பிரதமர் நரேந்திர மோடி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரின் அரசியலால் வட இந்தியாவில் வாழக்கூடிய மக்கள் இந்துத்துவா என்ற பொது அடையாளத்துக்குள் கரைந்து கொண்டிருக்கிறார்கள். 90-களில் சமூக நீதியை அடிப்படையாகக்  கொண்டு அரசியல் செய்தவர்களெல்லாம் இன்று வயதாகி,  தங்கள் எதிர்காலத்தை மறுவரையறை செய்ய போராடி வருகிறார்கள்.


இந்தச் சூழலில் சமூக நீதி அடையாளத்தை முன்னிறுத்தும் அரசியலை தமிழகம் மீண்டும் கையில் எடுத்திருக்கிறது. வெகுஜன அரசியல் மூலமாகவும், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையிலும், நீதிமன்றங்கள் வாயிலாகவும் நீட் தேர்வு, இடஒதுக்கீடு போன்ற சமூக நீதிப்பிரச்னைகளை தமிழ்நாட்டு முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிறுத்தி வருகிறார்.  முந்தைய ஆண்டுகளில் மண்டல் (மண்டல் ஆணைக் குழு) மற்றும் பொதுவுடைமை அரசியல் இரண்டும் முன்னிறுத்தப்பட்டன. ஆனால், இந்தமுறை மண்டல் மற்றும் சந்தைப் பொருளாதாரம் என்ற இரண்டு வலிமைமிக்க ஃபார்முலாக்களை மு.க ஸ்டாலின் கையில் தன் கையில் எடுத்திருக்கிறார். 21-ஆம் நூற்றாண்டின் எதார்த்தங்கள் ஸ்டாலினின் இந்த அரசியலில் அடங்கியுள்ளன.   



முதலமைச்சர் மு.க ஸ்டாலின்


 


நாட்டின் பிற பகுதிகளில், சமூக நீதிக்கான அரசியலும், கருத்துக்களும் முடக்கநிலையைச் சந்தித்து வருகின்றன. அரசியல் ஆய்வாளர் கிறிஸ்தோஃபி ஜாப்ரிலா சரியாகக் குறிப்பிட்டுள்ளபடி, "மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள், அதிகார அரசியலில் மாபெரும் தாக்கம் செலுத்த வகை செய்த  "மௌனப் புரட்சி" (Silent Revolution) இப்போது முடிந்துவிட்டது. ஏனெனில், பாஜகவின் தூண்டுதலால் உயர் சாதி மேலடுக்கு வகுப்பினர், மாற்றுப் புரட்சியை ஊற்றெடுக்க வைக்க போதுமான ஒரு விஷயமாக இந்த மௌனப் புரட்சி இருந்தது. குறிப்பாக, 2014-ஆம் ஆண்டுக்குப் பின்னால் இருக்கும் காலங்களில், பாஜகவின் எழுச்சிக்குப் பிறகு, சமூகநீதி மரபு நெருக்கடியைச் சந்தித்தது.  எனவே, நமக்கான தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்தும் அணுகுமுறையை நாம் தொடங்க வேண்டும். 


ஆனால், நாம் அனைத்தையும் இழந்துவிடவில்லை. நாட்டின் பன்மைக் கலாச்சாரம், பன்மை அடையாளம் ஆகியவற்றைப் பேசும் ஒரு கோட்டையாக தமிழ்நாடு இருக்கிறது. மாற்று மரபுகள் மூலம்  இந்துத்துவ சிந்தாந்தத்துக்கு எதிரான ஒரு பெரும் விவாதத்தை முதல்வர் ஸ்டாலின் உருவாக்கி வருகிறார். சமூக நீதி, பொது நலன்,  பகுத்தறிவு ஆகிய மையக் கருத்தையே திராவிட அரசியல் கொண்டுள்ளது.


தமிழ்நாட்டுக்கு, டெல்லியின் அரசியல் ஒன்றும் புதிய விஷயமல்ல. தேசிய அரசியலில் முன்னாள் முதலமைச்சர்களான கலைஞர் கருணாநிதியும்,செல்வி ஜெயலலிதாவும் வலுவான  கால்தடம் பதித்திருந்தார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதன் தொடர்ச்சியாக சமீபத்தில், கூட்டாட்சி முறை மற்றும் சமூக நீதியை அடித்தளமாகக் கொண்ட ஒரு அகில இந்தியக் கூட்டமைப்பை தொடங்கப்போவதாக மு.க ஸ்டாலின் அறிவித்தார். அதில் அனைத்து மாநிலங்களிலிருந்தும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தலைவர்கள்  இருப்பார்கள் என்றும் குறிப்பிட்டார். இதன் மூலம், தேசிய அரசியலில் தனது விருப்பத்தை ஸ்டாலின் முதன்முறையாக வெளிப்படுத்தினார்.



நரிக்குறவர் இனப்பெண் அஷ்வினி வீட்டில் முதலமைச்சர் ஸ்டாலின்


 


ஒட்டுமொத்த தேசிய அரசியல் விவாதங்களையும், இந்து/முஸ்லீம், மதம்/மதச்சார்பின்மை என்ற விஷயங்களாக பாஜக சுருக்கி விட்டது. பாஜகவின் இந்த ஒற்றை முரண்பாட்டில் மாட்டிக்கொண்ட எதிர்க்கட்சிகள் தங்கள் அரசியல் இருப்பையே இழந்து வருகிறது.


