பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய அரசின் பட்ஜெட்டில் தூத்துக்குடியில் இருந்து மதுரை வரையிலான ரயில் பாதை திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென தூத்துக்குடி மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




தூத்துக்குடி மாவட்டம் தமிழ்நாட்டின் மிகப்பெரிய தொழில் நகரமாக இருந்து வருகிறது. விமான நிலைய விரிவாக்கம், துறைமுகம் விரிவாக்கம், சிப்காட் விரிவாக்கம், மின் உற்பத்தி நிலையங்கள் என நாளுக்கு நாள் தூத்துக்குடி நகரின் வளர்ச்சி அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நிலக்கரி உள்ளிட்ட சரக்குகள் போக்குவரத்தை எளிதாக கையாளுவது, தொழிற்சாலைகளுக்கான மூலப்பொருள்களை ரயில் மூலம் கொண்டு செல்வது ஆகியவற்றை கருத்தில் கொண்டு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடி - மதுரை இடையே புதிய ரயில் வழித்தடத்தை அமைக்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி, மீளவிட்டான், மேலமருதூர், குளத்தூர், விளாத்திகுளம், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருப்பரங்குன்றம் வழியாக மதுரைக்கு 144 கிலோமீட்டர் தொலைவில் ரயில் பாதை அமைக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.




முதல் கட்டமாக தூத்துக்குடியில் இருந்து மேலமருதூர் வரை பணிகள் தொடங்கப்பட்டு கடந்த பத்தாண்டுகளில் வெறும் 17 கிலோமீட்டர் தொலைவிற்கு மட்டுமே பணிகள் முடிவுற்று சோதனையும் ஓட்டமும் நடந்தது. இரண்டாம் கட்டமாக மேலமருதூர், குளத்தூர், விளாத்திகுளம், அருப்புக்கோட்டை, வரையிலும் மூன்றாம் கட்டமாக அருப்புக்கோட்டையில் இருந்து திருப்பரங்குன்றம் வரையிலும் என மீதமுள்ள 127 கிலோமீட்டருக்கான  பணிகள் நிதி ஒதுக்கீடு  இல்லாமல் கிடப்பில் உள்ளது.




கடந்த 10 ஆண்டுகளில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள அபரிமிதமானதொழில் வளர்ச்சிக்கு ஏற்ப ரயில் போக்குவரத்து இல்லாத காரணத்தினால் பல ஆயிரக்கணக்கான லாரிகள் மற்றும் கண்டெய்னர்கள் மூலம் பொருள்கள் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. இதனால் தூத்துக்குடி நகரமே காற்று மாசு உள்ளிட்ட அனைத்து வகை  சுற்றுச்சூழல் பாதிப்பில் முன்னணியில் உள்ளது. தூத்துக்குடி மதுரை  ரயில்வே வழித்தடம் செயல்படுத்தப்படும் பட்சத்தில் ரயில்வே துறைக்கும் பல ஆயிரம் கோடி வருமானமும் கிடைக்கும்.   




மேலும் தென் தமிழகத்தின் பின்தங்கிய பகுதிகளான விளாத்திகுளம், புதூர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் தொழில் வளர்ச்சியும் ஏற்படும். விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை எளிதாக வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதியும் செய்ய இயலும். ஆகவே பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய அரசின் பட்ஜெட்டில்  தூத்துக்குடி மதுரை ரயில் வழித்தடத்துக்கு இரண்டாம் கட்ட பணிகளுக்கு  உரிய நிதியை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். புதிய புதிய அறிவிப்புகளை வெளியிடுவதை விட ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரயில்பாதை பணிகளை விரைந்து முடிப்பதற்கு ஏதுவாக பட்ஜெட்டில் வழிவகை காண வேண்டும் என்பது தூத்துக்குடி மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாக  உள்ளது.




மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாநகர செயலாளர் எம்.எஸ்.முத்து கூறும்போது, "கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடி மதுரை ரயில் வழித்தடத்தை அமைப்பதற்கு ஒரு கிலோ மீட்டருக்கு 10 கோடி என மதிப்பீடு தயார் செய்யப்பட்டு 1500 கோடி மதிப்பீட்டில் திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை உரிய  நிதி வழங்கப்படாத காரணத்தினால் 90 சதவீத பணிகள் 10 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. தூத்துக்குடியிலிருந்து  போதுமான ரயில்பாதை வசதி இல்லாததால் கூடுதல் ரயில்களை இயக்க முடியாத நிலையும் தொடர்ந்து நிலவி வருகிறது. அதே நேரத்தில் தென்னக ரயில்வேயில் மதுரை மண்டலத்தில் தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருள்களை ரயில் மூலம் கொண்டு செல்வதில் சரக்குப்போக்குவரத்தில்  தூத்துக்குடி முக்கிய இடத்தை பிடித்துள்ளது.  வானம் பார்த்த வறண்ட பூமியான விளாத்திகுளம், புதூர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி பகுதிகள் வளர்ச்சி பெறவும், தொழில் நகரமான தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்தும் வரக்கூடிய மத்திய பட்ஜெட்டில் தூத்துக்குடி மதுரை ரயில் வழித்தடத்துக்கு போதுமான நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்" என்றார்.