இந்த முன்முயற்சி மூலம், இந்தியாவில் உள்ள அனைத்து அப்பல்லோ மருத்துவமனைகளிலும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் மருத்துவ ஆலோசனைகள், பரிசோதனைகள், நோய்த்தடுப்பு மருத்துவச் சோதனைகள், திட்டமிடப்பட்ட சிகிச்சைகள் போன்ற சேவைகள் வழங்கப்படும்.
அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ், ஞாயிற்றுக்கிழமைகள் உட்பட வாரத்தின் 7 நாட்களும் வழக்கமான மற்றும் திட்டமிடப்பட்ட மருத்துவச் சேவைகளை வழங்கும் முதலாவது சிறப்பு முயற்சியான ‘எப்போதும் திறந்திருக்கும், எப்போதும் உங்களுக்காக’ (Always Open. Always Here.) எனும் திட்டத்தை தொடங்குவது குறித்த அறிவிப்பை இன்று வெளியிட்டது.
அப்பல்லோ மருத்துவமனையின் அவசரச் சிகிச்சை, தீவிரச் சிகிச்சை, உள்நோயாளிச் சேவைகள் ஆகியவை எப்போதும் 24x7 அடிப்படையில் கிடைக்கக்கூடியவை. இந்த புதிய முன்முயற்சி, வெளிநோயாளி ஆலோசனைகள், பரிசோதனைகள், நோய்த்தடுப்பு மருத்துவப் பரிசோதனைகள், தொடர் ஆலோசனைகள், திட்டமிடப்பட்ட சிகிச்சைகள் ஆகியவற்றை ஞாயிற்றுக்கிழமைகளிலும் விரிவுபடுத்துகிறது. இதன் மூலம் நோயாளிகளும் அவர்களுடைய குடும்பத்தினரும் வார நாட்களுக்காகக் காத்திருக்காமல் சரியான நேரத்தில் சிகிச்சையைப் பெற முடியும்.
பணிபுரியும் பல இந்தியர்களுக்கு, சரியான நேரத்தில் மருத்துவச் சிகிச்சையைப் பெறுவதற்கு நேரமின்மை ஒரு மிகப்பெரிய தடையாக உள்ளது. நெருக்கடியான வேலை நேரம், குடும்பப் பொறுப்புகள், வார நாட்களில் தனிப்பட்ட பொறுப்புகள் காரணமாக மக்கள் பல நேரங்களில் மருத்துவ ஆலோசனைகள், பரிசோதனைகள், உடல் பரிசோதனைகள் ஆகியவற்றை ஒத்திவைக்கின்றனர். அப்பல்லோ நிறுவனத்தின் ‘ஹெல்த் ஆஃப் தி நேஷன் 2026’ (Health of the Nation 2026) அறிக்கை, இந்தியர்களின் மிகவும் சுறுசுறுப்பான பணிபுரியும் வயதிலேயே உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், வளர்சிதை மாற்றக் கோளாறுகள் போன்ற வாழ்வியல் நோய்களின் பாதிப்பு அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டுகிறது. இந்தியா முழுவதும் உள்ள அப்பல்லோ மருத்துவக் கட்டமைப்பில் 2.5 மில்லியனுக்கும் அதிகமான நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளின் அடிப்படையில், ஒரு 'மௌனத் தொற்றுநோய்' நிச்சயமாக அதிகரித்து வருவதாக இந்த அறிக்கை மேலும் சுட்டிக்காட்டுகிறது. இதில் எவ்வித வெளிப்படையான அறிகுறிகளும் இன்றி, இலட்சக்கணக்கான மக்கள் கண்டறியப்படாத நாள்பட்ட நோய்களுடன் வாழ்ந்து வருகின்றனர். எந்தவொரு அறிகுறியும் இல்லாதபோதிலும், கிட்டத்தட்ட 26% பேருக்கு உயர் ரத்த அழுத்தமும், 23% பேருக்கு நீரிழிவு நோயும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது, அறிகுறிகள் தோன்றிய பின் மட்டுமே சிகிச்சை பெறும் மருத்துவ அணுகுமுறை இனி பலனளிக்காது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
‘எப்போதும் திறந்திருக்கும், எப்போதும் உங்களுக்காக’ எனும் இத்திட்டம், காலதாமதம் ஆபத்தாக மாறுவதற்கு முன்பாக நோயாளிகள் தங்கள் உடல்நலனில் அக்கறை செலுத்த மேலும் ஒரு நாளை வழங்குவதன் மூலம் இந்த இடைவெளியைச் சரிசெய்கிறது.
அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான டாக்டர் பிரதாப் சி. ரெட்டி அவர்கள் இவ்வாறு கூறினார், “நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக, மருத்துவச் சேவை என்பது நோயைக் குணப்படுத்துவது மட்டுமல்ல, ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதும் நோயைத் தடுப்பதும் ஆகும் என்று அப்பல்லோ நம்புகிறது. ‘எப்போதும் திறந்திருக்கும், எப்போதும் உங்களுக்காக’ என்பது அந்த வாக்குறுதியின் தொடர்ச்சியாகும். அவசரநிலை மற்றும் தீவிர சிகிச்சைகளுக்கு நாங்கள் எப்போதும் துணை நின்றிருக்கிறோம். இப்போது அதே அர்ப்பணிப்பை வாரத்தின் ஏழு நாட்களும் வழக்கமான மற்றும் நோய்த் தடுப்புச் பராமரிப்புச் சேவைகளுக்கும் விரிவுபடுத்துகிறோம். இது ஒவ்வொரு இந்தியருக்குமான எங்கள் சேவையின் அடையாளம் ஆகும்.”
அவர் மேலும் கூறியதாவது, “இந்த முன்முயற்சி அப்பல்லோவில் உள்ள ஒவ்வொரு மருத்துவர், நர்சு, தொழில்நுட்ப வல்லுநர், மருத்துவப் பணியாளர் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு செலுத்தும் ஒரு மரியாதை ஆகும். மருத்துவச் சேவை என்பது தன்னலமற்ற சேவையின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட ஒரு தொழில். அவர்களின் அர்ப்பணிப்பே இந்தியா முழுவதிலும் உள்ள நோயாளிகள் மற்றும் குடும்பங்களுக்காக இந்த அடியை முன்னோக்கி வைக்க எங்களை அனுமதிக்கிறது. ஒரு சரியான நேர ஆலோசனை நோயை ஆரம்பத்திலேயே கண்டறிய அல்லது ஆபத்தைத் தடுக்க உதவுமானால், நாம் ஒரு உயிரைக் காப்பாற்றியிருப்போம். ஆபத்து வருவதற்கு முன்பே பராமரிப்பைத் தேர்ந்தெடுக்க இலட்சக்கணக்கான மக்களை நாம் ஊக்குவித்தால், நாம் எதிர்காலத்தையே மாற்றியமைத்திருப்போம்.”
முன்னோடித் திட்டங்களின் பாரம்பரியம், இப்போது நேரத்தின் தடையை உடைக்கிறது
சமூகம் வழக்கமானது என ஏற்றுக்கொண்ட விஷயங்களை கேள்விக்குட்படுத்துவதில் இருந்தே மருத்துவச் சேவையின் மாற்றம் தொடங்குகிறது என்று அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் எப்போதும் நம்புகிறது. உயிரைக் காக்கும் ஒரு இடத்தை ஏன் ‘கேஷுவாலிட்டி’ (Casualty) என்று அழைக்க வேண்டும் எனக் கேள்வி எழுப்பிய டாக்டர் ரெட்டி அவர்கள், மருத்துவமனைகள் தோறும் அதனை ‘எமர்ஜென்சி’ (Emergency) என மாற்ற உதவினார். விமானங்களில் புகைபிடிப்பது சாதாரணமாகக் கருதப்பட்ட காலத்திலேயே அதற்கு முற்றுப்புள்ளி வைக்க அவர் குரல் கொடுத்தார்; அத்துடன் மருந்தகங்களுக்கு இன்று அடையாளமாகத் திகழும் பிரத்யேகப் பச்சை நிற அடையாளத்தை உருவாக்கவும் உதவினார். பழக்கவழக்கங்களையே மாற்றியமைத்த இந்த எளிய மாற்றங்கள்தான் அவரது பயணத்தின் தனித்துவமான அடையாளமாக விளங்குகின்றன: அதாவது மற்றவர்கள் சாதாரணமாகக் கடந்து செல்லும் விஷயங்களைக் கவனிப்பது, அது ஏன் மாறக்கூடாது என்று கேட்பது, பின்னர் மில்லியன்கணக்கான மக்களுக்காக அதை மாற்றுவது.
1983ஆம் ஆண்டு முதல், இந்திய மருத்துவத் துறையில் அப்பல்லோ ஒரு முக்கியப் பங்காற்றி வருகிறது: இந்திய மண்ணில் இதுவரை செய்யப்படாத இதய அறுவை சிகிச்சைகள்; தெற்காசியாவின் முதல் புரோட்டான் புற்றுநோய் மையம்; 30 மில்லியனுக்கும் அதிகமான மனிதர்களின் வாழ்க்கையைத் தொட்ட ‘மாஸ்டர் ஹெல்த் செக்’ (Master Health Check) மூலம் முன்னெடுக்கப்பட்ட தடுப்பு பராமரிப்புச் சேவைகள்; மேலும் உலகிலேயே அதிக அளவில் திடமான உறுப்பு மாற்று சிகிச்சை திட்டங்களில் ஒன்று ஆகியவை இதில் அடங்கும். ‘அப்பல்லோ புரோஹெல்த்’ (Apollo Prohealth) என்பது, நபர்களின் உடல்நல அபாயங்களை முன்கூட்டியே கண்டறிந்து, நோய்கள் தீவிரமடைவதற்கு முன்பே உரிய நடவடிக்கை எடுக்க உதவுவதற்காக வடிவமைக்கப்பட்ட முதல் ஏஐ சார்ந்த அபாயக் கணிப்பு மற்றும் பகுப்பாய்வு முறையாகும். 150-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த நோயாளிகள் இப்போது அப்பல்லோவின் சேவைகளைப் பெற்று வருகின்றனர்.
‘எப்போதும் திறந்திருக்கும், எப்போதும் உங்களுக்காக’ திட்டத்தின் மூலம், வழக்கமான மருத்துவப் பராமரிப்பில் இருக்கும் நேரத்தின் தடையை உடைத்து, அப்பல்லோ தனது முன்னோடிப் பட்டியலில் மேலும் ஒரு சாதனையைச் சேர்க்கிறது.
அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸின் நிர்வாகத் துணைத் தலைவர் டாக்டர் பிரீத்தா ரெட்டி அவர்கள் கூறியதாவது: “மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கைக்கு ஏற்ற வசதியான நேரத்தில் மருத்துவச் சிகிச்சையைப் பெறக்கூடிய சூழல் இருக்க வேண்டும். பல்வேறு பொறுப்புகளைக் கையாளும் பணியாளர்கள், பராமரிப்பாளர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு—குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில்—ஒரு மருத்துவரை அணுகவும், உடல் பரிசோதனை செய்துகொள்ளவும் அல்லது தொடர் சிகிச்சைகளைப் பெறவும் வாய்ப்புக் கிடைப்பது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும். ‘எப்போதும் திறந்திருக்கும். எப்போதும் உங்களுக்காகவே.’ என்பது மக்கள் அப்பல்லோவிடம் இருந்து எதிர்பார்க்கும் நம்பகமான மருத்துவச் சேவை, வாரத்தின் அனைத்து நாட்களிலும், அவர்களுக்குத் தேவைப்படும் போதெல்லாம் கிடைப்பதை உறுதி செய்வதற்கான எங்கள் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது.”
நோயாளிகளுக்கு என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்
மருத்துவமனை சார்ந்த அட்டவணைகள் மற்றும் சேவைத் தயார்நிலைக்கு உட்பட்டு, நோயாளிகள் ஞாயிற்றுக்கிழமைகளிலும் நிபுணர் ஆலோசனைகள், நோய்த்தடுப்பு மருத்துவப் பரிசோதனைகள், நோய் கண்டறிதல் பரிசோதனைகள், தொடர் ஆலோசனைகள், திட்டமிடப்பட்ட சிகிச்சைகள் ஆகியவற்றைப் பெற முடியும். இதன் மூலம், பணிபுரியும் ஒரு நபர் வார நாட்களில் விடுப்பு எடுக்காமல் மருத்துவப் பரிசோதனையை முடிக்க முடியும், ஒரு குடும்பத்தினர் தங்கள் வயதான பெற்றோரைக் குறிப்பிட்ட நாளில் செய்யப்படும் பரிசோதனைக்கு அழைத்து வர முடியும், மேலும் தொடர் ஆலோசனைக்காகக் காத்திருக்கும் நோயாளி திங்கட்கிழமை வரை காத்திருக்க வேண்டியதில்லை.
ஞாயிற்றுக்கிழமை மருத்துவச் சேவைகளை மிகவும் சீரானதாகவும், நோயாளிகளுக்கு வசதியானதாகவும் மாற்ற இத்திட்டம் அப்பல்லோவின் தற்போதைய மருத்துவக் உள்கட்டமைப்பு, மருத்துவர்கள், பரிசோதனை மையங்கள், அறுவை சிகிச்சைக்கூடங்கள் மற்றும் ஒருங்கிணைந்த பராமரிப்புக் குழுக்களைப் பயன்படுத்தும்.
தரமான மருத்துவச் சேவையை மேலும் சரியான நேரத்திலும், எளிதில் அணுகக்கூடியதாகவும், நோயாளிகளை மையமாகக் கொண்டதாகவும் மாற்றுவதற்கு அப்பல்லோ எடுத்து வரும் நீண்டகால அர்ப்பணிப்பின் ஒரு இயல்பான விரிவாக்கமே இத்திட்டமாகும்.
