Tamil Nadu Budget 2026: தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் சென்னை மாநகராட்சியின் குடிநீர் மற்றும் மழைநீர் தொடர்பான பல்வேறு திட்டங்களுக்கான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

Continues below advertisement

தமிழ்நாடு அரசு பட்ஜெட் - சென்னைக்கான அறிவிப்புகள்

முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசின் முதல் பட்ஜெட்டை, நிதியமைச்சர் மரிய வில்சன் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் முக்கிய திட்டங்கள் தொடர்பான விவரங்கள் இடம்பெற்று இருந்தன. அந்த வகையில் சென்னையின் பிரதான பிரச்னைகளான குடிநீர், மழைநீர் வடிகால், போக்குவரத்து நெரிசல், எதிர்கால வளர்ச்சியை கொண்டு நகரை மறுசீரமைப்பது தொடர்பான பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அந்த வகையில் வெளியான சில முக்கிய திட்டங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Continues below advertisement

சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான திட்டங்கள்:

சென்னை விரிவாக்க திட்டம்

பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள அறிவிப்பின்படி, “சென்னை பெருநகரப் பகுதியின் விரைவான விரிவாக்கத்தைக் கருத்தில் கொண்டும், ஒருங்கிணைந்த திட்டமிடலின் தேவையை உணர்ந்தும் 5,904 சதுர கி.மீ. பரப்பளவில், விரிவுபடுத்தப்பட்ட சென்னை பெருநகரப் பகுதிக்கான ஓர் விரிவான முழுமைத் திட்டத்தை (Comprehensive Master Plan) அரசு தயாரிக்கும். இத்திட்டமானது,நீண்டகால வளர்ச்சி மற்றும் மாற்றத்திற்கான ஒரு வரைபடமாகச் செயல்படும். மேலும், இந்த முழுமைத் திட்டம் உலகளாவிய சிறந்த நடைமுறைகள் மற்றும் சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட பெருநகரத் திட்டமிடல் கட்டமைப்புகளுடன் ஒப்பிடப்பட்டு தரம் மதிப்பிடப்படும். இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்த அரசு 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 சென்னை போக்குவரத்தை மேம்பாடுத்தும் திட்டம்

நகர்ப்புரப் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில், சென்னை காவல்துறை மற்றும் பெருநகரப் போக்குவரத்துக் கழகத்துடன் இணைந்து பெருநகர சென்னை மாநகராட்சியின் நுண்ணறிவுப் போக்குவரத்து மேலாண்மை அமைப்பு இறுதிக்கட்ட செயலாக்கத்தில் உள்ளது. மேலும், பாதசாரிகளுக்கான கட்டமைப்பு வசதி, அனைவரும் சமமாக அணுகக்கூடிய வசதி மற்றும் நகர்ப்புர வடிவமைப்பு மேம்பாடு ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளித்து, விரிவான நகர்ப்புரப் போக்குவரத்து வசதிகள் மற்றும் தெருக்கள் மறுசீரமைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் ஒரு பகுதியாக, 20 இடங்களில் திறன்மிகு வாகன நிறுத்துமிட மேலாண்மை (smart parking management) அமைக்கப்படுவதுடன், அம்பத்தூர் மற்றும் கிண்டி தொழிற்பேட்டைகளின் சாலைகள் மறுவடிவமைக்கப்படும். சென்னையின் பசுமைப் பரப்பை மேம்படுத்தி, மக்களை மையமாகக் கொண்ட பொது இடங்களை உருவாக்கும் வகையில், குடியிருப்புப்பகுதிகள் மற்றும் முக்கிய வழித்தடங்களின் நடைபாதைகள் அழகுபடுத்தப்பட்டு பசுமையாக்கப்படும்.

