77 ஆண்டுகளுக்கு முன்பாக இதேநாளில் ஜப்பானின் நாகசாகியின் மீது அணு குண்டை வீசி அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதல் தொடர்பாக பல எச்சரிக்கைகள் வந்தன. எனினும் ஜப்பான் நாட்டை அமெரிக்க படைகள் நீண்ட நாட்களாக தாக்கி வந்தன. அதனால் இந்த அளவிற்கு பெரிய தாக்குதல் நடைபெறும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. அமெரிக்காவின் இரண்டு பி-29 ரக விமானங்கள் சரியாக காலை 9.50 மணிக்கு கோகுரா பகுதியின் மேல் குண்டு வீச தயாராக இருந்தது. இருப்பினும் அந்தப் பகுதியில் மேக மூட்டம் கடுமையாக இருந்தது. 


இதன்காரணமாக அமெரிக்க படைகள் நாகசாகியை நோக்கி பயணம் செய்தன. அங்கும் மேக மூட்டம் அதிகமாக இருந்தது. எனினும் காலை 11.02 மணிக்கு சரியாக அமெரிக்க படைகள் ஃபேட் பாய் என்ற அணு குண்டை சரியாக நாகசாகியின் மீது வீசின. அந்த குண்டு வெடித்த சில நிமிடங்களில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். அடுத்த நான்கு-ஐந்து மாதங்களில் காயம் காரணமாக மேலும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். குண்டு வீசப்பட்ட ஒராண்டில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர். இந்த குண்டு வீசப்பட்ட இடத்திலிருந்து சுமார் 2.5 கிலோ மீட்டர் தூரம் வரை அனைத்து பகுதிகளும் முற்றிலும் சேதம் அடைந்தன. 


 


இந்த தாக்குதலை தொடர்ந்து அடுத்த மூன்று நாட்களில் ஹிரோஷிமா மீதும் மேலும் ஒரு அணு குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தத் தாக்குதலிலும் பல்வேறு நபர்கள் உயிரிழந்தனர். அத்துடன் பெரியளவில் பொருட்சேதம் ஏற்பட்டது.


அமெரிக்க ராணுவ அதிகாரி அப்போது கூறுகையில், “மொத்த ஜப்பான் மக்களும் அமெரிக்காவின் இலக்காக இருந்தனர்” எனத் தெரிவித்தார். இந்த தாக்குதலை பலரும் முழுமையான போர் என்ற கோணத்தில் ஆதரித்து வந்தனர். அதிலும் குறிப்பாக இந்த தாக்குதல் நடத்தப்பட்ட 75 ஆண்டுகளுக்கு பிறகு 2015ஆம் ஆண்டு ப்யூ செண்டர் ஒரு கருத்துகணிப்பை நடத்தியது. அதில் 56 சதவிகிதம் அமெரிக்கர்கள் இந்த அணுகுண்டு தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.  


மேலும் அமெரிக்கா அவ்வாறு அணுகுண்டு தாக்குதல் நடத்தவில்லை என்றால் அமெரிக்கர்கள் நிலம் வழியாக தாக்குதல் நடத்தியிருக்க வேண்டும். அதில் பல அமெரிக்க வீரர்கள் உயிரிழந்திருப்பார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. ஆகஸ்ட் 11ஆம் தேதி இந்த தாக்குதல் தொடர்பாக பேசிய அப்போதைய அமெரிக்க அதிபர் ட்ரூமென், ஜப்பான் நாட்டு மக்களின் உயிர்கள் மீது எந்தவித அக்கறையும் காட்டவில்லை என்று தெரிவித்தார்.


என்னை பொறுத்தவரை அமெரிக்கா ஜப்பான் மீது அணு குண்டு தாக்குதல் நடத்தியது, ஜப்பான் நாட்டை மட்டும் தாக்குவதற்காக இல்லை. அது ஜப்பான் உடன் சேர்ந்து சோவியத் ஒன்றியத்தையும் பயமுறுத்த செய்யப்பட்ட தாக்குதலில் ஒன்று. ஏனென்றால் சோவியத் ஒன்றியம் தன்னுடைய கம்யூனிஸ கொள்கைகளை பல்வேறு நாடுகளுக்கு பரப்பி வந்தது. அதை தடுக்க அமெரிக்கா இந்த அணுகுண்டு தாக்குதலை ஆயுதமாக எடுத்தது. இந்த தாக்குதல் மூலம் இரண்டு நாடுகளுக்கும் பாடம் புகட்ட நினைத்தது. இந்த இரண்டு நாடுகளையும் அச்சுறுத்த நடத்தப்பட்ட தாக்குதல்தான் இது. இந்த நாகசாகி குற்றத்தை தெளிவாக புரிந்து கொள்ள இன்னும் பல ஆண்டுகள் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 


பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையின் கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் கருத்துகளாகும். இதற்கும் ஏபிபி நாடுவிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.