ஒரு படம் வெளியாகும் முன்னர் ப்ரோமோஷன் வேலைகள் நடப்பது வழக்கம். பெரிய ஹீரோ படம் என்றால் அதை காண, ஒரு தனிக்கூட்டம் அழைப்பு விடாமலே தியேட்டருக்கு செல்லும். இதுவே, புதுமுகங்கள் நிறைந்த படம் என்றால் கதை வலுவாக இருந்தால் மட்டும்தான், அது சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும்.  ஒரு சில படங்களை பொருத்தவரை அதில் ஒன்றுமே இருக்காது. அதற்கு ஓவர் ஹைப் கொடுக்கப்படும்.  இது போன்ற படங்களை நேரில் காண சென்றால் பணமும் நேரமும்தான் வீண்போகும்.


இப்படியாக வழக்கம் போல் இணையத்தில் ஒரே அலப்பறை.. மஞ்சுமெல் பாய்ஸ் அப்படி இருக்கு.. இப்படி இருக்கு, பார்த்தே ஆகணும்... இது போன்ற கமெண்டுகளையும், குணா படத்தில் இடம்பெற்று இருக்கும் “கண்மணி அன்போடு காதலன்” எனும் பாட்டையும்தான் இன்ஸ்டாவில் காண முடிந்தது. ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலாவதாகவும் இடம் பிடித்திருந்தது.  இவை அனைத்தும் காதலர்களுக்கு பிடித்த மாதமான பிப்ரவரியின் மூன்றாவது வார இறுதியில் நடந்தது.


இது ஏதோ லவ்வர்ஸ் படம் என நினைத்தேன் (ட்ரெய்லரை காணும் வரை). ஒன் லைன் கதைகளை வைத்து மாஸ் செய்யும் மலையாள சினிமாவை சேர்ந்த படம் என்பதால் இதன் மீது தனி ஆர்வம் ஏற்பட்டது.இன்ஸ்டா நண்பர்களின் ஸ்டோரியை அங்கும் இங்கும் பார்த்துவிட்டேன். என்னுடன் வேலை பார்க்கும் சக பணியாளர், அப்படத்தை கண்டு ஏபிபிக்காக விமர்சனம் கொடுத்து இருந்தார். அதையும் பார்த்து விட்டேன். விமர்சனத்தை சரியாகவும் கறாராகவும் கொடுக்கும் அவரே, “ம்ம்.. படம் நல்லா இருக்கு.. பார்க்கலாம்..வொர்த்..” என்றார்.


சரி..இதுக்கு மேல என்ன என்று, விடுமுறை நாளில் பிரபல சத்யம் திரையரங்கில் படம் பார்க்க சென்றேன்.
டிக்கெட் வாங்கும் இடத்தில் சரியான கூட்டம். வார நாளில் அதுவும் புதன்கிழமையில் இப்படி ஒரு கூட்டமா? என ஒரு ஷாக்.. ஒரு பக்கம் டென்ஷன்.. மனதிற்குள் “நமக்கு டிக்கெட் கிடைக்காதா?” அப்படி ஒரு எண்ணம் ஓடிக்கொண்டது. 


படம் தொடங்கியது 


டிக்கெட் வாங்கி அரங்கிற்குள் சற்று தாமதமாகதான் சென்றேன். போகும் போதே குணா படத்தின் பாடல். பின்னர் கதை தொடங்கியது. கேரளாவில் ஒரு கேங்காக இருந்த  நண்பர்கள் பற்றிய உண்மை கதையை விவரிக்கும் அப்படத்தின் முதல் 20 நிமிடங்கள் அறிமுக காட்சி, கல்யாணம், வம்பு இழுப்பது என அப்படியே போனது. 


