் 20 ஆயிரத்திற்குள் குடும்பத்தை நடத்துவோரின் எண்ணிக்கை கோடிக்கணக்கான குடும்பங்கள் ஆகும். விண்ணை முட்டும் அளவிற்கு தங்கம் விலை நாளுக்கு நாள் எகிறிக் கொண்டு இருக்கும் நிலையில், இன்னும் சில மாதங்களில் லட்ச ரூபாயை சவரன் தங்கம் தொட்டு விடுமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 

உயர்வுக்கு காரணம்:

உக்ரைன் - ரஷ்யா போர், இஸ்ரேல் - ஹமாஸ் போர் உள்ளிட்ட உலகளவில் காணப்படும் சீரற்ற நிலை மற்றும் ஐரோப்பிய நிதியம் வட்டி விகிதத்தை குறைத்தது உள்ளிட்ட பல காரணங்களால் பெரும் முதலீட்டாளர்கள் பங்குச்சந்தைக்கு பதிலாக தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர். பாதுகாப்பான முதலீடாக கருதி தங்கத்தை அவர்கள் முதலீடு செய்து வருவதால் தங்கத்தின் மீதான மதிப்பு அதிகரித்து விலையும் அதிகரித்து வருகிறது. 

கானல் நீரா?

இப்படியே தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு போனால் நடுத்தர மற்றும் ஏழை குடும்பத்தினர் வாழ்வில் தங்கம் என்பது இனி கானல் நீராக மாறிவிடும் என்பதே உண்மை. மத்திய அரசின் கடந்தாண்டு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை குறைத்து அரசு அறிவித்தது. ஆனால், நடப்பாண்டில் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் விலை குறைப்பிற்கான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. 

கட்டுக்குள் கொண்டு வருமா அரசு?

தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தால் வாங்குபவர்கள் மட்டுமின்றி விற்பனையாளர்களுக்கும் ஆபத்து என்றே தொழில்நிபுணர்கள் கருதுகின்றனர். 

இதன் காரணமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் ஏதேனும் ஏற்பாடு செய்து தங்கம் விலையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் தங்கம் விலையை குறைக்க ஏதேனும் சிறப்பு நடவடிக்கை அரசால் எடுக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.