அட்சய திருதியை நாளான இன்று தங்கம் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.38,528க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.4,816க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசு குறைந்து ரூ.67க்கு விற்பனை செய்யப்படுகிறது. அட்சய திருதியை முன்னிட்டு மக்கள் நகை வாங்க ஆர்வம் காட்டலாம் எனப்படும் நிலையில் தங்கம் விலை குறைந்துள்ளது.


அட்சய திருதியையொட்டி நகைக்கடைகள் அதிகாலை முதலே திறக்கப்பட்டுவிட்டன. இன்று ரம்ஜான் பண்டிகையால் அரசு விடுமுறை என்பதால், எந்தவித தொந்தரவுமின்றி பொதுமக்கள் நகைகள் வாங்க காலை முதலே கடைகளில் குவிந்து வருகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக கடைகள் மூடியிருந்ததால், தற்போது நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நகைக்கடை உரிமையாளர்கள் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு தேநீர், ஜூஸ் போன்றவை அளித்து அன்பாக வரவேற்று வருகின்றனர்.




அட்சய திரிதியை என்றால் என்ன?


அட்சய திரிதியை அல்லது அட்சய் தீஜ் என்றழைக்கப்படும் இந்த நாள் இந்து மற்றும் சமணர்களின் புனித நாள் ஆகும். இது ஆண்டுதோறும் தமிழ் மாதமான சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுகிறது. முதல் யுகமான கிருதயுகத்தில் பிரம்மனால் உலகம் தோற்றுவித்த நாள் அட்சய திரிதியை நாள் என நம்பப்படுகிறது. 


அட்சய திரிதியில் தங்க நகை வாங்கினால் ஐஸ்வர்யம் உண்டாகும் என்பது ஐதீகம். அதனால் பலரும் அந்த தினத்தன்று நகை வாங்க விருப்பப்படுவர்.


இந்த ஆண்டு அட்சய திரிதியை என்று வருகிறது?
இந்த ஆண்டு அட்சய திரிதியை நாளானது மே 3 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வருகிறது.


அட்சய திரிதியை பூஜை நேரம் எது?


அட்சய திரிதியை பூஜை நேரமானது அதிகாலை 05:39 மணி முதல் மதியம் 12:18 மணி வரை. இந்த நேரத்தில் பூஜை செய்தால் எல்லா நலமும் வளமும் பெறலாம்.


திரிதியை தொடங்கும் நேரம்: அதிகாலை 05:18 மே 03, 2022
திரிதியை முடியும் நேரம்:  காலை 07:32 மே 04, 2022


ஒவ்வொரு நகரத்தில் அட்சய திரிதியை முகூர்த்த நேரம் எது?


06:06 am to 12:32 pm - புனே
05:39 am to 12:18 pm - புதுடெல்லி
05:48 am to 12:06 pm - சென்னை
05:47 am to 12:24 pm - ஜெய்ப்பூர்
05:49 am to 12:13 pm - ஹைதராபாத்
05:40 am to 12:19 pm - குர்கான்
05:38 am to 12:20 pm - சண்டிகர்
05:18 am to 11:34 am - கொல்கத்தா
06:10 am to 12:35 pm - மும்பை
05:58 am to 12:17 pm - பெங்களூரு
06:06 am to 12:37 pm - அகமதாபாத்
05:38 am to 12:18 pm - நொய்டா


அட்சய திரிதியை என்பதன் அர்த்தம் என்ன?


அட்சய திரிதியை என்பது சம்ஸ்கிருத வார்த்தை. அட்சயா என்றால் வளம், வெற்றி, இன்பம், நம்பிக்கை. திரிதியை என்றால் நிலவின் மூன்றாம் பிறை. இந்த நாளானது இந்து காலண்டரின் படி சித்திரை மாதத்தின் மூன்றாவது சந்திர தினத்தில் வருகிறது.