கோவாவிற்கு டூர் போகலாம் என ப்ளான் செய்து, கடைசியாக கொடைக்கானலுக்கு புறப்படுகின்றனர். போகும் வழியில் பழனி முருகன் கோவில். பார்க்க பிரகாசமாக இருந்தது. அங்கு ஒரு கேசட் கடையில் கமல் ஹிட்ஸ் சிடியை வாங்கி கொண்டு காரில் வைப் செய்துக்கொண்டே போக மலைகளின் இளவரசியான கொடைக்கானலும் வந்தது. அங்கு உள்ள சுற்றுலா தளங்களை சுற்றிவிட்டு, குணா குகையை விட்டுவிட்டோமே என அங்கேயும் செல்கின்றனர். 


பயணம் சூன்யமாகிறது 


வால் இருந்தால் வானரம்தான் என சொல்லும் அளவிற்கு ரகளை பிடித்தவர்களாக இருக்கும் இவர்கள், சும்மா இல்லாமல், ஆபத்து வாய்ந்த குணா குகையின் தடை செய்யப்பட்ட பகுதிக்கு செல்கின்றனர்.  அங்கு , “மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதர் காதல் அல்ல” என பாடி கொண்டிருக்கும் போதே, கூட்டத்தில் ஒருவரான சுபாஷ் எனும் கதாபாத்திரம் ஒரு குழிக்குள் விழுந்து விடுகிறார். அந்த நொடியில் இருந்து கோளாறு பிடித்த மஞ்சுமெல் பாய்ஸின் இனிய பயணம், சூன்யமாகிறது.


அந்த இடத்தில் உள்ளவர்களிடம் உதவிக்கேட்கின்றனர். ஒரு சிலர் குகைக்குள் இருக்க, ஒரு சிலர் காவல் நிலையத்திற்கும் செல்கின்றனர். விவரத்தை கூறி உதவி கேட்டு, அடி மேல் அடி வாங்கி கொள்கின்றனர். ஒரு வழியாக அவர்கள் உதவி செய்ய ஒப்புக்கொண்டனர். இருப்பினும், உங்கள் நண்பர் இறந்துவிட்டார், அவரை மறந்துவிட்டு இடத்தை காலி செய்யுங்கள் என்பதையே மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருக்கின்றனர்.


பலரை காவு வாங்கிய இந்த குகையின் பெயர் டெவில்ஸ் கிட்சன் என்றும் காலப்போக்கில் குணா படம் படம்பிடிக்கப்பட்ட காரணத்தால் பெயர் மாறிவிட்டது என்றும் குழியின் ஆழம் 900 அடி இருக்கும், கொடைக்கானல் மலையின் உயரம்தான் இதன் ஆழம் என சற்று பில்டப் செய்தனர்.


இந்த துயரத்தில் மழையும் சதி செய்து அவர்களின் நிலைமையை இன்னும் சிக்கலாக மாற்றுகிறது. மழை நீர் குழிக்குள் போக கூடாது என சுபாஷின் நண்பர்கள் ஏதேதோ செய்கின்றனர். ஆனால், எதுவும் எடுபடவில்லை. தோழர்களின் வருத்தமும் கண்ணீரும் மழைநீருடன் கரைந்து குழிக்குள் ஓடிகிறது. ஆழத்தில் இருந்து வந்த கதறல் சத்தம் அவர்களை ஆசுவாசப்படுத்தியது. நம்பிக்கை பிறக்கிறது. 


க்ளைமாக்ஸ் காட்சி : திகில் ஓவர்லோடட்


அதன் பிறகு காவலர்கள் கூடிய அந்த இடத்தில் தீயணைப்பு வீரர்கள் சுபாஷை குழியில் இருந்து மீட்க தேவையான பொருட்களை எடுத்து வருகின்றனர். பயிற்சி பெற்ற அந்த வீரர்களும் பயங்கரமான அந்த குழிக்குள் போக அச்சப்படுகின்றனர். பின்னர் சுபாஷின் நெருக்கமான நண்பர் சிஜு டேவிட் குழிக்குள் இறங்க ஒப்புக்கொள்கிறார்.


