2030-ஆம் ஆண்டிற்குள் 'அனைவருக்கும் வீடு' என்ற இந்தியாவின் லட்சியம், சமீபத்திய  ஆண்டுகளில்  மேற்கொள்ளப்பட்ட சமூக-பொருளாதார இலக்குகளில் ஒன்றாகத் திகழ்கிறது பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தத் திட்டம், நகர்ப்புற மற்றும் கிராமப்புற இந்தியா முழுவதும் நிலவும் நீண்டகால வீட்டு வசதிப் பற்றாக்குறையைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இருப்பினும், இந்தியப் பொருளாதாரம் இந்தத் தசாப்தத்தின் இரண்டாம் பாதியில் நுழையும் போது, 2030-க்குள் வீட்டு வசதி குறித்த தனது வாக்குறுதியை இந்தியாவால் நிறைவேற்ற முடியுமா? என்கிற கேள்வி எழுகிறது.

தற்போதைய மதிப்பீடுகள்படி, இந்தப் பணி இன்னும் சவாலானதாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.  இத்துறையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைகளின்படி, விநியோகச் சங்கிலியில் சீர்திருத்தங்கள் மற்றும் செயல்திறன் மேம்பாடுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாவிட்டால், 2030-ஆம் ஆண்டில் மலிவு விலை வீடுகளுக்கான பற்றாக்குறை 3 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நிதியுதவியைப் பொறுத்தவரை கணிசமான ஆதரவு கிடைத்துள்ளது.

பட்ஜெட் ஒதுக்கீடு மற்றும் கொள்கை நோக்கம்

நிதி நிலைப்பாட்டில் இருந்து பார்க்கும்போது, வீட்டு வசதித் துறைக்கு அரசாங்கம் எப்போதும் தனது ஆதரவை வலியுறுத்தி வருகிறது. 2025-26 மத்திய பட்ஜெட்டில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்திற்கு ₹96,777 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இது முந்தைய ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீட்டை விட 52 சதவீதம் அதிகமாகும். இந்த நிதியின் பெரும்பகுதி PMAY திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது, இதில் PMAY-U (நகர்ப்புறம்), PMAY-U 2.0 மற்றும் PMAY-G (கிராமப்புறம்) ஆகிய துணைத் திட்டங்கள் அடங்கும்.

வீடுகளுக்கான தேவை முன்னரே மதிப்பிடப்பட்டதை விட அதிகமாக இருப்பதை உணர்ந்து, 2028-29க்குள் 3 கோடி வீடுகளைக் இலக்காக  அரசானது அறிவித்துள்ளது. குறிப்பாக, PMAY-U 2.0 திட்டம் 1 கோடி நகர்ப்புற ஏழை மற்றும் நடுத்தர வர்க்கக் குடும்பங்களுக்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளில் ₹10 லட்சம் கோடி மதிப்பிலான முதலீட்டின் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.

கள நிலவரம் மற்றும் முன்னேற்றம்

அனுமதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்தால், PMAY தீர்க்கமான முடிவுகளைக் கொடுத்துள்ளது. 2025-ஆம் ஆண்டின் இறுதியில், PMAY-U திட்டத்தின் கீழ் 118 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் அனுமதிக்கப்பட்டுள்ளன, இதில் மொத்தம் 76 சதவீத வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. கிராமப்புற இந்தியாவில், PMAY-G இன்னும் சிறப்பான செயல்திறனைக் காட்டியுள்ளது. அங்கு நிர்ணயிக்கப்பட்ட 4.95 கோடி இலக்கில் 2.82 கோடிக்கும் அதிகமான வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

இந்த எண்கள் இந்தத் திட்டம் முடங்கிப் போய்விடவில்லை என்பதைத் தெளிவுபடுத்துகின்றன. இருப்பினும், நகரமயமாக்கல், புலம்பெயர்தல் மற்றும் குடும்பங்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது, தசாப்தத்தின் இறுதிக்குள் தேவைக்கும் விநியோகத்திற்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதில் முன்னேற்றத்தின் வேகம் பின்தங்கியே காணப்படுகிறது.

செயலாக்க இடைவெளி: முன்னேற்றம் எங்கே குறைகிறது?