பேரிடர் மீட்பு நடவடிக்கைகள்

சென்னையை ஒரு நிலையான மற்றும் பேரிடர் காலங்களில் விரைந்து மீளும் தன்மையுள்ள நகரமாக மாற்றுவதற்கான தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதியாக, பல்வேறு இடங்களில் நீர் நிலைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில், பசுமை உட்கட்டமைப்பிற்கான மேம்பாட்டுத் திட்டங்கள் மேற்கொள்ளப்படும். நகர்ப்புர வெள்ளப் பாதிப்புகளைத் தடுப்பதற்கு முக்கிய நீர்வழித் தடங்களின் கொள்ளளவை அதிகரிக்கும் பொருட்டு வெள்ளத்தடுப்புச் சுவர்களின் உயரம் உயர்த்தப்பட்டு, சங்கிலி இணைப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் சுற்றுச்சூழல் வளங்கள் பாதுகாக்கப்படுவதுடன், நிலையான சமூகப் பயன்பாட்டு இடங்கள் உருவாக்கப்படும்.

இதையும் படியுங்கள்: TN Budget 2026: சமூக நீதியை காப்பாற்றினாரா CM விஜய்? பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி என்ன? முக்கிய திட்டங்களின் லிஸ்ட்

சென்னையின் குடிநீர் ஆதாரம்

சென்னையில் உள்ள அனைத்து முக்கியக் குடிநீர் ஆதாரங்களையும் குடிநீர் விநியோக நிலையங்களுடன் இணைக்கும் முதன்மை சுற்றுக்குழாய் திட்டம் 3,108 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. 2030-31 ஆம் ஆண்டிற்குள் நிறைவடையும் வகையில் நடைபெற்று வரும் இத்திட்டப் பணிகள் முடிவடைந்த பின்னர், சென்னை மாநகரம் முழுவதும் சமமான மற்றும் தடையற்ற குடிநீர் விநியோகம் உறுதி செய்யப்படும். 

கூவம் & அடையாறு நதி மீட்பு

 சியோல் நகரத்தின் சியோங் - கியே -சியோன் (Cheonggyecheon) நதி, சிங்கப்பூர் நகரத்தின் கல்லாங் (Kallang) நதி போன்றவை நதிகள் மறுசீரமைப்பின் மூலம், அந்நகரங்களின் உலகளவில் பேசப்படும் அடையாளங்களாக மாறிவிட்டன. கூவம் மற்றும் அடையாற்றினை சென்னையின் அடையாளமாக மாற்றுவதற்கு உலகளாவிய ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, விரிவான சாத்தியக்கூறு அறிக்கை மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படும். கூவம் மற்றும் அடையாறு ஆறுகளில் பொதுமக்கள் படகு சவாரி செய்வதும், குழந்தைகள் ஆனந்தக் குளியலில் ஈடுபடுவதையும், அனைத்து வயதினரும் நதிக்கரையில் உடற்பயிற்சி செய்து தூய்மையான காற்றை சுவாசிப்பதையும் அரசு உறுதிசெய்யும்.

குளிர்சாதன பேருந்துகள்

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு குளிர்சாதன வசதிகளைக் கொண்ட 1,000 புதிய மின்சாரப் பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். பேருந்துப் பணிமனைகளில் மின்சாரப் பேருந்துகளுக்கான மின்சாரம் மற்றும் இயந்திரவியல் சார்ந்த வசதிகளை ஏற்படுத்துவதற்காக, திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

மெட்ரோ ரயில் திட்டங்கள்:

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 118.9 கி.மீ. நீளத்திலான மூன்று வழித்தடங்களைக் கொண்ட கட்டம்-IIன் பணிகள் 63,246 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் போரூர் சந்திப்பு வரையிலான தடத்தை, ஏற்கெனவே உள்ள வடபழனி மெட்ரோ நிலையத்துடன் இணைக்கப்படும் வகையில் 14.64 கி.மீ. நீளத்திலான, 11 மெட்ரோ ரயில் நிலையங்களைக் கொண்ட கட்டம்-II-ன் முதல் பகுதி, விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்படவுள்ளது. மாநில அரசால் பரிந்துரைக்கப்பட்ட பின்வரும் மெட்ரோ இரயில் திட்டங்கள் இந்திய அரசின் தீவிர பரிசீலனையின் கீழ் உள்ளன.

  • சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை.
  • ஆவடி வழியாக கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை
  • ஸ்ரீபெரும்புதூர் வழியாக பூந்தமல்லி முதல் சுங்குவார்சத்திரம் வரையிலான வழித்தடத் திட்டங்களுக்கு இந்திய அரசு விரைவான ஒப்புதல் வழங்குவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.