மதச்சார்பற்ற கட்சியாகவே தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் காங்கிரஸ், ஒரு பெரிய அரசியல் பாலைவனத்தில் அதிசயத்தை தேடுகிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஆட்சிக்கு எதிரான மனநிலை அதிகரிக்கும் போது சாத்தியக்கூறுகள் தென்படும் என்பதே அதன் நோக்கம். மறுபுறம் பார்த்தால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிராந்திய பெருமையுடன் கூடுதலாக மதச்சார்பின்மை-வகுப்புவாதம் என்று முரண்களுடன் அரசியலை அணுகுகிறார்.


எனவே,தேசிய அரசியல் தளத்தில், கருத்தியல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிடம் இருக்கிறது என்பதனை புரிந்துகொள்ள வேண்டும். 


வட இந்தியாவின் இன்றைய நிலை:  


சில ஆண்டுகளுக்கு முன்பு, வட இந்தியாவில், குறிப்பாக பிகார் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் சமூக நீதி அரசியல் (அல்லது) அடையாள அரசியல் வலுவான சக்தியாக இருந்தது. முலாயம் சிங் யாதவ், கன்ஷிராம், மாயாவதி, லாலு பிரசாத் யாதவ் போன்ற அரசியல் தலைவர்கள் இத்தகைய அரசியலில் பல பரிமாணங்களில் முன்னெடுத்துச் சென்றார்கள். வி.பி சிங், சரண் சிங், எச்.டி.தேவகவுடா ஐ.கே. குஜ்ரால் ஆகியோரின் கூட்டணி ஆட்சியில்  இவர்கள் முக்கிய பங்கு வகித்தனர்.  


முலாயம் சிங், லல்லு பிரசாத் யாதவ், கன்ஷிராம் ஆகியோர் பிரதமராக வர வேண்டும் என்று விருப்பத்தைக் கொண்டவர்கள்தான். அவர்களின் விருப்பம் நிறைவேறாவிட்டாலும், மன்மோகன் சிங் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலாவது ஆட்சியில் முலாயம் சிங் மற்றும் லாலு பிராசத்தின் பங்கு மிகவும் முக்கியமானதுதான்.


ஆனால், அந்த காலம் முடிந்துவிட்டது. நிதிஷ் குமாரின் அரசியல்  யுக்தியால் லல்லு பிரசாத் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளார். கடந்த 18 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக நிதிஷ் இருந்து வருகிறார். உத்தர பிரதேச மாநிலத்தில் 2014, 2017 மற்றும் 2019 தேர்தல்களில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி படுதோல்வி அடைந்தது. மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியின் செயல்பாடுகள் இன்னும் மோசமாக உள்ளன. வட இந்தியாவில் உள்ள அரசியல் வெற்றிடத்தை இனம் கண்டுகொண்டு, அவற்றை நிரப்பு ஒரு முயற்சியாகவே மு.க ஸ்டாலின் செயல்பாடுகள் அமைந்துள்ளது என தோன்றுகிறது


நடப்பு கல்வியாண்டு முதல் மருத்துவ இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டு திட்டத்தில் ஓபிசி வகுப்பினருக்கு 27% ஒதுக்கீடு வழங்க திமுக முன்னெடுத்த போராட்டத்தில் கிடைத்த வெற்றி, ஸ்டாலினின் டெல்லி அரசியல் பயணத்துக்கு மேலும் வலுசேர்க்கும். 


இந்து கோயில்களை வைத்து அரசியல் செய்கிறது பாஜக. ஆனால், சமூக நீதியின் மற்றொரு அடையாளமாக இந்து கோயில்களையே ஆயுதமாக்கி, திராவிட அரசியல் முன்மொழிகிறது. சமீபத்தில், நரிக்குறவர் என்பதற்காக கோயில் அன்னதானத்தில் உட்கார அனுமதிக்கவில்லை என்று புகார் தெரிவித்த அஷ்வினி என்ற பெண்ணுடன், அதே அன்னதான மண்டபத்தில் உட்கார்ந்து சாப்பிட்டிருக்கிறார் இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு. அதேபோன்று, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற வரலாற்று திட்டத்தை நிறைவேற்றிக் காட்டினார். 



அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு


 


பெரும்பாலான திட்டங்கள் தமிழக மக்களின் வளர்ச்சிக்கானதாக இருக்கும் நிலையில், கூட்டாட்சியின் மூலமே சமூகநீதியை நிலைநிறுத்தமுடியும் என்பதனை ஸ்டாலின் நன்றாக புரிந்துவைத்திருக்கிறார். அதே சமயம், சமூக நீதி அரசியலில், சமூகத்தில் உள்ள அனைத்து தலைவர்களையும், சம அளவிலானவர்களாகவே அவர் கருதுகிறார். இந்த விஷயத்தில், மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் தெளிவான அரசியல் புரிதல் தனக்கு இருக்கிறது என நம்புகிறார் ஸ்டாலின். அந்தப் புரிதல், இயல்பு காரணமாகவே, தலைமைப் பொறுப்பு தன்னைத் தேடிவரும் என்று அவர் நினைக்கக்கூடும்.  


(இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்களாகும். Abpநாடு-இன் கருத்துக்களாகாது - ஆசிரியர்)