தனியார் மயமாகும் 4 பொதுத்துறை வங்கிகள்?

நாட்டின் முக்கிய பொதுத்துறை வங்கிகளான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, யூகோ வங்கி, பஞ்சாப் & சிந்து வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றில் தனது பங்குகளை 75% ஆகக் குறைப்பது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. நாட்டில் மொத்தமாக 10-க்கும் மேற்பட்ட பொதுத்துறை வங்கிகள் உள்ள நிலையில், பெரும்பாலான ஏழை எளிய மற்றும் நடுத்தர வகுப்பினரின் பணப்புழக்கம் பொதுத்துறை வங்கிகளை சார்ந்துள்ளதை மறுக்க இயலாது. தனியார் மயம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கள் ஏதும் வெளியாகாத நிலையில், இணையத்தில் உலாவி வரும் தகவல் பொதுத்துறை வங்கி வாடிக்கையாளர்களை பீதியடையச் செய்துள்ளது. ஏனென்றால் வாடிக்கையாளர்களிடையே பெரும்பாலும் எழும் கேள்வி என்னவென்றால், தற்போது குறிப்பிடத்தக்கத்தக்க பங்குகள் தனியாருக்கு செல்லுமானால் சில காலத்துக்கு பின் முழுப்பங்குகளும் ஏன் கைமாறாது என்பதுதான்.

Continues below advertisement

தனியார் மயமாதலால் ஏற்படும் சவால்கள் என்ன?

மேலும், பிரதமரின் ஜன் தன் யோஜனா, முத்ரா கடன்கள், விவசாயக் கடன் தள்ளுபடி மற்றும் மானியங்கள் போன்ற அரசு திட்டங்களைச் செயல்படுத்துவதில் பொதுத்துறை வங்கிகள் முக்கிய பங்காற்றி வரும் நிலையில், தனியார் மயமாக்கப்பட்டால் இவற்றின் முக்கியத்துவம் குறைக்கப்படக்கூடும்.தற்போது பொதுத்துறை வங்கிகள் தங்களின் மொத்தக் கடன் விநியோகத்தில் கணிசமான பகுதியை விவசாயம், சிறு-குறு தொழில்கள், சுயஉதவிக் குழுக்கள் மற்றும் கல்விக்காக வழங்குகின்றன. இந்நிலையில் பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்பட்டால், இவ்வகை கடன்களுக்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டு பெருநிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படலாம்.

சேவைகளுக்கான கட்டணங்கள் உயர வாய்ப்பு

ஏடிஎம் பரிவர்த்தனைகள், எஸ்.எம்.எஸ் விழிப்பூட்டல்கள் மற்றும் பிற அடிப்படை சேவைகளுக்கான கட்டணங்கள் கணிசமாக உயர்த்தப்படலாம் என்பதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். எளிமையாக கூற வேண்டுமானால் பொதுத்துறை வங்கிகள் லாபநோக்கமற்று செயல்படும், ஆனால் தனியார் வங்கிகள் முழுக்க முழுக்க லாபத்தையே முழுக்குறிக்கோளாக கொண்டு செயல்படுபவை. இதன் ஐயத்தை போக்க மத்திய அரசு இது குறித்த முழுமையாக விளக்கத்தை அளிக்க வேண்டுமென்பது வாடிக்கையாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

Continues below advertisement