இந்த இடத்தில் ஒன்று சொல்லி ஆக வேண்டும், சிறுவயது நினைவுகளையும் சமீபத்திய நிகழ்வுகளையும் காட்சியாக கோர்தது பிரமாதம். இந்த விஷயம் எனக்கு புதிதாக இருந்தது. பால்ய காலத்தில் நீரில் மூழ்கிய சுபாஷை காப்பாற்றிய சிஜுதான் இப்போதும் களம் காண்கிறார். 


தீயணைப்பு வீரர்கள் கயிறை எப்படி சுபாஷின் உடம்பில் கட்ட வேண்டும் என சிஜுவிற்கு சொல்லிக்கொண்டுக்கின்றனர். நண்பனை காப்பாற்ற வேண்டும் என்ற ஒற்றை எண்ணம் கொண்ட சிநேகிதனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஒருவழியாக உள்ளே செல்கிறார். கரடுமுரடான வழியை கடந்து நண்பனை கண்ட உடன் அவரை தட்டி எழுப்ப முயன்ற சிஜுவின் கழுத்தை பயத்தில் நெருக்கிறார் சுபாஷ். ப்ப்ப்ப்பா... அப்படி ஒரு சீன் அது. பயந்து போய் விட்டேன். பக்கத்தில் இருந்த நண்பரை பிடித்துக்கொண்டே பார்க்கிறேன்...அடுத்த சில நிமிடங்கள் திகிலாக இருந்தது. நான் தனியாக சென்று இருந்தால் யாரென்று தெரியாத ஒருவரையும் பயத்தில் அணைத்திருப்பேன்.


 சுபாஷ் வெளியே வந்துவிடுவான் என்பது ஸ்பாய்லர் காட்சியை இன்ஸ்டாவில் கண்ட எனக்கு முன்பே தெரியும். இந்த இடத்தில் ஒரு புல்லரிக்கும் காட்சி உண்டு. கயிறு இழுக்கும் போட்டியில் எதிர் கேங்குடன் தோற்றுப்போகும் மஞ்சுமல் பாய்ஸ், சுபாஷை காப்பாற்ற பாடுபட்டு கயிறை வலுவாக இழுக்க, “மனிதர் உணர்ந்து கொல்ல இது மனித காதல் அல்ல” எனும் வசனம் வரும். முதலில், இந்த வசனம் வந்த போது வேடிக்கையாக இருந்தது. இம்முறை அதற்கு மாறாக கண்ணீர் வந்தது.. ஆனால், ஆனந்த கண்ணீர். குகைக்குள் இருந்து வரும் சுபாஷை பார்க்கும் போது, குழந்தை தாயின் கருவறைக்குள் இருந்து வருவது போல் இருந்தது. நண்பர்கள் இழுத்த கயிர் தொப்பில் கொடியாக தென்பட்டது. அப்போது, காதலை விட நட்பு புனிதமானது என்ற எண்ணம் தோன்றியது.


காப்பாற்றப்பட்ட சுபாஷ் சொந்த ஊருக்கு கொண்டு வரப்படுகிறார். சுபாஷின் அம்மா சிஜுவை திட்டித்தீர்க்கிறார். தன் மகனை காப்பாற்றியதே குட்டனாகிய சிஜுதான் என்ற உண்மை தெரிந்த உடன் ஓடி வந்து சிஜுவின் கைகளின் மீது தலையை வைத்து ஓ என அழுகிறார். கட்டி அணைத்துக்கொண்டார். இனி, சிஜுவும் சுபாஷின் தாயிற்கு மற்றொரு பிள்ளைதான். இப்போது சொல்லுங்கள் காதலுக்காக நீங்கள் எவ்வளவு தொலைவு செல்வீர்கள்? காதல் காதலர்களுக்கு மட்டும்தானா? நண்பர்களுக்கு கிடையாதா?


இனி குணா குகைக்கு சென்றால், கமல் மட்டுமல்ல மஞ்சுமெல் பாய்ஸும் உங்கள் நினைவுக்கு வருவார்கள்!


இப்படம் ஒரு உண்மையான கதை மட்டுமல்ல. எனக்கு கிடைத்த அழகான அனுபவம்!