Union Budget 2024: ஏஞ்சல் வரியை ஒழிப்பதன் மூலம், தொழில்துறையில் ஏற்படப்போகும் மாற்றங்கள் என்ன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
ஏஞ்சல் வரி ரத்து:
இந்திய ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்தும் முயற்சியில், அனைத்து வகை முதலீட்டாளர்களுக்கும் ஏஞ்சல் வரியை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பான உரையில், “இந்திய ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்தவும், தொழில் முனைவோர் உணர்வை அதிகரிக்கவும், புதுமைகளை ஆதரிப்பதற்காகவும், அனைத்து வகை முதலீட்டாளர்களுக்கும் ஏஞ்சல் வரி என்று அழைக்கப்படும் வரியை ரத்து செய்ய முன்மொழிகிறேன்” என அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
ஏஞ்சல் வரி என்றால் என்ன?
பங்குச்சந்தையில் பட்டியலிடப்படாத இந்திய முதலீட்டாளர்களின் நிறுவனங்கள் வெளியிட்ட பங்குகள் மூலம் திரட்டப்பட்ட நிதியானது, நிறுவனத்தின் நியாயமான சந்தை மதிப்பை விட அதிகமாகக் காணப்பட்டால், திரட்டப்பட்ட மூலதனத்திற்கு விதிக்கப்படும் வரி ஏஞ்சல் வரி எனப்படுகிறது. அதிகப்படியான நிதி திரட்டல் வருமானமாக கருதப்பட்டு அதற்கேற்ப வரி விதிக்கப்படுகிறது. அதிகபட்சமாக 30 சதவிகிதம் வரை வரி விதிக்கப்படுகிறது.
ஸ்டார்ட்-அப்களில் தாக்கத்தை ஏற்படுத்திய ஏஞ்சல் வரி:
புதிய ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் பெரும்பாலும் நிதிக்காக கட்டமைக்கப்படுகின்றன. அப்படி இருக்கையில், அவற்றின் செயல்பாட்டுச் செலவுகளுக்கு மேல் வரிச்சுமையைக் கையாள்வது கூடுதல் சவாலாக இருந்தது. பங்குகளின் "நியாயமான சந்தை மதிப்பு" மீது செலுத்தப்படும் எந்தவொரு கூடுதல் தொகைக்கும் வரி விதிக்கப்படுகிறது. இது ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் மற்றும் வரி அதிகாரிகளுக்கு இடையேயான மதிப்பீட்டில் கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தியது.
வரி தாக்கங்கள் முதலீட்டாளர்களிடயே, ஸ்டார்ட்அப்களில் முதலீடு செய்வதில் தயக்கத்தை ஏற்படுத்தியது. இந்த சூழலில் ஏஞ்சல் வரி நீக்கப்பட்டு இருப்பது, ஸ்டார்ட்-அப் முதலீட்டிற்கு மிகவும் ஆதரவான சூழலை வளர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்த ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழலுக்கும் பயனளிப்பதோடு, இந்தியா ஒரு உலகளாவிய கண்டுபிடிப்பு மையமாக மாறவும் வழி வகுக்கும் என நம்பப்படுகிறது.
துறை சார் வல்லுநர்கள் சொல்வது என்ன?
ஏஞ்சல் வரி ரத்து தொடர்பாக Delphin Varghese நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை வருவாய் அதிகாரி பேசுகையில் "இந்தியாவின் வளர்ந்து வரும் ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழலின் பயணத்தில் இது ஒரு பெரிய நகர்வாக பார்க்கப்படுகிறது. ஏஞ்சல் வரி ஸ்டார்ட்-அப் முதலீடுகளுக்கு நீண்ட கால பிரச்னையாக இருந்து வந்தது.
இந்நிலையில், அது ரத்து செய்யப்பட்டு இருப்பது பல்வேறு துறைகளில் புதுமை மற்றும் தொழில்முனைவு இரண்டையும் வளர்க்கும். இதன் மூலம் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய பயணத்தில் இந்தியாவுக்கு சிறந்த வேகத்தை அளிக்கும்” என தெரிவித்துள்ளார். இதேபோன்று ஸ்டார்ட்-அப் துறையை சேர்ந்த பல்வேறு தரப்பினரும், ஏஞ்சல் வரியை ரத்து செய்த மத்திய அரசின் நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.