PMMODI ON BUDGET 2024:  மக்களவை தேர்தலில் வென்று மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என, பிரதமர் மோடி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். 


டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது மூலம் மகத்தான சாதனை படைக்கப்பட்டுள்ளது.  குடியரசு தின விழா அணிவகுப்பில் பெண்களின் வலிமை குறித்து பறைசாட்டப்பட்டுள்ளது. 


நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடுவோரை வரலாறு நினைவில் வைத்திருக்காது. நாடாளுமன்ற எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர். விவாதங்கள் தீவிரமாக இருக்கலாம். இடையூறு செய்வதாக இருக்கக் கூடாது. தேர்தலுக்கு பிறகு பாஜக முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும்” என பிரதமர் மோடி தெரிவித்தார்.






வளர்ச்சி தொடரும் - மோடி


தொடர்ந்து பேசிய மோடி, “நாடு ஒவ்வொரு நாளும் முன்னேற்றத்தின் புதிய உச்சங்களைத் தாண்டி முன்னேறி வருகிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன். அனைத்துலக மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி நடைபெறுகிறது. மக்களின் ஆசியுடன் இந்தப் பயணம் தொடரும். ஜனநாயக விழுமியங்களை துண்டாடும் பழக்கம் கொண்ட எம்.பி.க்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த காலத்தில் தாங்கள் என்ன செய்தார்கள் என்பதை சுயபரிசோதனை செய்து கொள்வார்கள் என்று நம்புகிறேன். நாடாளுமன்றத்தில் நேர்மறையான பங்களிப்பை வழங்கியவர்கள் மட்டுமே நினைவில் கொள்ளப்படுவார்கள்,  இடையூறுகளை ஏற்படுத்திய உறுப்பினர்கள் யாரையும் மக்கள் நினைவில் கொள்ள மாட்டார்கள். இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் மனந்திரும்புவதற்கும் நேர்மறையான தடம் பதிப்பதற்கும் ஒரு வாய்ப்பாகும். இந்த வாய்ப்பை தவறவிடாமல் தங்களால் இயன்றதைச் செய்யுமாறு அனைத்து எம்.பி.க்களையும் கேட்டுக்கொள்கிறேன்” என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.


பிரதமர் மோடியின் அறிவுறுத்தல் ஏன்?


கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில், மக்களவைக்கு பார்வையாளர்களாக வந்த சிலர் வண்ண புகை குண்டுகளை வீசினர். கடும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மீறி நடைபெற்ற இந்த அத்துமீறல், தேசிய அளவில் பெரும் அதிர்வலகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிக்க வேண்டும் என, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், நூறுக்கும் அதிகமான மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதனை குறிப்பிட்டு தான், உறுப்பினர்கள் அவை நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என, பிரதமர் மோடி  அறிவுறுத்தியுள்ளார்.