பட்ஜெட்டின் மதிப்பு ரூ.45 லட்சம் கோடி:


அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு முன்னதாக, பிரதமர் மோடி தலைமையிலான அரசின் கடைசி முழு பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பல்வேறு துறைகளுக்கான புதுப்புது திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, அதற்கான நிதி விவரங்களும் அறிவிக்கப்பட்டன. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் ஒரு மணி நேரம் 25 நிமிடங்கள் வாசித்த, அடுத்த நிதியாண்டிற்கான மொத்த பட்ஜெட்டின் மதிப்பு 45 லட்சத்து 3 ஆயிரத்து  97 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டிற்கான மொத்த செலவினம் 39 லட்சத்து 44 ஆயிரத்து  909 கோடி ரூபாய் என கடந்தாண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்ட நிலையில், திருத்தி அமைக்கப்பட்ட பிறகு அந்த செலவினம் 41 லட்சத்து 87 அயிரத்து 232 கோடி ரூபாயை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


நிதிப்பற்றாக்குறை:


மத்திய பட்ஜெட் 2023இன் படி, 2023 - 2024 நிதியாண்டின் நிதிப்பற்றாக்குறை 5.9 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திருத்தி அமைக்கப்பட்ட பிறகு நடப்பு நிதியாண்டிற்கான நிதிப்பற்றாக்குறை 6.4 சதவிகிதமாக உள்ளது. இது எதிர்பார்த்ததை விட சிறப்பான முறையில் அரசு செயல்பட்டதை விளக்குவதாக, நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 2025-26 நிதியாண்டிற்குள் நாட்டின் நிதிப்பற்றாக்குறையை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.5 சதவிகிதத்திற்கு கீழ் கொண்டு வருவது தான் அரசின் நோக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ரூ.15 லட்சம் கோடி கடன்:


2023-24 ஆம் ஆண்டில் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க தேதியிட்ட பத்திரங்களிலிருந்து நிகர சந்தைக் கடனாக, ரூ.11.8 லட்சம் கோடி பெறப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. மீத நிதியுதவியானது சிறு சேமிப்பு மற்றும் பிற ஆதாரங்களில் இருந்து வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனுடன் சேர்த்து அடுத்த நிதியாண்டில் பெற உள்ள மொத்த சந்தைக் கடன் மதிப்பு ரூ.15.4 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது நடப்பு நிதியாண்டிற்கான கடன் வரம்பாக நிச்சயிக்கப்பட்டதை விட அதிகமாகும். 


நடப்பு நிதியாண்டிற்கான கடன்:


நடப்பு நிதியாண்டில் கடந்த ஜனவரி 27ம் தேதி வரையில் மத்திய அரசு  ரூ.12.93 லட்சம் கோடியை கடனாக திரட்டியுள்ளது.  இது 2022-23 நிதியாண்டிற்கு மொத்த கடன் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட ரூ.14.21 லட்சம் கோடியில் 91 சதவிகிதம் ஆகும். மத்திய மற்றும் மாநில அரசுகளின் மொத்த கடன் தொகையானது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 83 சதவிகிதம் ஆகும். இதனிடையே, 50 ஆண்டுகளுக்கு வட்டியில்லாமல் கடன் வழங்கும் திட்டம், அடுத்த நிதியாண்டிலும் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


அரசின் வருவாய் எவ்வளவு:


கடன் இன்றி அரசின் மொத்த வருவாய் ரூ.27.2 லட்சம் கோடியாகவும், மொத்த செலவினம் 45 லட்சம் கோடி ரூபாயாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. நிகர வரி வரவுகள் ₹23.3 லட்சம் கோடி எனவும், மத்திய அரசின் பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டுள்ளது .