பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கி ஆகஸ்ட் 12 வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. நேற்று, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை ஜூலை 23 செவ்வாய்க்கிழமை அதாவது இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். 


பட்ஜெட் கூட்டத் தொடர் 2024


பிரதமராக பதவியேற்றிருக்கும் நரேந்திர மோடியின் அரசாங்கத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதோடு தனது 7-வது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மேலும் இந்த நிதியாண்டின் முதல் பட்ஜெட்டும் இதுவாகும். தொடர்ந்து பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வாசித்தார் அமைச்சர் நிர்மலா சீதாராமன். அந்த வகையில் 25 முக்கிய கனிமங்கள் இறக்குமதி செய்ய சுங்க வரி செலுத்துவதில், இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 


தங்கம், வெள்ளி சுங்க வரி குறைப்பு


தங்கம், வெள்ளி மீதான சுங்க வரி 6 சதவீதமாக குறைக்கப்படும் என மத்திய பட்ஜெட் அறிவிப்பில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதுகுறித்த பட்ஜெட் அறிவிப்பில், “தங்கம், வெள்ளி மீதான சுங்க வரி 6 சதவீதம் குறைக்கப்படும். இதனால் தங்கம், வெள்ளி விலை குறையும். தாமிரம் மற்றும் உருக்கு ஆகியவற்றின் வரிகளும் குறைக்கப்படும். பிளாட்டினம் மீதான சுங்க வரி 6.4% குறைக்கப்படும் என அறிவித்தார். ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.54,480க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலை ரூ.95.60க்கு விற்பனையாகிறது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.95,600 ஆக விற்பனையாகிறது


பட்ஜெட்டில் தங்கம் மீதான சுங்கவரி குறைக்கப்பட்டு இருப்பது தொடர்பாக ஏபிபி நாடு சார்பில், தங்கம் மற்றும் வைர நகைகள் விற்பனையாளர்கள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானியை தொடர்பு கொண்டு, சுங்கவரி குறைப்பு குறித்து கேட்டறிந்தோம். சுங்கவரி வரை குறைக்கப்பட்டு இருப்பதை தங்கம் வியாபாரிகள் வரவேற்பதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் தெரிவித்ததாவது: இந்த அறிவிப்பு மிகவும் வரவேற்க கூடிய அறிவிப்பாக பார்க்கிறோம், நீண்ட காலமாக தங்கம் மீதான சுங்க வரி குறைக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தோம், அந்த கோரிக்கையை நிறைவேற்றி தங்கத்தின் மீதான சுங்க வரியை குறைத்த மத்திய அரசிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.


கடத்தல் தங்கம் குறையும்


தங்கம் மீதான உலகளாவிய விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பாமர மக்கள் தங்கத்தை வாங்கக்கூடிய நிலையிலிருந்து, தள்ளிக் கொண்டே செல்கின்றனர் . அதனை மீண்டும் நெருக்கமாக கொண்டு வரும் பட்ஜெட் அறிவிப்பாக இதைப் பார்க்கிறோம். இதன் மூலம் தங்கம் சவரன் ஒன்றிற்கு ஆயிரம் ரூபாய் விலை குறைய வாய்ப்புள்ளது.


தங்கம் வியாபாரிகளின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடத்தல் தங்கம் வருவது கணிசமாக குறைய தொடங்கும். 15 சதவீதம் இருந்த சுங்க வரி தற்பொழுது 6 சதவீதமாக குறைக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. உலக அளவில் தங்கம் விலை ஏறும் பட்சத்திலும், இந்தியாவில் அது பெரிய அளவில் பிரதிபலிக்க வாய்ப்பு குறைவு. இதே போன்று வெள்ளி விலையும் குறையும் என தெரிவித்தார்.