மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கவாரியத்தின் தலைவரான விவேக் ஜோரி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, இந்தியாவில் இருந்து உள்ளூர் உற்பத்தி மற்றும் கொள்முதல் செய்வதற்கான திட்டத்தை மத்திய அரசே கேட்ட பிறகும், டெஸ்லா அதற்கான திட்டத்தை முன்வைக்கவில்லை. வரிகளை மறுசீரமைக்க வேண்டுமா? என்று நாஙகள் பார்த்தோம். ஆனால், தற்போதைய உள்நாட்டு உற்பத்தி, முதலீடுகள் மூலமாக வரவுகள் வந்துள்ளன. எனவே, இது ஒரு தடையல்ல என்பது தெளிவாகிறது.
மின்சார வாகனங்களுக்கான உள்ளூர் திறனை வளர்ப்பதில் முதலீடு செய்யும் மஹிந்திரா மற்றும் மஹிந்திரா லிமிடெட் மற்றும் டாடா மோட்டார்ஸ் லிமிடெட் போன்ற உள்நாட்டு நிறுவனங்களை டெஸ்லா பின்பற்ற வேண்டும். தற்போதைய கட்டணக் கட்டமைப்பில் ஏற்கனவே சில முதலீடுகள் வந்துள்ளன. ஏன் மற்றவர்களும் உள்ளே வரக்கூடாது. தற்போதைய கட்டண அமைப்புடன் நாட்டில் விற்கப்படும் பிற வெளிநாட்டு பிராண்டுகளும் உள்ளன” என்றார்.
முன்னதாக, இந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய நிதிநிலை அறிக்கையில், இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களுக்கு வரிச்சலுகைகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. உலகின் மிகப்பெரிய பணக்காரரும், நிஜ உலகின் அயர்ன்மேன் என்றும் அழைக்கப்படுபவர் எலான் மஸ்க். இவரது புகழ்பெற்ற டெஸ்லா நிறுவனம் மின்சார கார்களை தயாரித்து வருகிறது. உலகம் முழுவதும் டெஸ்லா காருக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது. இந்தியாவில் டெஸ்லா காரின் உற்பத்தி எப்போது தொடங்கும் என்று அனைவரும் ஆவலுடன் உள்ளனர்.
இதுதொடர்பாக இந்தியர்கள் பலரும் டெஸ்லாவின் உரிமையாளர் எலான் மஸ்க்கிடம் இந்தியர்கள் பலரும் டுவிட்டர் வாயிலாக கேட்டபோது, அவர் இந்தியாவில் அதிகளவு வரி விதிக்கப்படுவதன் காரணமாகவே இந்தியாவில் டெஸ்லா தொடங்க முடியவில்லை என்று விளக்கமளித்திருந்தார். மேலும், இந்தியாவில் இறக்குமதி கார்களுக்கு ஒரே மாதிரி வரி விதிக்கப்படுகிறது. 40 ஆயிரம் டாலர்களுக்கு கீழே உள்ள கார்களுக்கு 60 சதவீதமும், இதற்கு மேலே விலையுள்ள கார்களக்கு 100 சதவீதமும் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. இந்த வரி விகிதம் மிகவும் அதிகம். அதனால், கணிசமாக குறைக்க வேண்டும். பெட்ரோல் மற்றும் டீசல் கார்களுக்கு விதிக்கப்படும் வரிவிகிதம் மின்சார கார்களுக்கு இருக்கக்கூடாது. வரி விகிதம் 40 சதவீதம் 60 சதவீதமாக இருக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும், அவரது கோரிக்கைக்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை.
இருப்பினும், டெஸ்லா நிறுவனத்திற்கு தேவையான அனைத்து வசதிகளும், நிதி உதவிகளும் செய்து தருவதாக தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநில அரசுகள் அழைப்பு விடுத்தன. ஆனாலும், டெஸ்லா நிறுவனம் இதுவரை யாருடைய அழைப்பையும் ஏற்கவில்லை.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு மின்சார வாகனங்களையும், அதன் உற்பத்தியையும் ஊக்குவிப்பதாக கூறினாலும் மத்திய அரசின் வரி காரணமாகவே புகழ்பெற்ற டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் கால்பதிக்காமல் இருப்பது கலவையான விமர்சனங்களை எழுப்பி வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்