மீனவர்களை வஞ்சிக்கும் பட்ஜெட்! கார்ப்பரேட்களுக்கு கடலை தாரை வார்த்ததா அரசு? AITUC கண்டனம்.
2026–27 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்
AITUC மீனவர் சங்கம் அகில இந்திய துணைத் தலைவர் இராமேஸ்வரம் சி.ஆர். செந்தில்வேல், வெளியிட்டுள்ள செய்தியில். ”2026–27 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட், நாட்டின் சிறு மற்றும் நடுத்தர பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கத் தவறியதோடு, ‘நீலப் பொருளாதாரம்’ என்ற பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆழ்கடலை ஒப்படைக்கும் பட்ஜெட்டாக அமைந்துள்ளது. ஆழ்கடல் மீன்பிடித் துறையில் பெருநிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வரிச் சலுகைகள் மற்றும் வெளிநாட்டு துறைமுகங்களில் நேரடியாக மீன்களை விற்பனை செய்யும் அனுமதிகள், பாரம்பரிய மீனவர்களுடன் சமமற்ற போட்டியை உருவாக்கும் அபாயகரமான முடிவுகளாகும். இது பாரம்பரிய மீன்பிடித் தொழிலின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்குகிறது.
விசைப்படகு மீனவர்களை கடும் நஷ்டத்தில் தள்ளும் நடவடிக்கையாகும்.
பெரிய டிராலர் கப்பல்களுக்கு அளிக்கப்படும் ஊக்கங்கள், கடல் வளத்தை கட்டுப்பாடின்றி சுரண்டி, மீன்களின் இனப்பெருக்கத்தை அழிக்கும். ராட்சத வலைகள் மூலம் மீன்களின் முட்டைகள் மற்றும் சிறிய மீன்கள் அழிக்கப்படுவதால், கரைக்கடலில் மீன்பிடி செய்யும் சிறு மற்றும் நடுத்தர மீனவர்களுக்கு எதிர்காலத்தில் மீன்களே கிடைக்காத நிலை உருவாகும். விசைப்படகு மீனவர்களின் மொத்தச் செலவில் 60 முதல் 70 சதவீதம் வரை டீசலுக்கே செலவாகும் நிலையில், டீசல் மீது எந்த வரி விலக்கும், மானியமும் வழங்கப்படாதது, நடுத்தர விசைப்படகு மீனவர்களை கடும் நஷ்டத்தில் தள்ளும் நடவடிக்கையாகும். இதன் தொடர்ச்சியாக, மீன்பிடித் தொழிலைவிட்டு மீனவர்கள் விலகும் அபாயம் உருவாகியுள்ளது.
தமிழக மீனவர்களை ஒன்றிய அரசு கைவிட்டதற்குச் சமமானதாகும்
மேலும், கடலோரப் பகுதிகளில் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள கனிமச் சுரங்கத் திட்டங்கள், பவளப்பாறைகள், சதுப்புநிலக் காடுகள் மற்றும் பாரம்பரிய மீன்பிடித் தளங்களை அழிக்கும் சூழலியல் குற்றமாகும். இது கடல் அரிப்பையும், கடலோர கிராமங்களின் பாதுகாப்பற்ற நிலையும் அதிகரிக்கும். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் நடைபெற்று வரும் நிலையில், மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளுக்கான இழப்பீடு குறித்து இந்த பட்ஜெட் மௌனம் காத்துள்ளது. இது தமிழக மீனவர்களை ஒன்றிய அரசு கைவிட்டதற்குச் சமமானதாகும். எனவே கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆழ்கடலை ஒப்படைப்பதற்குப் பதிலாக, பாரம்பரிய மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடி தொடர்பான தொழில்நுட்பப் பயிற்சிகளை வழங்க வேண்டும். ஆழ்கடல் மீன்பிடிக்குத் தேவையான படகுகள், கருவிகள் மற்றும் உட்கட்டமைப்புக்காக மீன்பிடி களண் (Capital) வங்கி மானியம் வழங்க வேண்டும். விசைப்படகுகளில் பயன்படுத்தப்படும் டீசலுக்கு முழு வரி விலக்கு அளிக்க வேண்டும். கடலோர கனிமச் சுரங்கத் திட்டங்களை உடனடியாகக் கைவிட வேண்டும். இலங்கை கடற்படையால் சேதமடைந்த படகுகளுக்கு மத்திய அரசு நேரடி இழப்பீடு வழங்க வேண்டும்”. என தெரிவித்துள்ளார்.
