நாடு முழுவதும் இன்று முதல் அதாவது அக்டோபர் மாதம் 1ஆம் தேதி முதல் 19 கிலோ எடை கொண்ட வணிக  எரிவாயு சிலிண்டர் விலை ரூபாய் 203 உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளது. இதன் மூலம் சென்னையில் வணிக சிலிண்டர் விலை ரூபாய் ஆயிரத்து 899க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வீட்டு உயபோக சிலிண்டர் விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல் ரூபாய் 918.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 


இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களின் வாழ்வில் எரிபொருள் விலை மாற்றம் என்பது பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தும். 


பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் முன்னதாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அதில் ஒன்றாக, நாடு முழுவதும் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரின் விலை  200 ரூபாய் குறைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டதாக  மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். அதேசமயம்  உஜ்வாலா திட்டத்தில் பயனாளிகளுக்கு ஏற்கனவே ரூ.200 குறைவாக சிலிண்டர் விநியோகிக்கப்படுகிறது. அவர்களுக்கு தற்போது  மேலும், 200 ரூபாய் குறையும் எனவும் அனுராக் தாக்கூர் கூறினார். இது பாஜகவின் கண் துடைப்பு முயற்சி என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். கடந்த 9 ஆண்டுகளில் ரூ.800 வரை விலை ஏற்றிவிட்டு ரூ.200 குறைத்தால் நியாயமா என சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர். ரூ.200 குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்ததால்  சிலிண்டர் ரூ. 918 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 


பிரதமர்  மோடி சிலிண்டர் விலை குறைப்பு குறித்து ட்விட்டர் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ரக்‌ஷா பந்தன் பண்டிகை நம் குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்கும் நாள். அதேபோல் எரிவாயு விலை குறைப்பு எனது  குடும்பத்தில் உள்ள சகோதரிகளின் வசதியை அதிகரித்து அவர்களின் வாழ்க்கையை எளிதாக்கும். என்னுடைய ஒவ்வொரு சகோதரியும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், ஆரோக்கியமாக இருக்க வேண்டும், மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், இதுவே கடவுளின் என் விருப்பம்” என தெரிவித்துள்ளார்.