நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் கூட்டுறவு சங்கங்களுக்கான வரிகள் 18 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய மாநில அரசு ஊழியர்கள் தேசிய ஓய்வூதிய திட்டத்திற்கு செலுத்தும் தொகைக்கான டிடிஎஸ் வரம்பு 10 சதவிகிதத்திலிருந்து 14 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வருமான வரி விலக்கு தொடர்பாக எந்தவித அறிவிப்பும் இந்த முறை பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. பல்வேறு அறிவிப்புகளையும் இந்த பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்தது. மத்திய அரசின் இந்த பட்ஜெட் குறித்து பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
இந்த பட்ஜெட் குறித்து பதிவிட்ட ராகுல்காந்தி, "மோடி அரசின் இந்த பட்ஜெட் பூஜ்ஜிய பட்ஜெட். பட்ஜெட்டில் ஒன்றுமே இல்லை. நடுத்தர குடும்பத்தினர், ஏழைகள், இளைஞர்கள் பயன்ப்பெற இந்த பட்ஜெட்டில் எதுவுமே இல்லை. விவசாயிகளுக்கும், சிறு குறு தொழில் நிறுவனம் பயன்பெறவும் எதுவுமில்லை. மாதசம்பளம் பெறுபவர்கள் பயன்பெறவும் இந்த பட்ஜெட்டில் ஒன்றுமில்லை" எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பட்ஜெட் தாக்கலுக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த நிர்மலா சீதாராமன் ராகுல்காந்தியின் விமர்சனத்துக்கு பதில் அளித்தார். ”உபியில் இருந்து ஓடி வந்த எம்பி ராகுல்காந்தி. ராகுல்காந்தி குறிப்பிட்ட எல்லா கேட்டகிரியிலும் நான் எதாவது ஒரு அறிவிப்பை என் பட்ஜெட்டில் தெரிவித்துள்ளேன். கருத்தை மட்டுமே சொல்லத் தெரிந்த ஒரு தலைவரைக் கொண்ட ஒரு கட்சிக்காக நான் பரிதாபப் படுகிறேன். நான் விமர்சனத்துக்கு தயாராகவே இருக்கிறேன். ஆனால் எந்த புரிதலும் இல்லாத, சொந்த வேலையைக் கூட செய்யாத ஒருவரிடம் இருந்து வெளியாகும் விமர்சனத்தை எல்லாம் ஏற்க தயாரில்லை” என்றார்.
முன்னதாக மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்களின் தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) கணக்கில் உள்ள முதலாளியின் பங்களிப்பில் வரி விலக்கு வரம்பை 14 சதவீதமாக அதிகரிக்கவும் பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டது. 2022-23 மத்திய பட்ஜெட்டில் தனியார் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு கூடுதல் கட்டணத்தில் 12 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாகக் குறைப்பதாகவும் அறிவித்தார்.அப்பொழுது, ஜிஎஸ்டி வசூலுக்கான ஆரோக்கியமான குறிகாட்டியாக இதைக் கருதலாம் எனவும், 2022 ஜனவரி மாதத்திற்கான மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.1,40,986 கோடியாக உள்ளது. இது ஜிஎஸ்டி தொடங்கப்பட்ட ஆண்டுகளில் இருந்து அதிகபட்சமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க: Union Budget 2022 Highlights: பட்ஜெட் தொடங்கியது முதல் முடிவு வரை... முக்கிய அறிவிப்புகளின் தொகுப்பு இதோ...!