ரூபாய் நோட்டுகளில் மற்ற சுதந்திர போராட்ட தலைவர்களின் படத்தையும் அச்சிட வேண்டும் என தமிழகத்தைச் சேர்ந்த நித்தியானந்தம் என்பவர் அளித்த பரிந்துரைக்கு, ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும் என ரிசர்வ் வங்கி பதிலளித்துள்ளது.
கடந்த சில நாட்களாக ரூபாய் நோட்டுக்களில் அப்துல்கலாம் உள்ளிட்ட தலைவர்களின் புகைப்படத்தை அச்சிட வேண்டும் என டெல்லி ஐ.ஐ.டி. பேராசிரியர் ஒருவர் கொடுத்த பரிந்துரையின் பேரில் ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருவதாக தகவல்கள் உலா வருகின்றன. இதனை ஆர்.பி.ஐ.யும் மறுத்திருந்த நிலையில், தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த நித்தியானந்தம் என்பவர் தான் அந்த பரிந்துரையை அனுப்பியது என்பது தெரியவந்துள்ளது.
சுதந்திரத்திற்காக போராடிய மற்ற தலைவர்களின் புகைப்படத்தையும் அச்சிட வேண்டும் என வெளிநாட்டு பணத்துடன் ஒப்பிட்டு ஆதாரப்பூர்வமாக ரிசர்வ் வங்கிக்கு 149 பக்கங்கள் கொண்ட பரிந்துரையை நித்யானந்தம் அனுப்பியிருக்கிறார். இந்த பரிந்துரையை பெற்றுக் கொண்ட ரிசர்வ் வங்கி அவருக்கு நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளதோடு, இது குறித்து ஆலோசனை நடத்திய நடத்தி முடிவெடுக்கப்படும் என கூறியுள்ளது.
ஏற்கனவே, கடந்த 2020ஆம் ஆண்டு பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன்சுவாமி இந்திய ரூபாயில் லட்சுமி படத்தை அச்சிட்டால் இந்திய ரூபாயின் மதிப்பு மேம்படும் என அவர் கருத்து தெரிவித்திருந்தார். அப்போது அவரின் பேச்சுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இப்படி பல்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு தலைவர்களை கவுரப்படுத்தும்விதமாக ரூபாய் நோட்டுகளில் அவர்களின் படத்தை அச்சிடவேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்திருக்கிறது.
இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு கூட, ஆறாம் ஜார்ஜ் மன்னரின் புகைப்படத்துடன் கூடிய ரூபாய் நோட்டுகளையே இந்தியா வெளியிட்டு வந்தது. பின்னர் இந்தியாவின் சின்னமான சாரநாத் நான்கு முகங்களை உடைய சிங்க உருவத்தை இந்திய ரிசர்வ் வங்கி அச்சிடத் தொடங்கியது. அதன்பிறகு, காந்தியின் நூற்றாண்டு விழாவையொட்டு முதன் முதலாக அவரது உருவப்படத்தை அச்சுட்டு ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது ரிசர்வ வங்கி. 1969ஆம் ஆண்டில் ஆசிரமத்தில் காந்தி அமர்ந்திருப்பது போன்ற புகைப்படத்துடன் 2 ரூபாய் முதல் 100 வரையிலான நோட்டுகள் வெளியிடப்பட்டன.
2000ஆம் ஆண்டில் ஆயிரம் ரூபாய் தாளில் காந்தி படமும் அதே ஆண்டும் 500 ரூபாய் தாளிலும் அவரது புகைப்படம் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. காந்தி மட்டுமே சுதந்திரத்திற்கு காரணமானவர் இல்லை, மற்ற தலைவர்களின் புகைப்படங்களையும் அச்சிட்டு அவர்களுக்கும் கவுரவம் சேர்க்க வேண்டும் தொடர்ந்து கோரிக்கை எழுந்து வந்த நிலையில், தமிழ்நாட்டை சேர்ந்த நித்தியானந்தம், அது தொடர்பான பரிந்துரைகளை ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி, பாராட்டையும் பெற்றிருக்கிறார்.