தமிழக அரசின் 2022-23ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து வருகிறார். சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டப்பேரவையில் இன்று காலை 10 மணிக்கு பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு பேச வாய்ப்பு அளிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வாய்ப்பு கேட்டார்.
ஆனால், சபாநாயகர் அப்பாவு பேசுவதற்கு வாய்ப்பு அளிக்க மறுத்தார். இதனால், அ.தி.மு.க.வினர் அமளியில் ஈடுபட்டனர். அ.தி.மு.க.வினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் நிதிநிலை அறிக்கையை படித்து வந்த நிதியமைச்சர் பட்ஜெட் வாசிப்பதை சில நிமிடங்கள் நிறுத்தி அமர்ந்தார்.
அதனைதொடர்ந்து, அதிமுக வெளிநடப்பு செய்ததால் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தொடர்ந்து வாசிக்க தொடங்கி பல்வேறு திட்டங்களுக்கு நிதியை ஒதுக்கீடு செய்தார். ஆரம்பம் முதலே நிதிநிலை அறிக்கையை வாசித்து வந்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தமிழில் திக்கி திணறி பேசி வந்தார். அவர் பேசிய ஒரு சில வார்த்தைகள் முடிவு பெறாமலும், ஒரு சில வார்த்தைகள் தெளிவாகவும் இல்லை. எப்படி தமிழில் அறிக்கையை திக்கி திணறி படிக்க தொடங்கினாரோ அதேபோல் இறுதிவரை அவரது உச்சரிப்புகள் தெளிவற்றதாகவே இருந்தது.
ஆங்கிலத்தில் பேச்சு :
பட்ஜெட் தாக்கல் முடிவு செய்வதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்பாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆங்கிலத்தில் பேசினார். அதில், தமிழக பட்ஜெட்டை சர்வதேச அளவில் கொண்டு சேர்க்க ஒரு பகுதி நிதி நிலை அறிக்கையை ஆங்கிலத்தில் நிதியமைச்சர் உரையாற்றினார்.
அப்பொழுது, நிதியமைச்சர் வாயில் இருந்து வெளிவந்த ஆங்கில வார்த்தை ஆற்றில் இருந்து பாய்ந்தோடும் வெள்ளமென பாய்ந்தது. ஆங்கில வார்த்தைகளை சரளமாக பேசி அசத்தினார். இவர் பேசிய ஆங்கில உரையாடல் ஆங்கிலேயர்களுக்கு இணையாக இருந்தது என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்