TN Budget 2026: குறிவைக்கப்படும் வாக்காளர்கள், எகிறும் எதிர்பார்ப்புகள்.. இடைக்கால பட்ஜெட்டில் சாதிக்குமா திமுக?
Tamil Nadu Interim Budget 2026: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தாக்கல் செய்யப்படும் இன்றைய இடைக்கால பட்ஜெட்டில், வாக்காளர்களை குறிவைத்து திமுக அரசு பல முக்கிய அறிவிப்புகளை வெளியிடக்கூடும்.

Tamil Nadu Interim Budget 2026: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தாக்கல் செய்யப்படும் இன்றைய இடைக்கால பட்ஜெட் மீது, நிலவும் எதிர்பார்ப்புகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசு - இடைக்கால பட்ஜெட்..
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு,திமுக தலைமையிலான அரசு அடுத்த நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. தேர்தல் முடிவுக்குப் பின் புதியதாக அமையும் அரசு 2026-27 நிதியாண்டிற்கான விரிவான பட்ஜெட்டை தாக்கல் செய்யும். நிதியமைச்சர் தங்கம் தென்னரசு முதன்முறையாக இடைக்கால பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்ய உள்ளார். காலை 9.30 மணிக்கு அவரது உரை தொடங்க உள்ளது. தேர்தல் நடைபெற உள்ளதை கருத்தில் கொண்டு, வாக்காளர்களை கவரும் விதமாக பல முக்கிய அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பெண்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களை கவரும் விதமான புதிய திட்டங்களும் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாம்.
இடைக்கால பட்ஜெட் எதிர்பார்ப்புகள்:
தேர்தலை முன்னிட்டு தாக்கல் செய்யப்படும் இடைக்கால பட்ஜெட்டுகளில், வாக்காளர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமான கவர்ச்சிகர திட்டங்கள் இடம்பெறுவது என்பது வழக்கமே. ஏற்கான்வே பொங்கல் பரிசாக 3000 ரூபாய் மற்றும் 3 மாதங்களுக்கான மகளிர் உரிமைத்தொகையை முன்கூட்டியே வங்கிக் கணக்கில் வைப்பு வைத்தது போன்ற அரசின் செயல்பாடுகள் மகளிர் வாக்காளர்களை திமுக பக்கம் ஈர்த்துள்ளன. இதனை மேலும் வலுப்படுத்தும் விதமாக விலைவாசியை குறைப்பதற்கான நடவடிக்கைகள், நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்புகள் ஏதேனும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, விவசாய கடன் தள்ளுபடி போன்ற அறிவிப்புகளும் இடம்பெற வேண்டும் என வெகுஜன பிரிவை சேர்ந்த மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
எடப்பாடிக்கு ஷாக் கொடுப்பாரா ஸ்டாலின்?
தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்து விட வேண்டும் என தீர்மானத்தில் உள்ள திமுகவிற்கு, சவால் விடுக்கும் விதமாக பல அதிரடியான வாக்குறுதிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதன்படி,
- குடும்பை அட்டை வைத்திருக்கும் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ரூ.2000 உதவித்தொகை
- பெண்களை போன்று ஆண்களுக்கும் இலவச பேருந்து சேவை
- ஊரக வேலைவாய்ப்பு திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்
- அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டிற்கு 3 இலவச எரிவாயு சிலிண்டர்கள்
- மாணவர்கள் பெற்றுள்ள கல்விக்கடன் தள்ளுபடி
- கூட்டுறவு வங்கிகளில் மாற்றுத்திறனாளிகள் பெற்றுள்ள கடன் தள்ளுபடி செய்யப்படும்
- ஜல்லிக்கட்டின் போது உயிரிழக்கும் வீரர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி
- வீடற்ற ஏழைகளுக்கு ஊரகப் பகுதிகளில் நிலம் வாங்கி கான்கிரீட் வீடுகளும், நகர்ப்புறங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளும் கட்டித் தரப்படும்
என அதிரடியான வாக்குறுதிகளை அளித்துள்ளார். இவற்றை ஈடுசெய்யும் வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் பல கவர்ச்சிகர திட்டங்கள் இடம்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, மீண்டும் திமுக ஆட்சி அமைந்தால் மகளிர் உதவித்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் என ஸ்டாலினும் அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
























