பிரபல பீட்ஸா நிறுவனமான டாமினோஸ் இந்தியாவில் இயங்கும் உணவு டெலிவரி ஆப்களான ஸ்விக்கி மற்றும் சொமேட்டோ நிறுவங்களிடமிருந்து வெளியேறப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜூபிலியண்ட் ஃபுட் ஒர்க்ஸ்:
இந்தியாவில் இயங்கும் ஜூபிலியண்ட் ஃபுட் ஒர்க்ஸ் நிறுவனம், ஸ்விக்கி மற்றும் ஸொமேட்டோ ஆகிய நிறுவனங்களின் போட்டி எதிர்ப்பு நடைமுறைகளை விசாரித்து வரும் இந்திய போட்டி ஆணையத்திடம் ரகசியமாக கடிதம் மற்றும் ஆவணங்களைத் தாக்கல் செய்துள்ளது. ஜூபிலியண்ட் ஃபுட் ஒர்க்ஸ் நிறுவனமானது இந்தியாவில் இயங்கும் மிகப்பெரிய உணவு சேவை நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் கீழ் தான் டாமினோஸ் மற்றும் டன்கின் டோனட்ஸ் இண்டியா ஆகியவை இயங்குகின்றன. இந்நிறுவனத்தின் கீழ் சுமார் 1600க்கும் மேற்பட்ட பிராண்ட்களின் உணவு நிறுவனங்கள் இயங்குகின்றன. அதில், 1,567 டாமினோஸ் கடைகளும், 28 டன்கின் கடைகளும் அடங்கும்.
ஸ்விக்கி மற்றும் சொமேட்டோ ஆகிய உணவு டெலிவரி ஆப்கள் இந்தியாவின் மிகப்பெரிய உணவு டெலிவரி சந்தையை கையில் வைத்திருக்கின்றன. சிறு கடைகள் முதல் பிரபலமான உணவு நிறுவனங்கள் வரை இவைகளுடன் இணைந்து உணவு டெலிவரியை செய்துவருகின்றன. இந்த நிலையில் இந்த நிறுவனங்கள் ஒரு சிலருக்கு சாதகமாக நடந்துகொள்வதாகவும், அதிகப்படியான கமிஷன் வசூலிப்பதாகவும், போட்டி எதிர்ப்பு நடைமுறைகளில் ஈடுபடுவதாகவும் இந்திய போட்டி ஆணையத்திடம் இந்திய ரெஸ்டாரண்ட் அசோசியேசன் புகார் அளித்தது.
ரெஸ்டாரண்ட் சங்கம் புகார்:
மேலும், சுமார் 5 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட இந்த சங்கம் சொமேட்டோ மற்றும் ஸ்விக்கியால் வசூலிக்கப்படும் 20 சதவீதம் முதல் 30% வரையிலான கமிஷன் சாத்தியமில்லாதது என்று கூறியிருந்தது. இந்த புகாரை ஏற்ற இந்திய போட்டி ஆணையம் கடந்த ஏப்ரல் மாதம் விசாரணையைத் தொடங்கி நடத்திவருகிறது.
இந்த விசாரணையின் ஒரு பகுதியாக டாமினோஸ் இந்தியா உள்ளிட்ட பிரபல உணவு நிறுவனங்களிடம் கருத்துகளைக் கோரியது. அதில் பதிலளித்துள்ள ஜூபிலியண்ட் நிறுவனம் இந்த மாதத்தில் அதன் 26-27 சதவீத வியாபாரம் தங்களது இணையதளம் மற்றும் மொபைல் ஆப் உள்ளிட்ட ஆன்லைன் தளங்கள் வாயிலாக மூலமாகவே நடந்துள்ளதாகக் கூறியுள்ளது. மேலும், கமிஷன் அளவு அதிகரிக்கப்பட்டால் ஆன்லைன் ரெஸ்டாரண்ட் தளங்களில் இருந்து வெளியேறுவது பற்றி ஆலோசிக்கும் என்றும், தங்களது இணையதளங்களில் இருந்து உணவுகளை ஆர்டர் செய்வதை ஊக்குவிக்கப்போவதாகவும் கூறியுள்ளது.
தொழில் பாதிப்பு:
இந்தியாவில் ஸ்மார்ட் ஃபோன் பயனாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியிருப்பதையடுத்து கவர்ச்சிகரமான ஆஃபர்கள் உள்ளிட்டவற்றை உணவு டெலிவரி ஆப்கள் வழங்குவதால் அவைகள் இந்தியாவில் பிரபலமாகி வருகின்றன. இதனைப் பயன்படுத்திக்கொள்ளும் உணவு டெலிவரி நிறுவனங்கள் விதிக்கும் அதிகப்படியான கமிஷன்கள் உள்ளிட்ட நடவடிக்கைகளால் தங்களது தொழில் பாதிக்கப்படுவதாக உணவு நிறுவனங்கள் குற்றம்சாட்டியதன் எதிரொலியாக ஜூப்லியண்ட் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஸ்விக்கி விளக்கம்:
இதுதொடர்பாக ஜூபிலியண்ட் நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரி கூறுகையில், ‘கமிஷன்கள் அதிகரிக்கப்பட்டால், வருமானத்தை குறைத்து தொழில் நடத்துவதற்கான சூழ்நிலையை சுருக்கும். இந்த கமிஷனை சமாளிக்க அது வாடிக்கையாளர் தலையில் சுமத்தப்படும்’ என்று கூறியுள்ளார்.
உணவு நிறுவனத்தின் பிரபலத் தன்மை, எவ்வளவு ஆர்டர் செய்கிறார்கள் போன்ற காரணிகளைக் கொண்டே கமிஷன்கள் நிர்ணயிக்கப்படுவதாக ஸ்விக்கி தெரிவித்துள்ளது.