Aadhar Card Changes : மத்திய அரசு வழங்கும் தனிமனித அடையாள அட்டை, தற்போது ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் இன்றியமையாததாக மாறியுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கும் அனைத்து நலத்திட்டங்களும், ஆதார் அடிப்படையிலேயே செயல்படுத்தப்படுகிறது.


ஆதார் கார்டு (Aadhar Card)


தனிநபரின் கருவிழி மற்றும் கைரேகைகள் சேகரிக்கப்பட்டு, அதன் விவரங்களுடன் வழங்கப்படும் ஆதார் அட்டையை அரசு திட்டங்களுக்கு பயன்படுத்துவதன் மூலம், மோசடிகள் தவிர்க்கப்படும் என நம்பப்படுகிறது.  இதில் இடம்பெற்றுள்ள சுயவிவரங்களில் ஏதேனும் தவறு இருந்தால் அதனை திருத்திக் கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறது. 


ஆதார்  அட்டையை பதிவு செய்த நாளிலிருந்து 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது ஆதாரை புதுப்பிக்க வேண்டும் என்று ஆதார் அமைப்பு தெரிவித்துள்ளது.


புதிய மாற்றம்:


இந்த நிலையில், ஆதார் கார்டு பதிவு மற்றும் புதுப்பிப்புகளுக்கான புதிய விதிமுறைகளை UIDAI தற்போது வெளியிட்டிருக்கிறது. அதாவது, ஆதார் கார்டு பதிவு செய்வதற்கும், புதுப்பிப்பதற்கும் இனிமேல் ஆன்லைனிலேயே மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


2016-ஆம் ஆண்டு விதிகளின்படி, ஆன்லைனில் முகவரியை மட்டுமே புதுப்பிக்க முடியும். இதர விவரங்களை மேம்படுத்த, ஆதார் எண் வைத்திருப்பவர் பதிவு மையத்திற்கு செல்ல வேண்டியிருந்தது.


எனவே, இந்த புதியவிதிகளின்படி, ஆதார் அட்டை வைத்திருப்பவர் மொபைல் எண் உட்பட அனைத்தையும் ஆன்லைனிலையே புதுப்பிக்கவும், பதிவும் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொபைல் ஆப் அல்லது இணையத்தில் ஆதார் அட்டை பதிவு மற்றும் புதுப்பிக்கவும் முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான படிவங்களையும்  UIDAI  வெளியிட்டிருக்கிறது. 


படிவம் 1: 18 வயதுக்கு மேற்பட்ட இந்திய குடியுரிமை பெற்றவர்கள் மற்றும் குரியுரிமை இல்லாத நபர்கள் ஆதார் கார்டை பதிவு மற்றும் புதுப்பிக்க படிவம் 1-ஐ பயன்படுத்தலாம்.


படிவம் 2: இந்தியாவிற்கு வெளியே முகவரி உள்ள NRI-கள் ஆதாரை பதிவு மற்றும் புதுப்பிப்புக்காக படிவம் 2-ஐ பயன்படுத்தலாம். 


படிவம் 3: 5 முதல் 18 வயதுக்குட்பட்ட (குடியிருப்பு அல்லது இந்திய முகவரியைக் கொண்ட என்ஆர்ஐ) ஆதார் பதிவுக்கு படிவம் 3-ஐ பயன்படுத்தலாம்.


படிவம் 4: இந்தியாவிற்கு வெளியே முகவரிகளைக் கொண்ட இந்திய குடியுரிமை பெறாத குழந்தைகளுக்கு படிவம் 4 பயன்படுத்தப்படும். 


படிவம் 5: 5 வயதுக்குட்பட்ட குடியுரிமை கொண்ட அல்லது குடியுரிமை பெறாத குழந்தைகள் (இந்திய முகவரியை கொண்டவர்கள்) ஆதார் காட்டில் பதிவு மற்றும் புதுப்பிப்பதற்கு படிவம் 5-ஐ பயன்படுத்தலாம். 


படிவம் 6: 5 வயதுக்குட்பட்ட இந்திய குடியுரிமை பெறாத குழந்தைகள் (இந்தியாவிற்கு வெளியே முகவரி கொண்டவர்கள்) படிவம் 6-ஐ பயன்படுத்தலாம். 


படிவம் 7: 18 வயதுக்கு மேற்பட்ட இந்திய குடியுரிமை பெற்ற வெளிநாட்டவர் படிவம் 7-ஐ பயன்படுத்தலாம். பாஸ்போர்ட், OCI கார்டு, விசா, ஆகியவற்றின் விவரங்கள் இந்த படிவத்திற்கு தேவைப்படும்.


படிவம் 8: 18 வயதை அடைந்தவுடன் ஆதார் எண்ணை ரத்து செய்ய படிவம் 8-ஐ பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேற்குறிப்பிட்ட படிவங்களை பயன்படுத்தி ஆதார் அட்டை பதிவு மற்றும் புதுப்பிப்பதற்கு ஆன்லைனிலேயே  மேற்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.