மிக முக்கியமான சவால் நிதி வழங்கல் மற்றும் பயன்பாடு தொடர்பானது. நிதி ஒதுக்கீடு அதிகரித்த போதிலும், ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தாத சூழல் நீடிக்கிறது. PMAY-U திட்டத்தைப் பொறுத்தவரை, 2024-25 நிதியாண்டில் பட்ஜெட் பயன்பாடு கிட்டத்தட்ட 55 சதவீதம் குறைவாக இருந்தது. 2021-22 நிதியாண்டில் எட்டப்பட்ட அதிகபட்சச் செலவினத்திற்குப் பிறகு, உண்மையான செலவினம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்தத் தடைகள் நிதி கிடைப்பதில் இல்லை, மாறாகச் செயலாக்கக் கட்டத்தில்தான் உள்ளன என்பது புலனாகிறது.

ரியல் எஸ்டேட் துறையின் விநியோகப் பக்கமும் மலிவு விலை வீட்டு வசதித் துறைக்குச் சவால்களை ஏற்படுத்துகிறது. இதுவரை புதிய திட்டங்களுக்கு முக்கிய உந்துசக்தியாக இருந்த மலிவு விலை வீட்டு வசதிப் பிரிவு, தற்போது பில்டர்களிடையே சரிவைச் சந்தித்துள்ளது. 2018-ல் பெரிய நகரங்களில் 52 சதவீதமாக இருந்த மலிவு விலை வீடுகளின் பங்களிப்பு, 2025-ல் 17 சதவீதமாகக் குறைந்துள்ளது.

கட்டமைப்பு மற்றும் கொள்கை சவால்கள்

நிதி மற்றும் விநியோகச் சங்கிலி சிக்கல்களைத் தவிர, மாநில அளவில் செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்களும் கவலைக்குரியதாக உள்ளன. பீகார், ஹரியானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் உட்பட பல மாநிலங்களில் நிலம் கையகப்படுத்துவதில் தாமதம், நிதிப் பற்றாக்குறை மற்றும் திறன் குறைபாடுகள் போன்ற சிக்கல்கள் திட்டங்களைச் செயல்படுத்துவதில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

மற்றொரு கட்டமைப்புச் சிக்கல் 'மலிவு விலை' (Affordability) என்பதற்கான வரையறையிலிருந்து எழுகிறது. பெருநகரங்களில் மலிவு விலை வீடுகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட ₹45 லட்சம் என்ற தற்போதைய விலை வரம்பு, நிலத்தின் விலை மற்றும் கட்டுமானச் செலவுகளை முழுமையாகக் கணக்கில் கொள்வதில்லை, இது சிக்கலை மேலும் கூட்டுகிறது.

2030-ஐ நோக்கிய பயணம் சாத்தியமா?

இந்தியாவின் வீட்டு வசதித் திட்டம் வலுவான கொள்கை நோக்கம் மற்றும் பட்ஜெட் ஆதரவுடன் முன்னெடுக்கப்படுகிறது. இருந்தபோதிலும், லட்சியங்களுக்கும் அதைச் செயல்படுத்தும் திறனுக்கும் இடையிலான இடைவெளி அதிகமாக உள்ளது. நிதிப் பயன்பாட்டில் உள்ள திறமையின்மை, தனியார் பில்டர்களை ஊக்குவித்தல், மலிவு விலை அளவுருக்களைச் சீரமைத்தல் மற்றும் செயல்முறை மேம்பாடுகளை விரைவுபடுத்துதல் ஆகியவற்றைச் சரிசெய்யாதவரை, 2030-க்குள் வீட்டு வசதி இடைவெளியை நிரப்புவது கடினமாகத் தெரிகிறது.

'அனைவருக்கும் வீடு' என்ற பார்வை நோக்கத்தில் வலுவாக உள்ளது, ஆனால் அதன் காலக்கெடு தொடர்ந்து நிச்சயமற்ற நிலையைச் சந்தித்து வருகிறது. அடுத்த கட்டமானது, நிதி ஒதுக்கீடு சார்ந்த நம்பிக்கையிலிருந்து செயல்பாடு சார்ந்த விநியோகத்திற்கு மாற வேண்டும். இந்த மாற்றத்தின் மூலம் மட்டுமே அனைத்து குடிமகன்களுக்கும் போதுமான வீட்டு வசதி வழங்கும் இலக்கை நாடு அடைய முடியும்.

(ஆசிரியர்: ஜெனிகா வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓ)