5 மாநில தேர்தலுக்கு பின் பெட்ரோல், டீசல் விலை சர்ரென ஏறியது. பெட்ரோல் 110 ரூபாயை தாண்டியும், டீசல் 100 ரூபாயை தாண்டியும் சென்றுகொண்டிருக்கிறது. அவ்வப்போது மாற்றம் இல்லாமல் இருந்தாலும் வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவதுபோல சத்தமில்லாமல் விலையை ஏற்றுகின்றன எண்ணெய் நிறுவனங்கள். இதனால் அனைத்து தரப்பினருமே பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்களின் கீழ் வாடகை கார் ஓட்டுபவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர்.
பழைய கட்டண முறையே தொடர்வதாகவும் இதனால் நஷ்டம் ஏற்படுவதாகவும் வருத்தம் தெரிவித்தனர். பயணியிடமே அதிகமாக பணம் கேட்பது, எரிபொருளை மிச்சப்படுத்த ஏசியை ஆன் செய்யாமல் இருப்பது போன்ற வேலைகளையும் செய்தனர். இதனால் பல இடங்களில் ஓட்டுநருக்கும் பயணிகளுக்கும் இடையே வாக்குவாதமும் ஏற்பட்டது. இது இப்படி இருக்க டெல்லியில் ஓலா, ஊபர் நிறுவன ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்திலும் ஈடுபட்டனர்.
விலை உயர்கிறது..
மும்பை, கொல்கத்தா ஆகிய நரகரங்களை தொடர்ந்து சென்னையிலும் ஓலா, ஊபர் நிறுவனங்களில் வாடகை கார் வாடகையை உயர்த்த வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எரிபொருள் விலையேற்றத்தால் சுமார் 10 முதல் 14% வரை விலையேற்றம் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அதன்படி கிலோ மீட்டருக்கு ரூ.2 முதல் 10 ரூபாய் வரை அதிகரிக்கப்படலாம் என கணிக்கப்படுகிறது.
இது குறித்து தெரிவித்த உபேர் இந்தியா மற்றும் தெற்காசியாவின் மத்திய செயல்பாடுகளின் தலைவர், ஓட்டுநர்களிடம் இருந்து தொடர்ந்து வரும் கோரிக்கைகளில் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதேபோல் எரிபொருல் விலையேற்றத்தையும் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. இதனை அடுத்தே சென்னையில் 10% வரை வாடகை ஏற்றுவது நடைமுறைக்கு வரவுள்ளது. தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
இது குறித்து ஓலா தரப்பில் இருந்து தகவல் ஏதும் இதுவரை வரவில்லை என்றாலும் ஓலா மினி, பிரைம்க்கு கிலோமீட்டருக்கு ரூ.17 முதல் 20 வரை வசூலிக்கப்படும் என்று தெரிகிறது. முன்னதாக மினி மற்றும் ப்ரைம் ரக கார்களுக்கு கிமீட்டருக்கு ரூ.15 முதல் 18 வரை வசூலிக்கப்பட்டது.க்ஷ்
இது ஒருபுறம் இருக்க சென்னையில் ஓபா, ஊபரில் ஓட்டுநர்கள் தட்டுப்பாடு நிலவுவதாகவும் கூறப்படுகிறது. பல ஓட்டுநர்கள் ஊட்டி கொடைக்கானல் போன்ற சுற்றுலாதளங்களுக்கு வாடகைகார் ஓட்ட சென்றுவிட்டதாகவும், பலர் ஊபர், ஓலாவில் இருந்து வெளியேறிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலையும் உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Car loan Information:
Calculate Car Loan EMI