அதிரிபுதிரி அறிவிப்புகள் இருக்கும், 5 மாநில தேர்தல் இருப்பதால், திட்டங்கள் தட்டிவிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வரி கட்டுபவர்களுக்கு நன்றி சொல்கிறேன், அவர்களுக்காக கை தட்டுகிறேன் என சொல்லி தனது பட்ஜெட் உரையை நிகழ்த்தி முடித்திருக்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.



மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்


மக்களவை சரியாக 11 மணிக்கு கூடியதும் 11.02 மணிக்கு அனைவருக்கும் இருகரம் கூப்பி வணக்கம் சொல்லி தனது உரையை தொடங்கிய நிர்மலா சீதாராமன், தனது உடையில் முதலில் மைக்கை மாட்ட மறந்துவிட்டார். பின்னர் பேசத் தொடங்கிய அவர் கொரோனா பெருந்தொற்றால் உடலாலும் பொருளாதார ரீதியிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது அனுதாபங்களை கூறினார்.




11 மணி 7 நிமிடங்களில் AIR INDIA பங்குகளை வெற்றிகரமாக பங்குதாரருக்கு மாற்றிவிட்டதாகவும் அடுத்து LIC தான் எனவும் அவர் சொன்னபோது எதிர்க்கட்சியினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்முறையாக குரல் எழுப்பினர். அதன்பின்னர், 5 ஜி ஸ்பெக்ட்ரம்  ஏலம் தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு விடப்படும் என அவர் அறிவித்தபோது, BSNL என்ன ஆனது..? என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீண்டும் முழக்கமிட்டனர். ஆனால், அதை கண்டுக்கொள்ளாத நிதி அமைச்சர் நிர்மலா, தனது உரையை தொடர்ந்து வாசித்தார்.


அதேபோல், அவரது பேச்சின்போது முக்கியமான அறிவிப்புகளுக்கு பிரதமர் மோடி உள்பட ஆளுங்கட்சியினர் மேசையை பலமாக தட்டி தங்களது ஆதரவை தெரிவித்தனர். துறை ரீதியான அறிவிப்புகளை அவர் வெளியிடும்போது, அந்தந்த துறைக்கான மத்திய அமைச்சர்கள் கேமராவில் காட்டப்பட்டனர்.


குறிப்பாக அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, ஸ்மிருதி ராணி உள்ளிட்டோர் முகம் அடிக்கடி தொலைக்காட்சியில் வரும்படி பார்த்துக்கொள்ளப்பட்டது.  சரியாக 11.02க்கு தனது உரையை தொடங்கிய நிர்மலா, ஒரு மணி நேரம் 31 நிமிடங்கள் தொடர்ந்து வாசித்து, 12.33 மணிக்கு  தனது முடித்தார்.


அவசரமாக பட்ஜெட்டை படிக்காமல் மெதுவாகவும், தெளிவாகவும், தனக்கே உரிய ஆங்கில உச்சரிப்புடனும் நிதி நிலை அறிக்கையை வாசித்த அவர், இடையே 2 முறை குளுக்கோஸ் கலந்து வைக்கப்பட்டிருந்த தண்ணீரை குடித்தார். 11 மணி 46 நிமிடத்தில் பாரத் நெட் திட்டம் பற்றி பேசும்போது அவர் முதலாவதாக தண்ணீர் அருந்தினார். பின்னர் 12 மணி 5 வது நிமிடத்தில் மீண்டும் ஒருமுறை தண்ணீர் குடித்தார்.


மாநிலங்களுக்கு 1 லட்சம் கோடி வட்டியில்லாத கடன் தரப்படும் என நிர்மலா அறிவித்தபோது, எதிர்க்கட்சியினர் சரியாக கேட்கவில்லை என சத்தம் எழுப்ப, அவர்களுக்காக மீண்டும் அந்த வாசகத்தை படித்தார். அப்போது அருகே இருந்த டிஷ்யூ பேப்பரை எடுத்து முகத்தை துடைத்துக்கொண்டார்.


பின்னர், அவருக்கான கோப்பையில் தண்ணீர் ஊற்றி நிர்மலா அருகே உறுப்பினர் தள்ளி வைக்கும்போது கண்ணாடி டம்ளர், குவளை உரசி சத்தம் ஏற்பட்டது. காகிதமில்லாத பட்ஜெட் என்பதால், கையடக்க கணிணியில் தனது உரையை வாசித்த அவர், ஜி.எஸ்.டி குறித்து பேசும்போது காகிதத்தை பயன்படுத்தினார். அவர் எடுத்து வந்த பேப்பரில் டைப் செய்திருந்த விவரங்களை தனது அருகே வைத்துக்கொண்டவர்,  இது தன்னுடைய உரையில் இல்லை என்றும், காலையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் இதை கொண்டு வந்துள்ளேன் எனவும் கூறி, கடந்த ஜனவரி மாசத்தில் மட்டும் ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 986 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி தொகை வசூலிக்கப்பட்டதாக தெரிவித்தார்.  இதற்கு ஆளுங்கட்சி எம்.பிக்கள் மேசையை பலமாக தட்டி ஆரவாரம் செய்தனர்.


கடந்த 2019 ஆம் ஆண்டு நிதி அமைச்சராக பதவியேற்ற நிர்மலா சீதாரமன், அந்த ஆண்டில் தான் தாக்கல் செய்த பட்ஜெட் உரையில் ’யானை புகுந்த நிலம்’ என்ற பிசிராந்தையாரின் புறநானூற்று பாடலை மேற்கோள்காட்டி பேசினார். 2020ல் பூமி திருத்தி உண்  என்ற ஆத்திச்சூடி வரிகளையும், கடந்த 2021ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கலின்போது ’இயற்றலும் ஈட்டலுங் காத்தலும்’ என்ற திருக்குறளை சுட்டிக் காட்டி தனது உரையை வாசித்தார்.


அதனால், இந்த முறை தனது 4வது பட்ஜெட் தாக்கலின்போது தமிழின் எந்த இலக்கியத்தை எடுத்து மேற்கோள் காட்டப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், தமிழை தொடாமல், மகாபாரதத்தின் ‘சாந்தி பருவ’ அத்தியாய வரிகளை சுட்டிக்காட்டி மட்டும் பேசியுள்ளார் நிர்மலா. 2019ஆம் ஆண்டில் 2 மணி நேரம் 17 நிமிடங்களும், 2020ஆண்டில் 2 மணி நேரம் 42 நிமிடங்களும் தனது பட்ஜெட் உரையை வாசித்த நிர்மலா சீதாராமன், இந்த முறை ஒரு மணி நேரம் 31 நிமிடங்களில் தனது நிதி நிலை அறிக்கை உரையை வாசித்து முடித்திருக்கிறார்.