ஒரு காலத்தில் இல்லை. ஒரு மாதத்துக்கு முன்பு வரை முதலீட்டாளர்களின் விருப்ப பங்காக இருந்தது ஐ.ஆர்.சி.டி.சி. ஆனால் தற்போது (அக் 29) வர்த்தகத்தில் சுமார் 25 சதவீதம் வரை வர்த்தகத்தின் தொடக்கத்தில் சரிந்தது. இந்த பங்கு உயர்வதற்கு என்ன காரணம் சொல்லப்பட்டதோ அதே காரணம்தான் சரிவதற்கும்.


இந்திய ரயில் டிக்கெட் விற்பனையில் மோனோபோலி சந்தை வைத்திருந்தது. தற்போது அதே காரணம், சந்தை மதிப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.


50 சதவீத வருமானம்:


ஐஆர்சிடிசி நிறுவனம் வசூலிக்கும் கட்டணத்தில் 50 சதவீதம் அளவுக்கு மத்திய ரயில்வே அமைச்சகத்துக்கு வழங்க வேண்டும் என பங்குச்சந்தை அமைப்புக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருக்கிறது. வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் வருமான பகிர்வு இருக்க வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறது.


கடந்த நிதி ஆண்டில் (20-21) ரூ.299.13 கோடி அளவுக்கு வருமானம் ஈட்டியது. கொரோனா காரணமாக இந்த வருமானம் குறைந்திருக்கிறது. இதற்கு முந்தைய நிதி ஆண்டில் ரூ349 கோடி அளவுக்கு கட்டணம் மூலம் வருமானம் ஈட்டி இருந்தது.



2014- ஆண்டுக்கு முன்பு வருமான பகிர்வு என்பது இல்லை. 2014-ம் ஆண்டு 80 சத்வீதம் நிறுவனத்துக்கும் 20 சதவீதம் மத்திய அரசுக்கு பகிரப்பட்டது. அடுத்த ஆண்டில் 50:50 சதவீதமாக உயர்த்தப்பட்டது.


2016-ம் ஆண்டு பண மதிப்பு நீக்கத்துக்கு ( நவ 23) பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமான சேவை கட்டணத்தை ஐஆர்சி.டி.சி நிறுத்தி வைத்திருந்தது. ஆனால் நிறுவனத்தின் வருமானம் குறைந்ததை அடுத்து 2019-ம் ஆண்டு செப்டம்பர் முதல் மீண்டும் சேவை கட்டணம் அமல்படுத்தப்பட்டது. ஏசி இருக்கைக்கு 30+ஜிஎஸ்டி ஏசி அல்லாத இருக்கைக்கு 15+ஜிஎஸ்டி என கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது


பெரும் பாதிப்பு


இந்த நிலையில் ரயில்வே அமைச்சகத்தின் வருமான பகிர்வு திட்டம் முதலீட்டாளர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அக்டோபர் 28-ம் தேதி இந்த கடிதத்தை ரயில்வே அமைச்சகம் வெளியிட்டது. அடுத்த நாள் அக் 29 இந்த பங்கின் பிரிப்பு நடவடிக்கைகள் நடந்தன. இதனால் ஒரு நிச்சயமற்ற சூழல் முதலீட்டாளர்களிடம் தெரிந்தது.


கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு லட்சம் கோடி ரூபாய் என்னும் சந்தை மதிப்பை இந்த பங்கு தொட்டது. ஆனால் அரசின் இந்த அறிவிப்பு ஏற்கெனவே சந்தையில் தெரியவந்ததால்தான் இந்த பங்கில் சரிவு இருக்கிறது என்றும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அக்டோபர் 29-ம் தேதி வர்த்தகத்தின் தொடக்கத்தில் அதிகபட்சம் 25 சதவீதம் சரிந்து ரூ.685-க்கு இந்த பங்கின் வர்த்தகம் இருந்தது.



ரயில்வே துறை இதுபோன்ற ஒரு நடவடிக்கையை எடுத்ததால், இந்த நிறுவனம் மட்டுமல்லாமல் பொதுத்துறை நிறுவனங்கள் மீதான நம்பிக்கை குறையும் என பல பங்குச்சந்தை வல்லுநர்கள் அதிருப்தி தெரிவித்திருக்கிறார். ஆங்கில ஊடகங்கள் இதனை செல்ப் கோல் என எழுதி இருக்கிறது.


அரசாங்கத்துக்கு கிடைக்கப்போவது என்னமோ ரூ.200 கோடிதான். ஆனால் இந்த அறிவிப்பு காரணமாக ரூ.18000 கோடி அளவுக்கு ஒரே நாளில் சந்தை மதிப்பு சரிந்தது. தற்போது 70000 கோடி ரூபாயாக இருந்தாலும் வர்த்தகத்தின் இடையே ரூ.54,828 கோடியாக சந்தை மதிப்பு இருந்தது.


அறிவிப்பு வாபஸ்


ரயில்வே அமைச்சகத்தின் இந்த அறிவிப்பு காரணமாக பங்குகள் கடுமையாக சரிந்ததை அடுத்து, இந்த அறிவிப்பு வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதனால் சரிந்த பங்குகள் மீண்டும் உயரத்தொடங்கி இருக்கின்றன. 25 சதவீதம் அளவுக்கு சரிந்த பங்கு தற்போது உயர்ந்து 5 சதவீத சரிவில் இருக்கிறது.


இதுபோன்ற விளையாட்டை பட்டியலிட்ட தனியார் நிறுவனம் எதாவது செய்தால் அந்த நிறுவனம் மீது செபி கடுமையான நடவடிக்கையை எடுக்கும். ஆனால் இங்கு என்ன முடியும்?