பிப்ரவரி 18, 1946ல் வெடித்த இந்திய கப்பற்படைக் கிளர்ச்சி (RIN), அதுவரை யாரும் பெரிதாக அறிந்திருக்காதது. பன்னெடுங்காலமாக வளர்ந்து வந்த இந்திய தேசிய ராணுவத்தின் வளர்ச்சியால் மழுங்கடிக்கப்பட்டு வந்தது எனச் சொல்லலாம். 1945 நவம்பரில் உருவான இந்திய தேசிய ராணுவம் ‘நேதாஜி’ என்னும் தனி நபரின் சாகசத்தால் வளர்க்கப்பட்டது எனலாம். அவரது படையெடுப்புகள் இந்திய மக்கள் பல்லாயிரக்கணக்கானோரின் பேசுபொருளாக இருந்தது. அது நாட்டு மக்களின் பாசத்தை வென்றது.1939ம் ஆண்டில், காந்தியின் வெளிப்படையான விருப்பத்துக்கு எதிராக, இரண்டாவது முறையாக காங்கிரஸின் தலைமைப் பதவிக்கு போட்டியிட்டார் நேதாஜி. மகாத்மாவுக்குப் பின்னால்தான் காங்கிரஸ் உள்ளது. அவர் இல்லாமல் அங்கு தனியாக கட்சி இயங்கவில்லை என்பது தெளிவடைந்தது நேதாஜியின் வெற்றிக்கு உதவியாக இருந்தது.


1941ம் ஆண்டில் கொல்கத்தாவில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார் ​​போஸ். தனது வீட்டிலிருந்து ஆங்கிலேயர் கண்ணில் மண் தூவிவிட்டு இரவோடு இரவாக அங்கிருந்து அவர் ஆப்கானிஸ்தானுக்குச் சென்றார், அங்கிருந்து இறுதியில் ஜெர்மனிக்குச் சென்றார்.அங்குதான் அவருக்கு ஹிட்லருடன் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. 


இத்தனைப் பெரிய சம்பவங்கள் கேட்க வியப்பாக இருந்தாலும் அவை வெறும் கேக்குக்கான ஐசிங் மட்டுமே. அதன் பிறகுதான் 1943ல், அவர் ஆசாத் ஹிந்த் ஃபௌஜ் (INA) ஐ உருவாக்கினார். அதே ஆண்டு அக்டோபரில் அவர் சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசாங்கத்தை வெளிநாட்டில் உருவாக்கினார். INA இராணுவ நடவடிக்கையை பல்வேறு நகரங்களில் குறிப்பாக இம்பால், கோஹிமா மற்றும் பர்மாவில் மிகவும் பிரபலமானது. ஆனால் போர் முடிவடைவதற்கு சில மாதங்களுக்கு முன்பே INA களைக்கப்பட்டது. 


அதே சமயம் வெளிநாடுகளில் தஞ்சம் பெற்றிருந்த நேதாஜியின் நிலை உறுதியற்றதாக இருந்தது. பிரிட்டனுக்கு எதிராக அவர் போரில் ஈடுபட்டது பிரிட்டன் உலகப்போரில் வெற்றி பெற்றதை அடுத்து சர்ச்சைக்குரிய விஷயமாக இருந்தது. ஆனால் அவருக்கு என்ன என்பதை முடிவு செய்வதற்கு முன்பே அவரது நிலை வேறு மாதிரியாக முடிந்தது.செப்டம்பர் 1945 இல் தைவான் அருகே விமான விபத்தில் அவர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.அதன் பிறகு இந்தியாவில் பலர் அவரது மரணம் பற்றிய செய்திகளை நம்ப மறுத்துவிட்டனர்;இன்றளவும் அவரது மரணத்தை யாரும் நம்பவில்லை.தேசத்தின் நாயகனாக வலம்வந்த ‘நேதாஜிக்கு இது ஒரு வினோதமான,  நியாயமற்ற மரணமாகவே இருந்ததாக இன்றும் பலர் கருதுகின்றனர். 


தேசத்துரோகம், கொலை, அரசர்கள்-பேரரசர்களுக்கு எதிராகச் சட்ட விரோதமாக போரில் ஈடுபடுதல் ஆகிய குற்றச்சாட்டின் பேரில் சிலருக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கைகளைத் தொடங்க ஆங்கிலேயர்கள் முடிவு செய்தபோது, சுபாஷ் சந்திரபோஸின் மரணத்தில் இருந்து நாடு இன்னும் மீளாமல் இருந்தது. இந்திய கப்பற்படைக் கலகம் ஏன் ஒரு குழப்பமான சூழலுக்குத் தள்ளப்பட்டது என்பதை இதன் ஒரு பகுதியாக விளக்கலாம். 


