Budget 2023: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2023 -24ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டினை தாக்கல் செய்தார்.


அதில் இந்தியா தொடர்ந்து முன்னேற்றப்பாதையில் சென்று கொண்டுள்ளது என குறிப்பிட்டு பேசிய அவர், மீனவர்கள் நலம் மற்றும் மேம்பாட்டிற்காக ரூ 6,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். 


மீனவர்கள், மீன் விற்பனையாளர்கள் மற்றும் குறு மற்றும் சிறு தொழில்களின் செயல்பாடுகளை மேலும் செயல்படுத்தவும், மீன்பிடி தொழிலை  மேம்படுத்தவும், விரிவாக்கம் செய்யவும் ரூ 6,000 கோடி முதலீட்டில் பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனாவின் புதிய துணைத் திட்டத்தை அரசாங்கம் தொடங்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.


முக்கிய அம்சங்கள்:



  • அடுத்த ஓராண்டுக்கு 80 கோடி குடும்பங்களுக்கு இலவச உணவு தானியங்களை மத்திய அரசு வழங்கும்

  • பெண்கள், பட்டியலின, பழங்குடியின, இளைஞர்கள் நலனை கருத்தில் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

  • உணவு தானிய விநியோகத்திற்கு 2 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • 7 முக்கிய அம்சங்களுடன் வரும் நிதியாண்டிற்கான பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

  • ஒருங்கிணைந்த வளர்ச்சி, கடைக்கோடி மனிதருக்கும் சேவை, உள்கட்டமைப்பு, திறன் மேம்பாடு, பசுமை வளர்ச்சி, இளைஞர் நலன் உள்ளிட்ட 7 அம்சங்களுக்கு முக்கியத்துவம்

  • பா.ஜ.க. ஆட்சியில் இந்திய பொருளாதாரம் 10வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

  • நாடு முழுவதும் 157 புதிய நர்சிங் கல்லூரிகள் உருவாக்கப்படும்.

  • மருத்துவ துறையில் ஆய்வுகளை ஊக்குவிப்பதற்கு புதிய திட்டங்கள் உருவாக்கப்படும்

  • தேசிய டிஜிட்டல் நூலகம் மேம்படுத்தப்படும்.

  • கொரோனா காலத்தில் ஏற்பட்ட கற்றல் இழப்பை குறைப்பதற்காக நாடு முழுவதும் பிராந்திய மற்றும் ஆங்கில மொழிகளில் டிஜிட்டல் நூலகங்கள் அமைக்கப்படும்

  • 2047ம் ஆண்டில் இந்தியாவில் 0-40 வயது வரையிலான மக்களுக்கு ரத்த சோகையை முற்றிலும ஒழிக்கும் திட்டங்கள் அமல்படுத்தப்படும்

  • பழங்குடியின மக்கள் வசிக்கும் ஏகலைவா மாதிரிப் பள்ளிகளில் அடுத்த 3 ஆண்டுகளில் 38 ஆயிரம் புதிய ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.

  • ஏகலைவா பள்ளியில் ஆசிரியர்கள் நியமனம் மூலம் 3.5 லட்சம் பழங்குடியின மாணவர்கள் பயனடைவார்கள்.

  • அரசு ஊழியர்கள் தங்களது திறனை வளர்த்துக் கொள்வதற்காக இணையதளம் மூலம் கற்பிக்கும் கர்மயோகி திட்டம்

  • நகர்ப்புற வளர்ச்சிக்கு ரூபாய் 10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

  • கழிவு நீர் அகற்றும் பணியில் மனிதர்களை பயன்படுத்துவதற்கு பதில் 100 சதவீத இயந்திரங்களை பயன்படுத்த முடிவு

  • திணை உற்பத்தியில் இந்தியா 2வது மிகப்பெரிய ஏற்றுமதியாளராக திகழ்கிறது.

  • அனைத்து அரசு சேவைகளுக்கும் அடையாள ஆவணமாக பான் அடையாள அட்டை எண்ணை பயன்படுத்தலாம்

  • ரூபாய் 700 கோடி ரூபாய் மதிப்பில் ஆன்லைன் நீதிமன்றங்கள் உருவாக்கப்படும்.

  • போக்குவரத்து திட்டங்களை நிறைவேற்ற ரூபாய் 75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு

  • நாடு முழுவதும் 3 செயற்கை நுண்ணறிவு ஆய்வு மையங்கள் அமைக்கப்படும்

  • சிறு, குறு, தொழில் நிறுவனங்களுக்கான தனி டிஜிலாக்கர் முறை உருவாக்கப்படும்.

  • ஆதார் கார்டு, பான் கார்டு, டிஜி லாக்கர் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

  • 5ஜி மொபைல் செயலி உருவாக்க 100 ஆய்வகங்கள் உருவாக்கப்படும்.

  • ரசாயன உர பயன்பாட்டை குறைக்க கோவர்த்தன திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.

  • மாசு ஏற்படுத்தும் பழைய வாகனங்கள் அகற்றும் திட்டத்திற்கு கூடுதல் நிதி

  • அடுத்த 3 ஆண்டுகளில் 47 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

  • பசுமை எரிசக்தி நடைமுறைக்கு ரூபாய் 35 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

  • சிறு, குறு நடுத்தர தொழில்களுக்கு கடன் வழங்க ரூபாய் 9 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

  • சிறு, குறு தொழில்களுக்கான கடன் வட்டி 1 சதவீதமாக குறைக்க நடவடிக்கை

  • 5 சதவீத வட்டியில் பெண்களுக்கான சேமிப்புத் திட்டம்

  • நாட்டின் வரி வருவாய் 23.3 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும்

  • நாட்டின் நிதி பற்றாக்குறை 5.9 சதவீதமாக இருக்கும்

  • செல்போன் மற்றும் தொலைக்காட்சி உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது

  • சிகரெட்களுக்கு கூடுதல் வரி விதிப்பு

  • தனி நபர் வருமான வரி விதிப்பு உச்சவரம்பு 2.5 லட்சத்தில் இருந்து 3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.


ஆகிய அம்சங்கள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது.