வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.19 குறைக்கப்பட்டுள்ளதால் வியாபாரிகள் சற்று மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


ஒவ்வொரு மாதமும் சந்தை விலை நிலவரங்களுக்கு ஏற்ப வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் வணிக சிலிண்டர் விலையானது மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் வணிக சிலிண்டரை எடுத்துக் கொண்டால் கடந்த 3 மாதத்தில் ஏற்றம் இறக்கமாகவே காணப்படுகிறது. சென்னையில் மார்ச் 1 ஆம் தேதி வணிக சிலிண்டர் விலை ரூ.23.50 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.1,960 ஆக விற்பனை செய்யப்பட்டது. 


இதனைத் தொடர்ந்து மார்ச் 8 ஆம் தேதி மகளிர் தினத்தன்று வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.100 குறைக்கப்படுவதாக பிரதமர் மோடி தடாலடியான அறிவிப்பை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து பெட்ரோல்,டீசல் விலையும் ரூ.2 குறைக்கப்பட்டது. இது மக்களவை தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டை முன்வைத்தன. இருந்தாலும் இந்த விலை குறைப்பால் மக்கள் சற்று நிம்மதியடைந்தனர். 


இப்படியான நிலையில் தான் மக்களவை தேர்தல் தேதியானது அறிவிக்கப்பட்டது. 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு அதில் 2 கட்டங்கள் முடிவடைந்துள்ளது. 3வது கட்ட வாக்குப்பதிவு மே 7 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கிடையில் ஏப்ரல் 1 ஆம் தேதி சென்னையில் வணிக சிலிண்டர் விலை ரூ.30 குறைக்கப்பட்டது. இதனால் 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ.1,930க்கு  விற்பனை செய்யப்பட்டது. 


இந்நிலையில் மே 1 ஆம் தேதியான இன்று 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.19 குறைந்துள்ளது. இதனால் விலையானது ரூ.1,930ல் இருந்து ரூ.1,911 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.818 ஆக தொடர்ந்து அதே விலையில் நீடித்து வருகிறது. மேலும் பெட்ரோல்  ரூ.100.75ம், டீசல் விலை ரூ.92.34 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.