தன்னுடைய 92 வயதில் கடந்த பிப்ரவரி 6 அன்று மரணமடைந்த பாடகர் லதா மங்கேஷ்கர் இந்தியாவின் மிகவும் பிரபலமான பாடகர் என்பதில் மாற்றுக்கருத்து இருக்காது. லதா மங்கேஷ்கர் பாடல்களின் காலத்தில் அவருக்கு இணையான பெண் பின்னணி பாடகர்கள் யாரும் இல்லை என்றாலும், அவரது சகோதரி ஆஷா போன்ஸ்லே சிறந்தவர் எனக் கூறுவோரும் உண்டு. எனினும், லதா மங்கேஷ்கரின் பிரபலத்தைவிட அதிகம் பிரபலத்தைப் பெற்றவர் ஆண் பின்னணிப் பாடகர் முகமது ரஃபி. லதா மங்கேஷ்கர் `மெலடி க்வீன்’ என வர்ணிக்கப்பட்ட போது, முகமது ரஃபி `மெலடி கிங்’ எனக் கருதப்பட்டார். முகமது ரஃபி மரணமடைந்த போது அவருக்கு வயது 55. இந்த ஒப்பீட்டில் லதா மங்கேஷ்கரின் ஆயுள் அதிகமாக இருந்தது அவருக்கு ஆதாயமாக இருந்திருக்கிறது. ஆஷா போன்ஸ்லேவின் பாடல்கள் வெவ்வேறு விதங்களில் இருந்தாலும், அவர் சிறந்தவரா, லதா மங்கேஷ்கர் சிறந்தவரா என்பது தனிப்பட்ட ரசிகர்களின் விருப்பம்.
லதா மங்கேஷ்கரின் புகழை வெளிப்படுத்தும் விதமாக, அவர் மறைந்த நாள் முதல் தற்போது வரை ஊடகங்கள் அவர் பாடிய புகழ்பெற்ற பாடல்களை நினைவுகூர்ந்து வருகின்றன. சிலர் அவர் 36 மொழிகளில் பாடினார் எனவும், வேறு சிலர் அவர் `வெறும்’ 15 முதல் 20 மொழிகளில் மட்டுமே பாடினார் என்றும் கூறுகின்றனர். பெரும்பாலானோர் ஒரு மொழியிலேயே மிகச் சிறப்பாக பாட முடியாத நிலை இருக்கும் போது, இத்தனை மொழிகளில் ஒருவர் பாடுவது என்பது அபாரமான திறமை இருந்தால் மட்டுமே முடியும். லதா மங்கேஷ்கர் பாடிய பாடல்களின் எண்ணிக்கை 25 ஆயிரம் எனவும், 35 ஆயிரம் எனவும் சமீபத்தில் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இந்தியாவில் பாடல்கள் மீதான மக்களின் பிரியம் அதிகமாக இருப்பதாலும், பாடல்களின் ரசிகர்களும் அதிகமாக இருப்பதாலும், லதா மங்கேஷ்கர் பாடிய பாடல்களின் மொத்த எண்ணிக்கை யாருக்கும் தெரியாது என்பது ஆச்சரியம் அளிப்பதாக இருக்கிறது. எனினும், லதா மங்கேஷ்கர் `இந்தியாவின் குயில்’ என்று அழைக்கப்படுவது பெரும்பாலானோருக்கும் தெரிந்த செய்தியாக இருக்கிறது. 1960களின் முடிவில் இந்தியாவில் வளரும் ஒருவருக்குப் பள்ளிக்கூடத்தில் விற்கப்படும் `ஜி.கே’ (பொது அறிவு) புத்தகத்தில் லாலா லஜ்பத் ராய், `பஞ்சாபின் சிங்கம்’ எனவும், கான் அப்துல் கஃபார் கான், `எல்லையின் காந்தி’ எனக் கருதப்படுவது போல, இந்தப் பட்டியலில், `இந்தியாவின் குயில்’ என்று அழைக்கப்படுவது சரோஜினி நாயுடு எனவும், லதா மங்கேஷ்கர் அல்ல என்பதும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சரோஜினி நாயுடு இந்திய ஒன்றிய மாகாணங்களின் ஆளுநராக இருந்தவர் எனினும், ஆங்கிலத்தில் மிகச் சிறந்த கவிஞராக இருந்ததால், அவருக்கு இந்தப் பட்டம் வழங்கப்பட்டிருந்தது. அவரது கவிதைகளுக்காக அவரை `பாரதத்தின் கோகிலா’ என்று அழைத்தார் மகாத்மா காந்தி.
காந்தி ஆங்கில இலக்கியத்தில் புலமைகொண்டவர் என்பதாலும், ஆங்கிலக் கவிதைகளுக்கும் குயில்களுக்கும் இடையிலான உறவு குறித்து தெரிந்தவர் என்பதாலும் அவர் சரோஜினி நாயுடுவை அவ்வாறு அழைத்துள்ளார். பிரபல ஆங்கிலக் கவிஞர் ஜான் கீட்ஸ் எழுதிய `ஓட் டூ எ நைட்டிங்கேல்’ என்ற கவிதையின் வரிகள் இந்தியப் பொதுப்புத்தி லதாவின் குரல் மீது கொண்டிருந்த காதலை வெளிப்படுத்துகின்றன.
