சென்னை அடுத்த மறைமலை நகரில் ஃபோர்டு தொழிற்சாலை  சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது.இந்த ஆலைகளில் வருடத்திற்கு 4 லட்சம் கார்கள் உற்பத்தி செய்ய முடியும் என்ற நிலையில், கடந்த சில ஆண்டுகளாக 80 ஆயிரம் கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்தன . இதனால் ஃபோர்டு நிறுவனம் தொடர்ந்து பெரும் நஷ்டத்தில் இயங்கி வந்ததாக கூறப்பட்டது. இதனால் 14,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதால், தொழிற்சாலை விரைவில் மூடப்படும் என கடந்த ஆண்டு நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்நிலையில் கடந்த மாதம் ஜூலை சென்னை  தொழிற்சாலையில் முழுமையாக உற்பத்தியை நிறுத்தியது. 



 

ஊழியர்களின் போராட்டம்

 

 

ஃபோர்டு தொழிற்சாலை ஊழியர்கள் தங்களுக்கு பணி பாதுகாப்பு வேண்டும். தொடர்ந்து தொழிற்சாலை இயங்க வேண்டும், அல்லது குஜராத் தொழிற்சாலியை எப்படி வேறு நிறுவனத்திற்கு தொழிற்சாலை ஊழியர்களுடன் விற்பனை செய்ய உள்ளதோ, அதேபோல சென்னை ஃபோர்டு தொழிற்சாலையை ஊழியர்களுடன் விற்பனை செய்ய வேண்டும்  எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இது தொடர்பாக தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். தமிழக அரசு, தொழிற்சாலை நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் நடத்திய முத்தரப்பு பேச்சு வார்த்தையின் அடிப்படையில், போராட்டம் கைவிடப்பட்டது. தொடர்ந்து ஊழியர்கள் தொழிற்சாலை நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர்.

 

 

215 நாள்..

 

 

தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் சங்கத்தினர் நடத்திய பேச்சுவார்த்தையில் இழப்பீடு தொகை நிர்வாகம் சார்பில் கொடுக்கப்பட்டால், வருடத்திற்கு 215 நாட்கள் என கணக்கு செய்து கொடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர். நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், குறைந்தபட்சம் 185 நாட்கள் ஆவது, கொடுத்தே தீர வேண்டும் என  தொழிற்சங்கத்தினர் கூறிவந்தனர். ஆனால் நிர்வாகம் தரப்பில் தொடர்ந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக சுமார் 68 முறை பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.



 

130 நாட்கள் மட்டுமே

 

இறுதியாக இன்று சென்னை மறைமலைநகர் ஃபோர்டு தொழிற்சாலை சார்பில், 130 நாட்கள் மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. VSS SCHEME என்ற பெயரில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் செப்டம்பர் 23ஆம் தேதிக்குள் இதற்கு, விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக ஊழியர் ஒருவருக்கு 33 லட்ச ரூபாயிலிருந்து , அதிகபட்சமாக 85 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும் என கூறப்படுகிறது. 



 

மறுக்கும் ஊழியர்கள்

 

இது தொடர்பாக ஏபிபி நாடு சார்பில் ஊழியர்களிடம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, பெரும்பாலான ஊழியர்களுக்கு செட்டில்மெண்ட் தேவைப்படவில்லை, தங்களுடைய வேலை வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என தொடர்ந்து கூறி வருகிறோம். ஆனால் நிர்வாகமும் நாங்கள் எதிர்பார்த்ததைவிட குறைந்த அளவு செட்டில்மெண்ட் கொடுத்துவிட்டு,  இதைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என திணிக்கின்றனர். மேலும் நிர்வாகம் தெரிவிக்கும், தொகையைப் பார்த்தால் பெரிய அளவாக தெரியும். ஆனால் பெரும்பாலான ஊழியர்களுக்கு குறைந்தபட்ச தொகையை கொடுக்கப்படும். மேலும் கொடுக்கப்படும் தொகையிலிருந்து 30 சதவீதம் வரை வரி பிடித்தம் செய்யப்படும், எனவே இந்த தொகை நிச்சயம் நியாயமான தொகை அல்ல, என தெரிவித்தனர்