கர்ப்பப்பை  வாய் புற்றுநோயை தடுக்கும் வகையில் 9 முதல் 14 வயதுடைய சிறுமிகளுக்கு தடுப்பூசி போடும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான அரசு, தனது கடைசி மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்துள்ளது. தேர்தல் நடக்கவிருப்பதால் முழு பட்ஜெட்டுக்கு பதில் இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார்.






இந்த பட்ஜெட்டில் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்புகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “"உயர்கல்வியில் பெண்களின் சேர்க்கை 10 ஆண்டுகளில் 28% அதிகரித்துள்ளது, STEM படிப்புகளில், பெண்களின் சேர்க்கை 43% ஆக உள்ளது, இது உலகிலேயே மிக உயர்ந்த ஒன்றாகும். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் அதிகரித்து வரும் பெண் பணியாளர்களின் பங்கேற்பில் பிரதிபலிக்கின்றன. முத்தலாக்கை சட்டவிரோதமாக்கியது, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு, பெண்களுக்கான பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 70% வீடுகள் கட்டப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.   முக்கியமாக இன்றைய காலக்கட்டத்தில் பெண்களுக்கு கர்பப்பைவாய் புற்றுநோய் அதிகரித்து வரும் நிலை, அதனை தடுக்கும் வகையில் 9 முதல் 14 வயதுடைய சிறுமிகளுக்கு தடுப்பூசி போடும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என அறிவித்துள்ளார். மேலும், பிரதமர் மோடி அட்சியில் பெண் தொழில் முனைவோர்களுக்கு ரூ.30 கோடி வரை முத்ரா கடன் வழங்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.