இந்தியாவில் திவாலானதாக அறிவிக்கப்பட்டுள்ள கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனம் தனது பைலட்டுகளை தக்கவைக்க மாதம் ரூ.1 லட்சம் கூடுதல் சம்பளம் தருவதாக தெரிவித்துள்ளது. 


மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் விமான போக்குவரத்து நிறுவனம் கோ பர்ஸ்ட் விமான நிறுவனம். கோ பர்ஸ்ட் நிறுவனம் கடந்த 2017 ஆம் ஆண்டு இந்தியாவின் 5வது மிகப் பெரிய ஏர்லைன்ஸ் என பெயர் பெற்றது. கடந்த சில காலங்களாக கோ பர்ஸ்ட் விமான நிறுவனம் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது.


அமெரிக்காவின் Pratt & Whitney விமான நிறுவனம், என்ஜின்கள் டெலிவிரி செய்யாததால், நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது என கோ பர்ஸ்ட் நிறுவனம் தெரிவித்து உள்ளது. விமானங்கள் இயங்காததால் ஏறத்தாழ 10,800 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டு, மே 30ம் தேதி வரை அனைத்து விமான சேவைகளை ரத்து செய்வதாக அறிவித்து உள்ளது. கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்திடம் 57 விமானங்கள் உள்ளன. மாற்று இன்ஜின்கள் வழங்கப்படாததால் தற்போது அதன் 25 விமானங்கள் செயல்படாமல் உள்ளன


இந்நிலையில் தனக்கு அளிக்கப்பட்ட நிவாரண காலத்தில் சீர்திருத்தங்களை மேற்கொண்டு மீண்டும் விமான சேவையைத் தொடங்க வேண்டும் என்று கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதனால் பைலட்டுகளுக்கு பெரிய அளவில் சம்பள உயர்வு தர முடிவு செய்துள்ளது.


அதன்படி பைலட்டுகளுக்கு ரூ.1 லட்சம் வரை சம்பள உயர்வும், முதன்மை அலுவலர்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை சம்பள உயர்வும் வழங்கும் என்று தெரிகிறது.


ஒரே நேரத்தில் 200க்கும் மேற்பட்ட பைலட்டுகள் ஏர் இந்தியாவில் சேர்ந்துவிட்ட நிலையில் கோ ஃபர்ஸ்ட் மீண்டு எழுவதற்காக இந்த முயற்சிகளை எடுத்துள்ளது.


மத்திய விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு ஆணையம் கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்தில் முறையான ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர் தான் மீண்டும் அந்நிறுவனம் முழுமையாக செயல்பட அனுமதி தரும்.


முன்னதாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தனது பைலட்டுகளுக்கு சம்பளத்தை உயர்த்தியது. இந்நிலையில் கோ ஃபர்ஸ்ட் நிறுவனமும் சம்பள உயர்வு வழங்கியுள்ளது. மேலும் தனது ஊழியர்களுக்கு லாங்கவெட்டி போனஸும் வழங்குவதாக அறிவித்துள்ளது.


விமான நிறுவனத்தை மீட்டெடுக்க 30 நாட்கள் மட்டுமே அவகாசம் என்ற நிலையில் இன்னும் விமான இன்ஜின்களும் கிடைக்கப் பெறாமல் தவித்து வருகிறது.


கோ பர்ஸ்ட் நிறுவனத்தின் விமானங்களை இயங்கும் கேப்டன்கள் தற்போது சராசரியாக மாதம் 5.3 லட்சம் ரூபாயை சம்பளமாக பெறுகின்றனர், ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் 7.5 லட்சம் ரூபாய் சராசரியாக அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த வித்தியாசத்தை குறைக்கவும், ஏற்கனவே அணுபவம் உள்ள கேப்டன்களை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள சம்பள உயர்வு வழங்கப்படுகிறது. இதனால் கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்தின் பைலட்டுகள் மகிழ்ச்சி கொண்டுள்ளனர்.