2026- 2027ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதனை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு துறைந்த முக்கிய அறிவிப்புகளும், தொலைநோக்கு பார்வைக்கான திட்டங்கள் தொடர்பான தகவல்களும் வெளியானது. இப்படியான நிலையில் மத்திய பட்ஜெட் தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்த கருத்துகளைக் காணலாம். 

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், வளர்ந்த இந்தியா என்ற இலக்கை எட்டும் வகையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. நிதிநிலை அறிக்கையில் எடுக்கப்பட்ட அறிக்கைகள் நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்தும். நாட்டு மக்களின் தொழில் திறனை வளர்க்க நிர்மலா சீதாராமன் முக்கியத்துவம் அளித்துள்ளார் என தெரிவித்துள்ளார். பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கான திட்டங்களும் இல்லை. திருக்குறளும் இல்லை. மத்திய பட்ஜெட் ஏமாற்றமளிக்கிறது. தமிழ்நாட்டின் அடிப்படை வளங்களை சுரண்டும் பட்ஜெட் என தமிழக எம்.பி., கனிமொழி தெரிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட் குறித்து மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறுகையில், "இந்திய பொருளாதாரத்தின் ஒவ்வொரு துறையிலும் கவனம் செலுத்தும் ஒரு முற்போக்கான பட்ஜெட்டாகும். இது ஒவ்வொரு குடிமகனுக்குமான பட்ஜெட். குறிப்பாக, தொலைத்தொடர்பு உள்ளிட்ட துறைகள் இந்த பட்ஜெட்டில் வலுவான உத்வேகத்தைப் பெற்றுள்ளன. இது இந்தியாவுக்கு அதிகாரம் அளித்து, சக்தியூட்டுவதாக இருக்கும்” என தெரிவித்துள்ளார். 

பட்ஜெட்டில் வெளியாகியுள்ள அறிவிப்புகள் தொழில்துறை வளர்ச்சியை துரிதப்படுத்தும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்புகள் இந்தியாவின் மீள்தன்மை மற்றும் விக்ஸித் பாரதத்தை நோக்கிய பயணத்திற்கு சக்தி அளிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு அரசை மத்திய அரசு வஞ்சித்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை விமர்சனம் செய்துள்ளார்.  தமிழ்நாட்டுக்கு என எந்தவொரு பெரிய திட்டமும் அறிவிக்கப்படவில்லை. தேர்தலுக்காக கூட எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ரயில் வழித்தட அறிவிப்பில் மட்டும் சென்னை உள்ளது. ஆனால் தமிழ்நாட்டுக்குள் எந்தவித ரயில் திட்டமும் இல்லை என விசிக எம்.பி., ரவிகுமார் கூறியுள்ளார். 

நாடு முழுவதுமுள்ள ஒரு கோடி தென்னை விவசாயிகளுக்குப் பலனளிக்கும் வகையில், தேங்காய் விளைச்சலை ஊக்குவித்து, உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டத்தை மத்திய நிதிநிலை அறிக்கையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளது வரவேற்பிற்குரியது. 2030-ஆம் ஆண்டுக்குள் இந்திய முந்திரியை உயர்மதிப்புமிக்க உலகளாவிய பிராண்டாக (Premium global brand) மாற்ற முயற்சி எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது மகிழ்ச்சி என தமிழக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.