பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இன்று மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட்டை தாக்கல் செய்தார். எதிர்பார்த்தபடியே, பெரிய அறிவிப்புகள் எதுவும் பட்ஜெட்டில் வெளியிடப்படவில்லை.
நிர்மலா சீதாராமன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு:
இருப்பினும், இந்திய நிதிநிலைமை குறித்து அறிந்து கொள்ள வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 2014ஆம் ஆண்டுக்கு முன்பும் அதற்கு பிறகான காலத்திலும் இந்திய நிதிநிலைமை எப்படி இருந்தது, தற்போது எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் வகையில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என பட்ஜெட் உரையில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "அன்றும், 2014ஆம் ஆண்டிலும், இப்போதும் பொருளாதார ரீதியாக எங்கே இருக்கிறோம் என்று பார்ப்பதே பொருத்தமானதாக இருக்கும். அந்த காலக்கட்டத்தின் நிர்வாகச் சீர்கேட்டில் இருந்து பாடம் கற்று கொள்வதற்காக நாடாளுமன்றத்தில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
முன்மாதிரியான நிர்வாகம், வளர்ச்சி, செயல்திறன், வெற்றிகரமான விநியோகம், பொது நலன் ஆகியவை மூலம் மக்களின் நம்பிக்கை, ஆசீர்வாதம் அரசுக்கு கிடைத்துள்ளது. நல்ல நோக்கத்துடன் வளர்ந்த பாரதம் என்ற இலக்கை அடைய வரவிருக்கும் ஆண்டுகளில் உண்மையான அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு மேற்கொள்ளப்படும்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "நமது செழுமை என்பது இளைஞர்களை ஆயத்தப்படுத்துவதையும், அவர்களை மேம்படுத்துவதையும் சார்ந்துள்ளது. அனைத்து திசைகளிலும் ஏற்பட்டுள்ள வளர்ச்சியின் தாக்கம் தெளிவாக தெரிகிறது. மேக்ரோ பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மை உள்ளது. முதலீடுகள் வலுப்பெற்றுள்ளன. பொருளாதாரம் நன்றாக உள்ளது. எதிர்காலத்திற்கான உயர்ந்த லட்சியங்களுடன் மக்கள் சிறப்பாக வாழ்ந்து வருகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளில், அரசின் நிர்வாகம் மக்களை மையப்படுத்தி இருந்தது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை பூர்த்தி செய்துள்ளது. தொற்றுநோயால் உலகில் உணவு, உரம், எரிபொருள் மற்றும் நிதி நிலைமையில் நெருக்கடி ஏற்பட்டது. அதே நேரத்தில் இந்தியா வெற்றிப்பாதையில் சென்றது" என்றார்.
இடைக்கால பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக எம்பி தயாநிதி மாறன், "நிதியமைச்சர் பாராட்டுகளைப் பெற நீண்ட நேரம் உரையாற்றினார். ஆனால், அவர்களின் செயல்பாடுகள் பூஜ்ஜியமாக உள்ளது. முந்தைய அரசு குறித்து வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப் போகிறார்கள்.
கடந்த 10 ஆண்டுகளில் பெரிதாக எதுவும் நடக்கவில்லை. நாட்டு மக்கள் ஏற்கனவே ஏமாற்றத்தில் உள்ளனர். மேலும், செயல்திறன் ஊக்கத்தொகைகள் தகுதியானவர்களுக்குச் செல்லவில்லை என்பதையும் நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். இந்த பட்ஜெட் மூலம் மக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளனர்" என்றார்.