ஜான் கீட்ஸின் நண்பரும், அவர் காலத்துக் கவிஞருமாண ஷெல்லி, தன்னுடைய புகழ்பெற்ற படைப்பான `Defence of Poetry' என்ற கட்டுரையில் குயில்கள் உலகத்திற்குக் கட்டளையிடுவது குறித்து தனக்கு சந்தேகம் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார். `ஒரு கவிஞர் என்பவர் குயில் போல, இருளில் அமர்ந்து தன்னுடைய இனிய குரல் மூலமாகத் தன் தனிமையைப் போக்க தானாகப் பாடுகிறது’ என ஷெல்லி குறிப்பிடுகிறார். ஷெல்லி குறிப்பிடும் `நைட்டிங்கேல்’ என்பது இந்திய வகை குயில் இல்லை என்பதைத் தெரிந்த போதும், காந்தி சரோஜினி நாயுடுவை இந்தியக் குயில் வகையான `கோகிலா’ என்ற பறவையோடு ஒப்பிட்டுள்ளார்.
லதா மங்கேஷ்கரின் புகழின் அளவை இவ்வாறு அளவிட முடியாது என்ற போதும், மற்றொரு மிகப்பெரிய கேள்வி நம் முன் இருக்கிறது. லதா மங்கேஷ்கரை இந்தியாவின் குரல் எனக் கருதும் அளவுக்கு அவருக்கு எப்படி புகழ் கிடைத்தது என்பதும், இத்தனை பத்தாண்டுகளாக எப்படி புகழின் உச்சியிலேயே அவர் இருந்தார் என்பதும் இந்தக் கேள்விகள். பலரும் இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் விதமாக, லதா மங்கேஷ்கரின் அழகான குரலைச் சுட்டிக் காட்டுகின்றனர். இதன்மூலம் அவர் பாடிய பாடல்களில் அவரது குரலும், சுருதியும் கச்சிதமாக இருப்பதாலும், அவரால் அவர் குரல் கொடுக்கும் எந்த நடிகையின் குரலாகவும் மாறிவிட முடிகிறது. லதா மங்கேஷ்கரின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய நஸ்ரீன் முன்னி கபீர் இதுகுறித்து கூறும்போது, லதா மங்கேஷ்கருக்குப் பாடலின் மனநிலையைப் புரிந்துகொள்ளும் திறமையும், வரிகளின் பொருளும் புரிவதால் அவரால் இவ்வாறு தாக்குப்பிடிக்க முடிந்தது எனக் கூறுகிறார். மேலும், லதா மங்கேஷ்கரிடம் மன உறுதியும், சுய ஒழுக்கமும் இருந்ததாக அவர் கூறியுள்ளார். 1940களிலும், 1960களில் பாடல்களைப் பாடுவதற்காக உருது மொழி தெரிந்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் எழுந்தத போது, அதற்காக லதா மங்கேஷ்கர் உருது மொழியைக் கற்றுக் கொண்டார். சமீபத்தில் பாடலாசிரியர் ஜாவித் அக்தர் நேர்காணல் ஒன்றில், லதா மங்கேஷ்கர் இதுவரை எந்த உருது சொல்லையும் தவறாக உச்சரித்தது இல்லை எனவும், அதுவே அவரது பாடல்களின் இடம்பெற்றிருந்த மேஜிக்கிற்கான காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.
லதா மங்கேஷ்கர் எப்படி இந்திய மக்களின் மனங்களில் இடம்பிடித்தார் என்பதை மேற்கூறியவை மட்டுமே விடை அளிப்பவையாக இல்லை. லதா மங்கேஷ்கர் 1949ஆம் ஆண்டு பாடகராக அறிமுகமான காலகட்டம் மிக முக்கியமானது. இந்தியா சுதந்திரம் பெற்று வெகுசில ஆண்டுகளாக ஆகியிருந்த போது, பெண்களின் நிலை குறித்த கேள்வி பரவலாக எழுந்திருந்தது. இந்திய விடுதலை இயக்கத்தில் பெண்கள் பங்கேற்றிருந்தாலும், அப்போதைய அரசில் பெண்களுக்கான இடம் பெரிதாக வழங்கப்படாமல் இருந்தது. மேலும், நாட்டு சுதந்திரத்திற்கான போர் என்பது பாரத மாதாவுக்கான சேவை என்றும் முன்வைக்கப்பட்டிருந்தது. பெண்கள் கடவுளாகவும், நாட்டின் விடுதலைக்கான உருவமாகவும் முன்வைக்கப்பட்ட காலத்தில், பெண் தன்மையோடு அந்தக் காலகட்டத்தின் அரங்கிற்குள் தன் குரலால் நுழைந்தார் லதா மங்கேஷ்கர். அவரது பாடல்கள் பெரும்பாலான பெண்களுக்குக் குரலாக அமைந்தன.
லதா மங்கேஷ்கரின் பாடல்கள் ஆத்மார்த்தமான உணர்வை அளித்த போது, அவரது சகோதரி ஆஷா போஸ்லேவின் பாடல்கள் பெண்களின் உடல்கள் தொடர்பாகவும், சற்றே பாலியல் தொனிகளைக் கொண்டதாகவும் இருந்தன. லதா மங்கேஷ்கரின் திறமை, குரல், உச்சரிப்பு முதலான பல்வேறு காரணங்கள் அவரது புகழுக்குக் காரணமாக இருந்தாலும், அவரது குரல் புதிதாக சுதந்திரமடைந்த இந்தியாவின் கன்னித்தன்மை மாறாத பெண்மையைக் குறிப்பதாக இருந்திருக்கிறது. ஆஷா போஸ்லே குறித்து பெரிதும் யாரும் பேசுவதில்லை. லதா மங்கேஷ்கர் உருவாக்கிய இந்த மாயாஜாலத்தை இந்தியாவுடனும், இந்திய மக்களுடனும் தொடர்புபடுத்தி இன்னும் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும்.