இந்திய தேசிய ராணுவம் களைக்கப்பட்டது இந்திய கப்பற்படையில் வேலைநிறுத்தத்துக்கான ஊக்கியாக இருந்தது. இந்திய கடற்படை கலகம் உருவானது இப்படித்தான்.இந்தியாவின் முன்னணி வரலாற்றாசிரியர்களில் ஒருவரான சுமித் சர்க்கார் எழுதியது போல், கடற்படைக் கலகம், 'நமது சுதந்திரப் போராட்டத்தில் மிகவும் உண்மையானதொரு வீரம் மிக்க பகுதி. பெரும்பாலும் மறக்கப்பட்ட அத்தியாயங்களில் இது ஒன்றாகும்' என்பதில் துளியும் சந்தேகமில்லை என்கிறார். 


அவர்கள் செய்தது என்ன?, 'எங்கள் வேலைநிறுத்தம் நமது தேசத்தின் வாழ்வில் ஒரு வரலாற்று நிகழ்வாகும். முதன்முறையாக சேவையில் ஈடுபடும் ஆண்களின் ரத்தமும் மற்றும் தெருக்களில் உள்ள ஆண்களின் ரத்தமும் பொதுவான ஒரே காரணத்துக்காக ஒன்றாகப் பாய்ந்தது எனலாம். தேச சேவையில் உள்ள நாங்கள் இதை ஒருபோதும் மறக்க மாட்டோம். எங்கள் சகோதர சகோதரிகளாகிய நீங்களும் மறக்க மாட்டீர்கள் என்பதையும் நாங்கள் அறிவோம். எங்கள் இந்தியப்  பெருமக்கள் வாழ்க! ஜெய் ஹிந்த்!’ என அவர்கள் முழங்கினர். 


படையில் சேர்க்கப்பட்ட மாலுமிகளுக்கு நிறைய குறைகள் இருந்தன.நல்ல  ஒழுக்கமான சம்பளம், முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள், நல்ல உணவு மற்றும் தேசத்தின் பாதுகாப்பில் அவர்களுக்கு  நிலையான வேலை போன்ற தவறான வாக்குறுதிகளின் கீழ் அவர்கள் படையில் சேர்க்கப்பட்டிருந்தனர். ஆனால் அவர்களுக்குக் கிடைத்தது என்னவோ அழுகிய உணவு, மோசமான பணிச்சூழல், மற்றும் இனரீதியான அவமானங்களை நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளச் சொல்லி பழக்கப்படுத்தப்பட்டனர். இந்தியக்குடிகள் சுயமாகச் சிந்திக்கும் திறனற்றவர்கள் என ஆங்கிலேய அரசு நினைத்திருந்தது.


ஆனால் அதற்கு முரணாக கிளர்ச்சியாளர்களின் கோரிக்கைகளைப் பிரதிநிதுத்துவப்படுத்தும் சிந்தனைகள் இருந்தன எனலாம். உலகப்போரின் மூடிவில் ஆண்கள் மீண்டும் அவர்களது ஊர்களுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்கள். அங்கே அவர்களுக்கான வேலைவாய்ப்பு என்பது குறைவாக இருந்தது. மற்றொருபக்கம் இந்தோனேசியாவில் அமர்த்தப்பட்டிருந்த சில படைவீரர்களுக்கு எதிராக டச்சு ராணுவம் இருந்தது. ஜப்பானிய காலனிய ஆதிக்கத்தை மறுசீரமைத்து அங்கே ஆங்கிலேய ஆட்சியைக் கொண்டுவர அவர்கள் முணைப்புடன் இருந்தார்கள். இவை அத்தனைக்கும் மேலாக பிரிட்டிஷ் படையினர் மற்றும் இந்தியப் மாலுமிகள் நடத்தப்படும் விதத்தில் மலையளவு வித்தியாசம் இருந்தது.


18 பிப்ரவரி அன்று தல்வார் என்னும் கப்பல் இந்திய மாநகரங்களில் காட்சிப் படுத்துவதாக முடிவுசெய்யப்பட்டது. அதன் தலைவர் ஒரு ஆங்கிலேயர் இந்தியர்களை வன்மமாகத் தூற்றுவதற்குப் பெயர் போனவர். அவர்மீது பல புகார்கள் இருந்தன. அவர் இந்தியர்களை தகாத சொற்களால் அழைத்தார். 
ஆனால் 1945ல் ஒரு டிசம்பர் அதிகாலையில் கப்பலின் வெளியே உள்ள பிரிட்டிஷ் அதிகாரிகள் அணிவகுப்பு மைதானத்தில் 'வெள்ளையனே வெளியேறு', 'கிளர்ச்சி' போன்ற சொற்கள் ஸ்ப்ரே பெயிண்ட் கொண்டு எழுதப்பட்டிருந்தன. இதைச் செய்தது தந்தி நிபுணரான பலாய் சந்த் என பின்னர் தெரிய வந்தது. இவர் ஐந்தாண்டுகள் கடற்படையில் பணியாற்றியவர். மூத்த தந்தி நிபுணரான பாலாய் சந்த் தத்தின் வேலைதான் இது எனத் தீர்மானிக்கப்பட்டது, மேலும் அவரது வெளியிட்ட நினைவுக்குறிப்புகளிலும் இந்தியர்களின் மிக முக்கிய எதிர்ப்புகளில் ஒன்றாக இது பதிவு செய்யப்பட்டுள்ளது.


 


பிரமோத் கபூர்,இந்த RIN கலகம் பற்றிய புத்தகம் இந்த கட்டுரையை எழுதும் போது வெளியிடப்படுகிறது, இது தன்னிச்சையான எழுச்சியாக இருந்தாலும், கலகக்காரர்கள் கிளர்ச்சியைத் தூண்டும் நோக்கத்துடன் செயல்பட்டனர் என்பது போன்ற அறியப்படாத சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.உதாரணத்துக்கு குழுவில் இருந்த இளம் பத்திரிகையாளரான குசும் நாயர் 17 பிப்ரவரி அன்று இரவு அளிக்கப்பட்ட பருப்பில் கற்களை வைத்தார். அது பிரச்னைக்குக் காரணமாக இருந்தது. சாதாரணமான நாட்களில் பருப்பில் இருக்கும் கற்களை கவனப்படுத்த அவரது இந்த செயல் காரணமாக இருந்தது.  



அதன்பிறகு அதிருப்தி எவ்வளவு பரவலாக இருந்தது என்பது தெளிவாகியது: மூன்று நாட்களுக்குள், வேலைநிறுத்தத்தின் உச்சத்தில் கிளர்ச்சி 75 கப்பல்கள், 20 கரையோர நிறுவனங்கள் மற்றும் 26 வயதுக்குட்பட்ட 20,000 மாலுமிகளிடம் பரவியது. அதிகாரிகள் இதனை மூடிமறைத்து வலுக்கட்டாயமாக பேரரசுக்கு பதிலளிக்க முனைந்தனர், குறிப்பாக, இந்தியாவின் வைஸ்ராய் பீல்ட் மார்ஷல் வேவல், பிரதமர் கிளமெண்ட் அட்லிக்கு  அனுப்பிய தந்தியில் தேவைப்பட்டால் கடற்படையை அழிக்கக் கூடத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். 


கடற்படை வேலைநிறுத்தக் குழுவின் அழைப்புக்கு உற்சாகத்துடன் பதிலளித்த தொழிலாளர்கள் மற்றும் பம்பாய் குடியிருப்பாளர்களிடமிருந்து பெறப்பட்ட ஆதரவுக்கு பரவலான வரவேற்பு இருந்தது. அன்றைய இரண்டு முக்கிய அரசியல் கட்சிகளான காங்கிரஸோ அல்லது முஸ்லீம் லீக்கோ வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக இல்லை. என்றாலும்,  சாதாரண மக்கள் ஆதரவு அளித்தனர். வேலைநிறுத்தம் நாடு முழுவதும் உள்ள கடற்படை நிறுவனங்களுக்கும் பரவியது, கராச்சியில் HMIS ஹிந்துஸ்தான் கிளர்ச்சி துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு அடக்கப்பட்டது.


இந்த மோதலில் சுமார் 400 பேர் கொல்லப்படுவார்கள். ஆனாலும், இத்தனைக்கும் பிறகு, வேலைநிறுத்தம் பிப்ரவரி 23 அன்று முடிவுக்கு வந்தது. வன்முறைக்கு எதிராக குறைந்தபட்சம் கொள்கை ரீதியான நிலைப்பாட்டை எடுத்த காந்தி, படையினரை தங்கள் ஆயுதங்களைக் கைவிடும்படி வற்புறுத்தினார் என்பது நியாயமாக எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே. ஆயினும்கூட, கடற்படைக் கலகத்தின் வரலாற்றில் மற்ற முக்கிய அரசியல் பிரமுகர்களின் நிலைப்பாடு ஆய்வுக்கு உட்பட்டது. நேரு மாலுமிகளுக்கு தனது ஆதரவை அளிக்க  விரும்பியதாகக் கூறப்படுகிறது, ஆனால் வேலைநிறுத்தக் குழு உறுப்பினர்களுடன் உரையாடுவதற்கும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் காங்கிரஸால் அங்கீகரிக்கப்பட்ட படேல், நேருவை அதிலிருந்து விலக்கியதாகக் கருதப்படுகிறது. அவர்களின் குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என்றும், அவர்கள் சரணடைந்தால் அவர்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்றும் படேல் உறுதியளித்ததன் பேரில், படையினர்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றதாகக் கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் 
 மாலுமிகள் சிறையில் அடைக்கப்பட்டனர், முகாம்களில் வைக்கப்பட்டனர், கடந்த கால நிலுவைத் தொகைத் தரப்படாமல் பணிநீக்கம் செய்யப்பட்டனர் மற்றும் அவர்களது கிராமங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். படேல் என்கிற பிம்பத்தை நாயகனாக்கவே இந்த போராட்டம் திரும்பப்பெறப்பட்டதாகச் சித்தரிக்கப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.


 


தமிழில்: ஐஷ்வர்யா